Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

வேங்கடம் முதல் குமரி வரை 5
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்


 



வேங்கடம் முதல்

குமரி வரை

(ஐந்தாம் பாகம்)

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

கலைஞன் பதிப்பகம்

10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்

சென்னை - 600017

Rs. 35.00

VENKATAM MUTHAL KUMARI VARAI

by

Tho. mu. BASAKARA TONDAIMAN

First Edition : 1999

Published by

KALAIGNAN PATHIPAGAM

10 Kannadhaseo Salai

T Nagar, Chennai - 600 017

Typeset at

Skill Computers Cheansi - 600 018

Printed at

Sakthi Printers Chennai - 21

முன்னுரை

ரா. ஜகத்ரட்சகன்

கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே 'பாலாற்றின் மருங்கிலே', 'காவிரிக் கரையிலே', 'பொன்னியின் மடியிலே', 'பொருநைத் துறையிலே' ஆகும். இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே இக்கட்டுரைகள் பெற்ற பெரும் வரவேற்பைக் காட்டும். இந்நூலிலே இரு நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டுக் கோயில்களை, கலை வளங்களை நமக்குக் காட்டிய பாஸ்கரத் தொண்டைமான், 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற நூலிலே வட இந்தியாவின் பகுதிகளில் உள்ள கோயில்களைப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். இவற்றைப் படித்த பலருக்கு அக்கோயில்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவற்றையே கையேடுகளாகக் கொண்டு சென்ற 45 ஆண்டுகளாக தல யாத்திரை செய்து வருபவன் நான்.

பார்த்ததை பார்த்தபடியே விவரிக்கும் அவருடைய நடை சுவையானது. நேரில் பேசுவதைப் போன்ற அனுபவத்தை அது தோற்றுவிக்கும். அனைத்துத் தலங்களுக்கும் நேரிலே சென்று, கண்டு, ரசித்து, மகிழ்ந்து புகைப்படத்துடன் அக்கலைச் செல்வங்களை தன் சொற்களால் விவரித்த பாணி அனைவரையும் சுவர்ந்தது. கல்லாலும், உலோகத்தாலும் ஆன இறைவனின் திருமேனியை, அணிகலன்களையும் புஷ்பங்களையும் இட்டு மறைக்காமல், அவை இருக்கும் வண்ணத்திலேயே கண்டு ரசித்து அவர் புகைப்படம் எடுத்ததே ஒரு தனி வரலாறு. புகைப்படக் கலை இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில், டார்ச்லைட், சாக்பீஸ் பவுடர், தகரத்தகடுகள் (சூரிய ஒளியை சிலையின் மீது பாய்ச்ச ) போன்ற உபகரணங்களோடு அவர் புகைப்படம் எடுத்த பாங்கு சிற்பக்கலைபால் அவர் கொண்டிருந்த தணியாத தாகத்திற்கு சான்றாக அமையும். அவருடைய கட்டுரைகள் வெறும் தலபுராணம் அல்ல. அவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியச் சுவை மிகுந்தவை. பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வதைப் போல, திரு. தொண்டைமான் அவர்களால் எழுதப்பட்ட தலங்கள் என்றும் கூறலாம். 'வேங்கடம் முதல் குமரி வரை' ஐந்தாம் பாகமாக வெளிவரும் இந்நூலில் பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கேரளக் கோயில்களில் சில இதில் இடம் பெற்றுள்ளன. 'நவ தாண்டவம்' என்ற அவரது கட்டுரையில் தாண்டவங்களின் வகைகள், அவை காணப்படும் ஊர்கள் பற்றிய விவரங்கள் படித்து இன்புறத்தக்கவை. அது மட்டுமல்லாமல் நேரில் கண்டும் மகிழத் தக்கவை.

கோயில்களும், சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. அது போன்றே அவர் சொல்லால் அமைத்த காவியங்களும் காலத்தால் அழியாது. ரஸிகமணி டி. கே. சியை 'தாடியில்லாத தாகூர்' என்று கூறுவர். அதுபோன்றே தொண்டைமானை 'தமிழ்நாட்டின் ஆனந்தகுமாரசுவாமி' என்றால் மிகையாகாது.

இந்நூலை எனது ஊரைச் சார்ந்தவரும், பள்ளித் தோழருமான அருமை நண்பர் திரு. G. மாசிலாமணி அவர்களின் செல்வன் திரு. M. நந்தா அவர்கள் வெளியிடுவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி.

சென்னை

ரா. ஜகத்ரட்சகன்.

விளக்கமும் நன்றியும்

எங்கள் தந்தையார், திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைப் பற்றி, நான் வாசகர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ணாபுரம் என்ற முதல் கட்டுரையைத் தொடர்ந்து, கோயில்கள் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும், தொடராக எழுத முனைந்தது கல்கி பத்திரிகையில் தான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில், கல்கி ஆசிரியர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய கட்டுரைகள் கல்கியில் தொடர்ந்து வெளி வர ஆரம்பித்தன, காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியர் தொண்டைமானவர்களை அழைத்து வரச்சொல்லி, தமிழ் நாட்டிலுள்ள, முக்கியமான 108 கோயில்களைத் தேர்ந்தெடுத்து எழுதும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி முடித்த போதோ, எண்ணிக்கையில் அவை 200ஐத் தாண்டிவிட்டன. அப்போது பரமாச்சாரியார் அவர்களைப் போய்த் தரிசித்த தொண்டைமானவர்களை, பெரியவாள் பெரிதும் பாராட்டி, இந்தக் கோயில்களை யெல்லாம் எழுதாமல் விட முடியாதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, ஒரு வித்வத் சதஸைக் கூட்டி, பொன்னாடை போர்த்தி, 'கலைமணி' என்ற பட்டத்தையும் சூட்டி கௌரவித்திருக்கிறார். இதைத் தந்தையாரவர்கள் பெருமையுடன் கூறிப் பெருமிதம் அடைவார்கள். தமிழ் நாட்டுக் கோயில்களின் எண்ணிக்கை 214க்குள் அடங்கி விடுமா என்ன? எழுதப்படாமல் விடுபட்டுப் போன கோயில்கள் எண்ணிறந்தவை இருப்பது தெரியவந்தது. அந்தக் கோயில்களுக்கும் சென்று, அதற்கான கட்டுரைகளை அவ்வப்போது, தினமணி சுடர் போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது தேடினால் பெரும்பாலானவை கிட்டவேயில்லை. ஆகவே, கிடைத்த 19 கட்டுரைகளை மட்டும் தொகுத்து, வேங்கடம் முதல் குமரி வரை தொகுப்பின் ஐந்தாம் பாகமாக வெளியிட ஆசைப்பட்டேன், அன்பர்கள் பலரும் ஐந்தாம் பாகம் எப்போது வருகிறது? என்று கேட்டுக் கொண்டே இருக் கிறார்கள். அந்த ஐந்தாம் பாகத்தை வெளியிட இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது. குருவாயூரப்பன், கொடுங்கோளூர் பகவதி, அஞ்சைக்களத்து அப்பன் ஆகிய கோயில்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், தென்னகத்துக் கோயில்கள் தாமே? ஆகவே அந்தக் கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன - மலையாளக் கரையோரமுள்ள கோயில்கள் பற்றியும் ஆந்திரத்துக் கோயில்கள் பற்றியும் எழுத வேண்டு மென்று தந்தையார் எண்ணியிருந்தார்கள். ஆனால் அதற்குள் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான் அப்படி எழுதியிருந்தால் மேலும் இரண்டு சுவையான தொகுப்புக்கள், தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும். இப்போதைக்கு, 'வேங்கடம் முதல் குமரி வரை' - 'வேங்கடத்துக்கு அப்பால்' இவற்றோடு மன நிறைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

தொண்டைமானவர்களைப் பற்றி, அவர்களுடன் நெருங்கிப்பழகிய இருவருடைய உரைகள் இந்த நூலை அணி செய்கின்றன, திரு.ஜி.ஸி. பட்டாபிராம் அவர்கள் தந்தையாரின் உழுவல் அன்பர் - பெரிய தொழிலதிபராக இருந்த போதிலும், கோயில்கள், கலைகள் இவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தந்தையாருடன் சேர்ந்தும், தனித்தும் பல கோயில்களுக்குப் போய் வந்தவர். அதைப் பற்றி முடிந்த போதெல்லாம், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பட்டாபி என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த நல்ல நண்பர், "நண்பர் பாஸ்கரனை“ பற்றிய தம்முடைய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். முன்னுரை எழுதியுள்ள திரு. ஜகத்ரட்சகனை தொண்டைமானின் தொண்டர் என்றே சொல்லலாம். ரசிகர், சீடர் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும். தொண்டைமானவர்களுடைய நூல்களைக் கையேடாகக் கொண்டு, நண்பர் குழாத்துடன் கோயில் கோயிலாக ஏறி இறங்கியிருப்பவர். இந்தக் கட்டுரைகள் நூலாக வருவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். அவர் நல்லதொரு முன்னுரையை வழங்கியிருக்கிறார் - இவர்கள் இருவரைத் தவிர மற்றொரு முக்கியமான நபரும் இருக்கிறார். அவர்தாம், வித்வான் திரு ல. சண்முக சுந்தரம். ரசிகமணி டிகேசி அவர்களின் அன்புக்குப் பாத்திரமான சீடர். சிறந்த பேச்சாளர், தொண்டைமான் அவர்களுடைய வெளியிடப்படாத நூல்கள் வெளியிடப்படுவதற்கு, மிகுந்த அக்கறை காட்டி, கலைஞன் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு, நூல்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் செயல்படுகிறவர்.

இந்த நூலை, கலைஞன் பதிப்பக நூலாகக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர், பதிப்பகத்தின் நிர்வாகி, திரு. நந்தன் அவர்கள். இளைஞராக இருந்த போதிலும், உழைப்பும் உறுதியும் நிரம்பியவர். அவருடைய ஒத்துழைப்புடன், இந்த ஐந்தாம் பாகத்தை மிகுந்த அன்புடன் வழங்க முன்வந்திருக்கிறோம். முடிந்த வரை அந்தக் கட்டுரைகளுக்கான படங்களையும் தேடிப் பிடித்து இணைத்திருக்கிறோம் - மேற்கூறிய நால்வருக்கும் நாங்கள் நன்றி பாராட்டப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் - தொண்டைமானவர்களுடைய பிற நூல்களும் தொடர்ந்து கலைஞன் பதிப்பக வெளியீடாக உங்களை வந்தடையும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை வேண்டுமென்று, பேராசிரியர் டாக்டர் திரு. கு. அருணாசலக்கவுண்டர் அவர்களைக் கேட்டிருந்தேன் . அவர்களும் எழுதியனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்' - தொண்டைமானவர்களுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் உள்ளவர். தொண்டைமானவர்களின் மணிவிழாவை முன்னின்று நடத்தியவர் - உடல் நிலை காரணமாக, அணிந்துரையை உரிய காலத்தில் எழுதியனுப்ப முடியாது போய்விட்டது. தமது 97-வது அகவையில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினரால் அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு மாத காலத்துக்குள் இறைவனடி சேர்ந்து விட்டார். அந்தப் பேராசிரியருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதில் மன நிறைவு பெறுகிறோம்.

ராஜேஸ்வரி நடராஜன்

சரோஜினி சுப்பிரமணியம்

பாஸ்கர நிலையம்

7 வது குறுக்குத் தெரு

சாஸ்திரி நகர்

சென்னை - 20.

நண்பர் பாஸ்கரன்

(ஜி.ஸி. பட்டாபிராம்)

நண்பர் பாஸ்கரன் என்னுடைய நீண்ட நாளைய நண்பர், தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து போயிருக்கிறோம். நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறோம். தமிழ்நாட்டில் இவர் போகாத கோயிலே கிடையாது. காரில் போக முடியாவிட்டால் ஜீப்பில் போவார். அதிலும் போகமுடியாவிட்டால் நடந்தே செல்வார். கோனேரி ராஜபுரம் நடராஜரைப் பற்றியும், ஆக்கூர் ஆயிரத்திலொருவரைப் பற்றியும், அனந்த மங்கலம் விஸ்வரூப அனுமனைப் பற்றியும், பெரும்பள்ளம் வீணாதர பிக்ஷாடனரைப் பற்றியும் இதுவரை யாருக்குத் தெரியும்? இவர் கட்டுரைகளைப் படித்து, அவ்வூர்கள் எங்கிருக்கின்றன என்று விசாரித்து, அந்த அற்புதமான விக்ரகங்களைப் பார்த்து பரவசப்பட்டார்கள் கலா ரசிகர்கள். தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அழகிய கட்டுரைகளை கல்கியில் தொடர்ந்து எழுதினார். இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கோயிலின் மகிமை, அக்கோயில் சிற்பங்களின் அழகு, அந்த ஊரைப் பற்றிய சில சாஸனங்கள் எல்லாவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். அவற்றைத் தொகுத்து, நான்கு புத்தகங்களாக, வேங்கடம் முதல் குமரி வரை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவை ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்களால் பாடப்பட்ட கோயில்களைப் போல், பாஸ்கரனால் எழுதப்பட்ட கோயில்கள் என்று ஒரு தொகுப்பே ஏற்படலாம், நண்பர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தமாஷாக, தென்னாட்டுத் தெய்வங்களெல்லாம் இவரது இல்லமாகிய சித்ர கூடத்தில் 'க்யூ' வரிசையில் நின்று தங்கள் கோயில்களைப் பற்றி எழுதும்படி வேண்டி நிற்கிறது என்று அடிக்கடி சொல்வார். சுந்தரர் கனவில் தோன்றி, தன்னைப் பாடும்படி சொன்ன தெய்வங்கள், பாஸ்கரன் வீட்டில் காத்துக் கிடக்க நேரிட்டது என்றால் அது பெறற்கரிய பேறு தானே?

நண்பருடைய இந்தக் கலையார்வத்தினால் தஞ்சையில் அவர் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய போது, அங்கு காட்டிலும், மேட்டிலும், குளத்திலும், குளக் கரையிலும் கேட்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அவற்றையெல்லாம் எடுத்து வந்து குறைந்த செலவில் அழகுபட அமைத்து, தஞ்சைக் கலைக் கூடத்தை சிருஷ்டித்து அதற்கு பிர்மா ஆனார். எனது நண்டர், ஓய்வு பெற்ற, புதைபொருள் இலாகா முதல்வர் திரு ராமச்சந்திரன், இதன் மதிப்பை (அப்போதைய மதிப்பு,.. இப்போது?) மூன்று கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார். மதிப்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரே. ஆனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள இதனைச் சிருஷ்டிக்க இவர் செலவு செய்ததெல்லாம் சில ஆயிரம் ரூபாய்களே. ஒரு வேளை வியாபாரியாக இருந்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதித்திருப்பார்! தமிழ் நாடு முழுவதுமே இந்தப் பணிக்காக இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது -

இப்படி, தமிழ் நாட்டில் இவர் செய்திருக்கிற தொண்டு ஏட்டில் அடங்காது. இவர் நல்ல தமிழ் அறிஞர். ஆனாலும் மற்ற தமிழ் அறிஞர்களைப் போல் அல்லாது இந்தியப் பண்பாடு ஒன்றே என்று நினைப்பவர், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தமிழர்களுக்கு விளக்குவதற்காகவே, தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இரு நண்பர்களுடன், இந்தியா முழுவதும் காரிலேயே சென்று இந்தியப் பண்பாட்டைக் கண்டார். வட நாட்டில், தில்லி, பம்பாய் முதலிய இடங்களில் வெகு அழகாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பல பேச்சுக்களில் விளக்கினார். வடநாட்டுக் கோயில்களையும், கலைகளையும் தமிழர்கள் எல்லோரும் அறிய வேண்டுமென்று, கல்கியில் "வேங்கடத்துக்கு அப்பால் என்ற கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார்.

நண்பர் பாஸ்கரன், ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சிஷ்யர், ஏன், இவரும் ஜட்ஜ் மகராஜனும் டிகேசியின் இரு வாரிசுகள் என்றே சொல்லலாம். அவர் செய்த தமிழ்ப்பணியை இருவருமே தொடர்ந்து செய்தார்கள். பாஸ்கரன் தனக்கென ஒரு பேசும் பாணியை உருவாக்கிக் கொண்டார். நடை வேறு, பாணி வேறு. ஆகையால் ரசிகமணியிடம் தொடர்பு கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இவரது பேச்சுக்களை ரசிக்க முடிகிறது. இவரது பேச்சுக்களில் புதுமையைக் காண முடிகிறது. - இவர் ரசிகமணியின் நிழலாகத் தென்படுவதில்லை.

கம்பரைப் பற்றியோ, ஆழ்வார்கள், நாயன்மார்களைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியோ அல்லது கலைகள், சிற்பங்கள் பற்றியோ இவர் பேசினால் பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள், இவரது நடை, பண்டிதர்கள் நடையைப் போல் கடினமானதல்ல. தான் பேசுவது எல்லோருக்கும் புரிய வேண்டுமென்று நினைத்து வெகு அழகாகப் பேசுவார். எது பேசவேண்டும் என்றும், எப்படிப் பேசவேண்டும் என்றும் சிந்தித்துப் பேசுவார். ஆகையால் இவர் பேச்சுக்கள் எல்லோர் மனதையும் கவர்கிறது.

மார்கழி மாதம், திருப்பாவையைப் பற்றியும், திருவெம்பாவையைப் பற்றியும் தினமும் இவரது சொற்பொழிவுகள் தமிழ் நாடு முழுவதும் இருக்கும். வானொலியில் எத்தனை தரம் பேசியிருக்கிறோம் என்பது இவருக்கே நினைவிருக்காது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையைப் பற்றியும், கலையைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும் பேசி இருக்கிறார். அந்த இருபத்தைந்து வருஷங்களில் இவர் போகாத கம்பர் விழாவே கிடையாது. பட்டி மண்டபம் நடக்கிறதென்றால் அதற்குத் தலைவர் இவர்தான். எங்கு தமிழ் விழா என்றாலும் இவரை முதலில் பார்க்கலாம். கலையைப் பற்றி தைரியமாக முதலில் தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி எழுதியவர் இவரே.

இவ்வளவு சொல்கிறீர்களே, இவர் கலெக்டராக இருந்து பணி செய்ததைப் பற்றி எழுதவில்லையே என்று நினைக்க வேண்டாம். நேர்மையும், திறமையும், சாமர்த்தியமும் இல்லாவிட்டால், கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, கலெக்டராக ஓய்வு பெற முடியாது. அப்பணியையும் செவ்வனே செய்து, ஆங்கில ஆட்சியில் இருந்த ஐ.ஏ.ஏஸ் கலெக்டர்களெல்லாம் மெச்சும்படி வேலை செய்திருக்கிறார். இவர் வேலூரில் கலெக்டராக இருந்த போது, தைரியமாக, 'அன்றும் இன்றும் என்று ஒரு நாடகத்தை எழுதி, அதை அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில் நடித்து, அரங்கேற்றிக் காட்டி முதல் வரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்?

பொருளடக்கம்

1. ஸ்ரீமுஷ்ணத்து பூவராகன்

15

2. திருவலத்து வல்ல நாதர்

25

3. குடந்தைக் கீழ்க் கோட்டம்

33

4. திரிபுவனச் சிற்பங்கள்

37

5. திருக்கண்ணமங்கை

43

6. எண்ணாயிரம்

51

7. செவி சாய்த்த விநாயகர்

59

8. வேலுக் குறிச்சி வேட்டுவன்

63

9. தமிழ் நாட்டின் அஜந்தா

71

10. நவ திருப்பதி

77

11. அருக்கன் குளத்து காட்டு ராமர் கோயில்

87

12. பெருங்குளத்து மாயக் கூத்தர்

91

13. திருமலை முருகன்

97

14. அஞ்சைக் களத்து அப்பன்

106

15. கொடுங்கோளுர் பகவதி

114

16. குருவாயூரப்பன்

121

17. நாகசாயி மந்திர்

128

18. நவதாண்டவம்

134

19. ஆலயங்கள் ஏனையா?

141

வேங்கடம் முதல் குமரி வரை

(ஐந்தாம் பாகம்)

1. ஸ்ரீமுஷ்ணத்து பூவராகன்

பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கணக்கிடப்படுவது நாம் வசிக்கும் மண். இந்த மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் சக்திதான் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. மண்ணை வெட்டி, அதற்குள் சில விதைகளைப் போட்டுத் தண்ணீர் ஊற்றினால், மண்ணிலிருந்து செடியும், கொடியும், மரமும், மட்டையும், வெளி வருகிறது, உண்ணும் உணவு அளிக்க நெல் விளைகிறது. இன்னும் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, என்று எண்ணற்ற உணவு தானியங்கள் எல்லாம் வந்து குவிகின்றன. உடுக்க உடை உதவும் பஞ்சும் பருத்தியும் செடிகளில் காய்க்கிறது.

இவை மட்டுமா? பலப்பல வர்ணங்களில் மலர்கள், பலப்பல சுவையுடைய கனிகள் எல்லாம் இந்தச் செடியிலும், கொடியிலும், மரத்திலும் பூத்துக் காய்த்து விடுகின்றன. அத்துணை சக்தியை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலேயே மண்ணையும் தெய்வமாக்கி, பூமாதேவி என்றனர். காத்தற் கடவுளான விஷ்ணுவின் பட்ட மகிஷி என்றும் வணங்கினர் மக்கள்.

இந்த அருமையை எல்லாம் நன்கு உணர்ந்திருக்கிறான். கவிச் சக்ரவர்த்தி கம்பன். பூமாதேவி எனும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்க்கெல்லாம் அருள் புரிய விரைந்து வருகிறாள். அவளது அழகான மேனியிலிருந்தே பச்சைப் பசுங் கதிர்கள் எழுந்து பிரகாசிக்கின்றன. அவள் தன் உண்மை உருவை ஏதோ பூமிக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொண்டு வழிபடுபவர்களுக்கு மட்டும் தன் உண்மை உருவை காட்டுகின்றாள். அப்பூமாதேவியின் அம்சமான சீதா தேவியும் உழுகின்ற கொழுமுகத்தில் தானே உதிக்கிறாள்? யாகம் ஒன்று செய்ய ஜனக மகாராஜன் நிலத்தைப் பண்படுத்தி அதனை உழ, அங்கு சீதாதேவி தோன்றினாள் என்பது வரலாறு. இதைச் சொல்கிறான் கம்பன்.

உழுகின்ற கொழுமுகத்தின்

உதிக்கின்ற கதிரின் ஒளி

பொழிகின்ற புவிமடந்தை

உருவெளிப் பட்டெனப் புணரி

எழுகின்ற தெள்ளமுதோடு

எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி

தொழுகின்ற நன்னலத்துப்

பெண்ணரசி தோன்றினாள்

என்பது பாட்டு. இப்படி அருமையினும் அருமையாகப் பாராட்டப்படுகின்ற பூமாதேவியை அழித்துச் சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத் தானே செய்கிறது. ஒரு கதிர் உதிக்கின்ற இடத்திலே இரண்டு கதிர் உதிக்கச் செய்கின்றவன் உலக வளர்ச்சிக்குத் துணை புரிகின்றவன் என்று பாராட்டுகிறோம்.

ஆனால் இந்த உலகத்தையே சிதைத்து விட அணுகுண்டு பரிசோதனைகளும், மற்ற அக்கிரமங்களும் செய்கின்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இப்படிப்பட்ட அரக்கர்கள் இன்றுதான் இருக்கிறார்கள் என்றில்லை. அன்றும் இருந்திருக்கிறார்கள்.

ஹிரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க பரந்தாமன் பன்றி உருவில் தோன்றிக் கடலுக்குள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். பூமிதேவியை சிறை மீட்டுக் கொண்டு வந்த மூர்த்தியையே பூவராக மூர்த்தி என்கிறோம். இந்த பூவராக மூர்த்தியின் அற்புத வடிவைக் காண நாம் அந்த ஸ்ரீ முஷ்ணத்திற்கே செல்ல வேணும். அத்தலத்திற்கே செல்கிறோம் இன்று.

ஸ்ரீமுஷ்ணம் தென் ஆர்க்காடு மாவட்டத்தின், சிதம்பரம் தாலுகாவில் ஒதுக்குப் புறமாக உள்ள ஊர்.

சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் வழியில், சேத்தியாத் தோப்பு என்ற ஊர்வரை சென்று அதன்பின் தென்மேற்காகச் சென்றால் ஊர்போய்ச் சேரலாம். ரயில் வசதியெல்லாம் கிடையாது. சிதம்பரத்திலிருந்து 26 மைல் தூரத்தில் உள்ளது. சொந்தகார். உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லாவிட்டால் இந்த ஊருக்கு நல்ல பஸ் வசதியும் இருக்கிற காரணத்தால் பஸ்ஸிலேயே சிரமம் இல்லாமல் போகலாம். ஊருக்கு வட புறத்தில் மேற்கே பார்த்த கோயிலில்தான் இந்த பூவராகர் இருக்கிறார்.

வைணவத் தலங்களுக்குள் இத்தலம் சிறப்பானது. சுயம்பு லிங்கம் என்பது போல, சிற்றுளி கொண்டு பொழியப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே இருக்கின்றன. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர்.

வடவேங்கடம் சென்றவர்கள் அறிவார்கள். அங்குள்ள புஷ்கரணியின் மேல் கூரையில் உள்ள ஆழ்வார்களை தரிசித்த பின்னரே வேங்கடவனை தரிசிக்க வேண்டும் என்பதை. அதுபோல இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம், ஆதலால் நாமும் படிகள் ஏறி வேங்கடவனைத் தரிசித்த பின்பே மேல் நடக்கலாம். ராஜகோபுரத்தைக் கடந்ததும் நாம் சேர்வது நூற்றுக்கால் மண்டபம்.

இம்மண்டபத்தின் அடிப்பாகம் நல்ல விரிந்து பரந்திருக்கிறது. இத்தனை அகலமாக கல்லாலேயே மண்டபம் அமைந்திருப்பது அழகாக இருப்பதுடன் ஆச்சர்யப் படத்தக்கதாகவும் இருக்கிறது. இந்நூற்றுக்கால் மண்டபத்திலே நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. ஞான முத்திரை தாங்கி நம்மாழ்வாரது செப்புச்சிலை சிறிதேயானாலும் அழகானது. அவரைத் தரிசித்த பின்னரே, இக்கோயிலின் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட பதினாறு கால் மண்டபம் வந்து சேருவோம். அதனையே புருஷசூக்த மண்டபம் என் கிறார்கள்.

நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயிலைக் கட்டிய நாயக்க மன்னர்கள், அவர்கள் துணைவியர் சிலை எல்லாம் கற்றூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மண்டபத்திற்கு வடபுறம் வேணுகோபாலன் சந்நிதி இருக்கிறது. அங்கு வேணு கோபாலன் ருக்மணி சத்யபாமா சகிதம் சிலை உருவில் நிற்கிறான். பக்கத்திலே நர்த்தன கோபாலனும் நடனம் ஆடிக்கொண்டே இருப்பான். பதினாறுகால் மண்டபத்தைக் கடந்தே பிரதான கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள மகா மண்டபத்தைக் கடந்து, அர்த்த மண்டபம் சென்று, அதன் பின் கருவறையில் உள்ள பூவராகனைத் தரிசிக்க வேணும். கருவறை யின் நடுவிலே பூவராகர் சிலை உருவில் நிற்கிறார்.

இந்த மூர்த்தி சுமார் மூன்றடி உயரமே உள்ளவர். சாளக் கிராமம் என்னும் உயர்ந்த சிலை வடிவினர். இரண்டே திருக்கரங்களுடன் கம்பீரமாக இடுப்பிலே கை வைத்துக் கொண்டு மிடுக்காகவே நிற்கிறார். அப்படி வைத்திருக்கும் கைகளிலே சங்கையும் சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார். உடல் முழுவதும் மேற்கு நோக்கி இருந்தாலும், தெற்கு நோக்கி நிமிர்ந்தே நிற்கிறார். அவர் காலடியிலே ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவிலேயே எழுந்தருளியிருக்கின்றனர்.

இங்கு ஒரு சௌகரியம், இங்குள்ள உற்சவ மூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் கருவறையில் இருந்து மூலவர் திருவடி தரிசனத்துக்கு இடையூறு செய்ய மாட்டார். பூவராக மூர்த்தியின் வடிவு முழுவதையும் கண்ணாரக் கண்டு மகிழலாம். இம்மூர்த்தியின் சிரஸில் ஒரு தங்கக் கீரிடம் இருக்கிறது. சேவார்த்திகள் விரும்பினால் அதனை எடுத்துக் காட்டுவர். அது, கீழே விழுந்து விடாத படி ஒரு தங்கச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் காணலாம்.

இக்கோயிலில் உள்ள உற்சவர் யக்ஞ வராகர். இவர் யக்ஞவராகர் என்று பெயர் பெற்றதற்கு ஒரு வரலாறு உண்டு. நெய்வேலிக்கு அடுத்த வளையமாதேவியில் - கார்த்தியாயன மகரிஷி என்று ஒருவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகள் அம்புஜவல்லி என்ற பெயரோடு. இவளை மணக்க பூவராகன் விரும்புகிறான். அப்போது மகரிஷி பூவராகனை அவரது சுயஉருவில் வந்து மணந்து கொள்ளும்படி வேண்டுகிறார். அந்த முனிவர் நடத்திய வக்ஞத்திலிருந்து தன் சுய உருவோடு எழுந்திருக்கிறார்.

அப்படிப் பரந்தாமன் பூதேவி ஸ்ரீதேவி சகிதனாக எழுந்தவரே யக்ஞ வராகன் என்ற திருதாமத்தோடு அங்கு கருவறையை அடுத்த அந்த ராளத்தில் இருக்கிறார். அணிகளும், பணிகளும் - பட்டாடையும் அணிந்து மேனியழகு முழுவதையும் காட்டாத கோலத்திலேயே தான் அவரைத் தரிசிக்க வேணும், அவர் பக்கலிலேயே சுமார் முக்கால் அடி உயரத்தில், செப்புச்சிலை வடிவத்தில், பூவராகன் வேறே எழுந்தருளியிருக்கிறார். அச் சிறு வடிவினுக்கும் கவசம் அணிவித்து வைத்திருப்பார்கள்.

இந்த யக்ஞவராகர் எனும் உற்சவரே உற்சவ காலங்களில் உலாப் புறப்படுவார். மாசி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேரோட்டம் முடிந்ததும் கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தமாடுவார். இந்த தீர்த்தோத்சவத்தை ஒரு மகம்மதியப் பெரியார் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூலதனத்தைக் கொண்டு, உப்பு வேங்கடராயர் என்ற ராயர் வம்சத்தவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் மகம்மதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார். இன்றும் இப்படி சர்வ சமய சமரச வாதியாக யக்ஞ வராகர் எழுந்தருளுவது மிக மிகச் சிறப்பானதல்லவா?

இந்த யக்ஞவராகர் ஒரு காலத்தில் திப்பு சுல்தானால் களவாடப்பட்டு மறைந்திருக்கிறார். அப்போது புதிதாகச் செய்யப்பட்ட மூர்த்தியே அபிஷேக ஆராதனை ஏற்றிருக்கிறார். யக்ஞ வராகர் திரும்பவும் தன் யதாஸ்தானத்துக்கு வந்த போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டவர் போக நாராயணன் என்ற பெயரோடு கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறார். இந்த போக நாராயணனே, சாதாரண நாட்களில் பஞ்ச பர்வ உற்சவங்களை ஏற்றுக் கொள்கிறார்.

பூவராகனை, யக்ஞவராகனை, போக நாராயணனை எல்லாம் தரிசித்து வெளியே வந்து, தென்பக்கம் கிழக்கே பார்த்த தனிக் கோயிலில் இருக்கும் தாயாரையும் வணங்கலாம். அவள் அருளையும் பெற்று, கோவில் பிராகாரத்தில் ஒரு சுற்று சுற்றினால் அங்கு வடபுறம் ஒரு சிறு சந்நிதி இருக்கும். அச்சந்நிதியில் சப்த மாதர்கள் புடை சூழ அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். அவளே அம்புஜவல்லியின் அம்சம். பிள்ளை இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு அருள் பாலிக்கிறாள். அவளையே குழந்தையம்மாள் என்று கூறுகிறார்கள். இவளுக்கு ஆராதனையெல்லாம் செங்குந்த முதலியார்கள் செய்கிறார்கள். அவளையும் வணங்கி விட்டே நாம் கோயிலுக்கு வரலாம்.

வெளியே வருகிறபோது கோயிலில் ராமர் சந்நிதியைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அப்படிக் கேட்டால் 'ஒ! இருக்கிறதே' என்று கோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நந்தவனத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் இருப்பார். பரதன் வெண்குடை கவிக்க, சத்ருக்னன் கவரி வீசக் காட்சி கொடுப்பார், அனுமார் அங்கே ராமாயண பாராயணமே செய்து கொண்டிருப்பார்.

இவர்கள் பக்கத்திலேயே தசாவதாரக் கோலங்களில் முதல் இரண்டு அவதாரங்களான மச்ச வடிவும் கூர்ம வடிவையும் காணலாம். கொஞ்சம் ராமர் சீதை திருவடியைக் கூர்ந்து நோக்கினால், இருவரும் அவரவர் வலது காலில் மட்டும் பாதரட்சை அணிந்திருப்பது தெரியும். இருவரது இடதுகால் பாதரட்சைகள் என்ன ஆயிற்று என்று கேட்போம். அர்ச்சகர்களுக்கு அதற்கு சமாதானம் சொல்லத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். சித்ரகூடத்தில் பரதன் வந்து ராமரது பாதரட்சைகளில் இரண்டை வாங்கிப் போனதாக ராமாயணம் கூறுகிறது அல்லவா? ஆனால் ராமர் அவனிடம் கொடுத்தது அவரது பாதரட்சைகள் தானா? அவர் அறிவார், சீதாதேவி தன்னுடைய பட்டமகிஷி, சஹதர்மிணி. ஆதலால் தன்னுடன் அரியாசனத்திலிருந்து ஆட்சி புரியும் பாத்தியதை பெற்றவள் என்று. ஆதலால் பரதனிடம் தன் பாதரட்சை ஒன்றும் தன் துணைவி சீதையின் பாதரட்சை ஒன்றையுமே கொடுத்திருக்கிறார்.

இதை வால்மீகி, கம்பர், துளசி எல்லோருக்கும் தெரியாமலேயே மறைத்தும் வைத்திருந்திருக்கிறார் என்றாலும் ஸ்ரீமுஷ்ணத்து பட்டாபிஷேக ராமரை உருவாக்கிய சிற்பியிடம் இதை மறைக்க முடியவில்லை இராமனுக்கு. அவன் எப்படியோ இந்த ரகசியத்தை அறிந்து அதை அம்பலப்படுத்தியிருக்கிறான். அவ்வளவு தான். இதை வைத்து ஒரு ‘பாதுகா பிரபாவமே' பாடலாம் போலிருக்கிறது! பாதுகா சஹஸ்ரம் எல்லாம் பாடத் தெரிந்தவர்கள்தானே, கவிஞர்கள், கலைஞர்கள்?

"~“எல்லாம் சரிதான்! - பூவராகன் என்றீர், யக்ஞ வராகன் என்றீர், போக நாராயணன் என்றீர், இத்தலம் ஸ்ரீமுஷ்ணம் என்று ஏன் பெயர் பெற்றது என்று கூறவில்லையே?" என்றுதானே கேட்கிறீர்கள்? அதையும் சொல்லி விடுகிறேன். ஹிரண்யாட்சன் கதையை முன்னமே கேட்டிருக்கிறோம். அவனுடைய செல்வம், ஆயுள், புகழ் எல்லாவற்றையும் அபகரித்து ஸ்ரீதேவியைக் காப்பாற்றியதால் ஸ்ரீமுஷ்ணம் எனப் பெயர் வந்தது என்கிறார்கள்.

இத்தலத்தில் இன்னொரு விசேஷம், இக்கோயிலை அடுத்த கீழ்புறத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது அங்குள்ள இறைவன் பெயர் நித்தீச்சுரர். பூவராகனும் நித்தீச்சுரரும் ஒருவரையொருவர் பாராது ஒருவர் முதுகுப் புறத்திலே ஒருவர் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். நமக்கு முன்னமேயே தெரியும் கம்பன் பிறந்த ஊராகிய தேரழுந்தூரிலே வேதபுரி ஈஸ்வரரும் ஆமருவி அப்பனும் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி சௌஜன்யமாக நிற்கிறார்கள் என்று. இங்கு ஏன் பிணங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்களோ தெரியவில்லை.

என்றாலும் இந்த நித்தீச்சுரர் சந்நிதி முன்பு ஒரு திருக் குளம் நித்ய புஷ்கரிணி என்ற பெயருடன் விளங்குகிறது.. ஹிரண்யாட்சனை சம்ஹரித்த காலத்தில் பூவராகன் மேனியில் இருந்து வடிந்த வேர்வைத்துளிகளே இப்படி புஷ்கரிணியாக மாறியது என்று புராணம் கூறுகிறது. இப்புஷ்கரிணியின் கரையிலே அக்கினிதிக்கிலே ஒரு அரசமரம் நிற்கிறது. நித்ய புஷ்கரிணியில் நீராடி இம்மரத்தை வலம் வருபவர்கள் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இந்த மரமும் பூஜைக்கு உரிய பொருளாகிறது.

இக் கோயில் யாரால், எப்போது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கட்டிடக் கலையைப் பார்த்தால் இது விஜயநகர நாய்க்க மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப அச்சுத நாய்க்கர், அனந்தப்ப நாய்க்கர், கொண்டப்ப நாய்க்கர், கோவிந்தப்ப நாய்க்கர் முதலியோர் சிலைகள் புருஷ சூக்த மண்டபம் என்னும் பதினாறுகால் மண்டபத்தில் நிற்கின்றன. இக்கோயில் பல வருஷங்களாக உடையார்பாளையம் ஜமீன்தார்கள் மேற்பார்வையில் இருந்து வந்திருக்கிறது. பல நிபந்தங்கள் அவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இதையெல்லாம் ஆராய நமக்கு நேரம் ஏது? பூவராகன் பக்ஞ வராகன், அம்புஜவல்லித் தாயார் முதலியோரை வணங்கி அவர்தம் அருள் பெற்றுத் திரும்புவதோடு திருப்தி அடையலாம்.

2. திருவலத்து வல்லநாதர்

இறைவனைத் தேடி மனிதன் செல்கிறானா, இல்லை மனிதனைத் தேடி இறைவன் வருகிறானா என்று ஒரு கேள்வி. உண்மைதான். நம் நாட்டில் தோன்றிய அடியார்கள் பலரும் இறைவனைத் தேடி ஓடி இருக்கிறார்கள். அவன் பாதங்களைக் கட்டிப்பிடித்து, 'சிக்கெனப் பிடித்தேன்: எங்கெழுந்தருளுவதினியே' - என்று கதறியிருக்கிறார்கள்.

இதைப் போலவே இறைவனும் தன்னிடமிருந்து விலகி, பொன்னையும், பொருளையும், மண்ணையும், பெண்ணையும், மக்களையும் மனையையும் நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதனை, சரி அவன் அப்படியே போகட்டும் என்று விட்டுவிடுகிறானா? இல்லை. அப்படி விலகி விலகி ஓடும் மனிதனையும் தொடர்ந்தே ஓடிவந்து அவனுக்கும் அருள் புரிபவனாக இருக்கிறான் இறைவன். அப்படித்தானே பாடினான் பிரான்ஸிஸ், தாம்ஸன் என்ற அறிஞன், 'அருள்வேட்டை' என்ற பாடலிலே. இறைவன் தன்னைவிட்டு விலகி ஓடும் மனிதனை வேட்டை நாயுருவில் துரத்தி வந்து பிடித்து அருள் புரிகிறான் என்பதுதானே அவனது கற்பனை. இதே கற்பனையை இந்த தாம்ஸனுக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னே தமிழ் நாட்டில் தோன்றிய அப்பர் பெருமான்,

சொல்லாதன எல்லாம் சொல்லி

அடியேனை ஆளாக் கொண்டு

பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்

என்றுதானே பூந்துருத்தி புஷ்பவன நாதரைப் பாராட்டிப் பாடியிருக்கிறார். இந்தச் செய்தி, வரலாறு எல்லாம் எனக்கு வட ஆர்க்காட்டில் உள்ள திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றிருந்தபோது ஞாபகத்துக்கு வந்தது. அத்தலத்தைப் பற்றிய வரலாறு இதுதான்: அன்றொரு நாள் நாரதர் ஒரு கனியைக் கொண்டு வந்து சிவபிரானிடம் கொடுக்கிறார். அந்தச் சமயத்தில் உமை யுடன் புதல்வர் இருவருமே வருகிறார்கள். இருப்பது ஒரு கனி. அதை யாருக்குக் கொடுப்பது என்பது பிரச்சனை இப்போது.

இப்பிரச்சனைக்கு முடிவுகாண சிவபெருமான் மக்களுக்குள்ளே ஒரு போட்டியை ஏற்படுத்துகிறார். இந்த அகண்ட அண்டம் முழுவதையும் யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களே கனியைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறார். சரி என்று போட்டியில் முனைகிறார்கள் இருவரும். முருகன் நினைக்கிறான், வெற்றி நமக்குத் தான் என்று. தன் மயில் மீது ஏறிக்கொண்டு ககன வீதியில் புறப்பட்டு விடுகிறான்.

ஆனால் மூத்த பிள்ளை பிள்ளையாரோ தன் வாகனமான மூஞ்சூறுவைக் கூடத் தேடவில்லை. விறு விறு என்று தன் அன்னையையும் அத்தனையுமே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறார். கனிக்கு கையை நீட்டுகிறார். 'என்னடா? அண்டங்களை எல்லாம் சுற்றியாகி விட்டதா?' என்று தந்தை கேட்கிறார். இதற்குச் சளைக்கவில்லை அந்தப் பிள்ளையார். 'அண்டங்கள் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றி வந்தால் இந்த அண்டங்களையே சுற்றிய தாகாதோ?' என்று எதிர்வாதம் செய்கிறார்.

அத்தனும் வேறு வழியில்லாமல் கனியை அந்த மூத்த பிள்ளையிடமே கொடுத்து விடுகிறார். ஆனால் ஓடி ஆடி அண்டங்களை எல்லாம் சுற்றி வந்து முருகன் ஏமாந்து போகிறார். அதனாலேயே கோபித்துக் கொண்டு ஆண்டி வேடத்தில் போய் விடுகிறார். சரி இந்த முருகன் சென்று நிற்கிற இடம் பழநி என்பதை அறிவோம். அன்று வெற்றி பெற்ற விநாயகர் எங்கிருக்கிறார் என்று கேட்கத் தோன்றுமல்லவா. இதற்கு தமிழ் நாட்டில் உள்ள தல வரலாறுகள் எல்லாம் உதவி செய்யவில்லை.

கொம்பனைய வன்னி

கொழுநன் குறுகமே

வம்புனைய மாங்கனியை

நாறையூர் - நம்பனையே

தன்னை வலம் செய்து கொளும்

தாழ் தடக்கையான்

என்று நம்பியாண்டார் நம்பி பாடுவதால் இக்கதை நித்யத்வம் பெற்று விடுகிறது. இப்படி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நான் அந்தத் திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றேன். அங்கு வலம் வந்த விநாயகரைக் கண்டேன். அங்குள்ள மக்கள், அன்று இறைவனை வலம் வந்த விநாயகர் அங்கு தங்கியிருப்பதால்தானே, அத்தலத்திற்கே திருவலம் என்று பெயர் வந்திருக்கிறது என்று கூறுவதையும் கேட்டேன்.

இப்படி விநாயகரே இறைவனைத்தேடி, அவரை வலம் வந்து அருள் பெற்ற தலம்தான் திருவலம் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தபோது அந்தக் - கோயில் வாயிலில் உள்ள நந்தி மற்ற கோயில்களில் இருப்பதைப் போல இறைவனை நோக்கி நிற்காமல் அவர் இருக்கும் திசையை விட்டுத் திரும்பி கிழக்கு நோக்கி ஓடுங்கோலத்தில் இருப்பதையும் கண்டேன்.

தல வரலாற்றைப் புரட்டினால் ஏதோ கஞ்சாசுரனை விரட்டிக் கொண்டு ஓடுகிறது. நந்தி என்று கதை சொன்னாலும் எனக்கென்னவோ பசுவாகிய உயிரின் பதியாகிய இறைவனை விட்டு விலகி ஓடும் நிலையைத் தான் இந்த நந்தி குறிப்பிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆம், தாம்ஸன், அப்பர் போன்றவர்கள் எல்லாம் விளக்கிய உண்மைக்கே உருவம் கொடுத்து நிறுத்தியது போல் இருந்தது.

இந்தத் திருவலம் ஒரு சிற்றூர். சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பெரு வழியில், சென்னையிலிருந்து - எழுபத்தி ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. ஊரை அடுத்து பொன்னை என்னும் நீவாநதி ஓடுகிறது. அந்த ஆற்றைக் கடக்க ஒரு பெரிய பாலம் ஒன்றும் கட்டியிருக்கிறார்கள். இந்தப் பாலம் முழுவதும் உருக்குச்சட்டத்தால் கட்டி ஈயவெள்ளை வர்ணமும் அடித்திருப்பதால் சினிமாப்படம் பிடிப்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

பல படங்களில் இப்பாலத்தைப் : பார்த்துக் - களித்திருக்கிறோம். இந்தப் பாலத்தைப் படம் பிடித்த கலைஞர்கள் எல்லாம் பாலத்தோடு நின்று விட்டார்களே ஒழிய, அதற்கு மேலும் நடந்து பாலத்திற்கு மேற்கே ஒன்றிரண்டு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கோயிலுக்குச் சென்றதாகத் தெரியவில்லை. 1958 - ல் நான் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கு பல பாகங்களில் புதர் மண்டிக்கிடந்தது. பல பாகங்கள் இருட்டடித்தும் கிடந்தது. நாலு வருஷம் கழித்து நான் அங்கு சென்றிருந்த போது, கோயில் புத்தம் புதிதாய் கட்டியது போல் புதுமையுற்றுத் திகழ்கிறது.

இவ்வளவு சிறப்பாக இத்திருப்பணியைச் செய்தவர் யார் என்று விசாரித்தபோது, அங்குள்ள அன்பர்கள், என்னை கோவில் பக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ராஜராஜேஸ்வரிக்கும் ஒரு சிறு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில் பக்கத்தில் ஒரு சிறு குடிலில் ஒரு சாமியார் இருந்தார். அவர் கௌபீனம் ஒன்றை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரது பக்கத்தில் வில்வ இலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஓர் உடைந்த சட்டியில் திருநீறும் இருந்தது. எண்ணற்ற மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

எல்லோரும் அங்குள்ள சாமியார் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் வில்வ தளமும் விபூதியும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் அவர்களும் ஒரு நயாபைசா முதல் அவர்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர். அப்படி வணங்கி வில்வதளம் பெற்றுச் செல்பவர்களுக்கு எல்லாம் அவர்களைப் பீடித்திருந்த வியாதி நீங்குகிறது. இப்படி தீராத நோய் தீர்த்தருள வல்லானாக அச்சாமியார் அந்தத் திருவலம் என்னும் தலத்தில் வாழ்கிறார். பைசா பைசாவாக அவர் சேர்த்த தொகையை வைத்தே இக்கோயில் திருப்பணி நிறைவேறி இருக்கிறது. .

இன்றுவரை ஐம்பதினாயிரத்திற்கும் மேல் திருப்பணிக்குச் செலவாகியிருக்கிறது, என்று அறிந்த போது அப்படியே மெய்சிலிர்த்தது. வல்லநாதர் இப்படி ஒரு சாமியார் வடிவில் அல்லவா மக்களைத் தொடர்ந்து வந்து அருள் புரிகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. சாமியாரோ மௌனி. அவரை சிவானந்த மௌன சுவாமிகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

கோயில் பிராகாரம், கோபுரம், பாண்டங்கள் எல்லாம் நன்றாய் வர்ணம் தீட்டப்பட்டிருக்கின்றன. மின்சார விளக்குகள் போடப்பட்டிருக்கின்றன. கோயிலுள் நுழைகிற போதே, உள்ளத்தில் ஓர் எழுச்சி உண்டாகிறது.

முன் வாசல் கோபுரம் தெற்கு நோக்கிய வாசலில் இருக்கிறது. அதைக் கடந்து கொஞ்சம் தாழ்ந்த இடத்தில் இறங்கியே கோயிலுக்குள் செல்ல வேணும். அந்தப் பாதையிலேயே வலப்பக்கம் ஒரு சிறுகுளம். இடப் பக்கம்தான் புதிதாகக் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரியின் சந்நிதி, அங்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டே. இடைநிலைக் கோபுரத்தைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேணும்.

அங்கு வலப் புறத்திலேதான் வலம் வந்த விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார். அவரை வரசித்தி விநாயகர் என்றே அழைக்கின்றனர். அவரை வணங்கிவிட்டே மேற்புறமாக நகரவேணும். அந்த மேல் பிராகாரத்தில்தான் ஒரு சிறு கோயிலும் பக்கத்தில் வில்வமரமும் இருக்கிறது. இந்த வில்வமரத் தழைகள்தான் இன்று சிவானந்த மௌன சாமியின் பிரசாதமாக மாறிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள கோயிலிலேதான் ஆதி வில்வவரைநாதர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் சந்நிதியிலே பவள மல்லிகை ஒன்று பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் இதே சந்நிதியில் பெரிய கோயிலை ஒட்டி ஒரு பலq. பலாவில் இரண்டு வகை. ஒன்று வேரிலேயே! பழங்களை உதிர்க்கும். மற்றொன்று கிளைகளில் பழங்களைத் தரும். இந்தப் பலா கிளைகளிலும் வேரிலுமே பழங்களைக் காய்த்துக் கொண்டிருக்கிறது. பழம் என்றால் ஒன்றிரண்டு அல்ல. ஏதோ கொடி முந்திரிப்பழம் போல கொத்து கொத்தாய், பலாப் பழங்களை ஏந்தி நிற்கிறது. எண்ணற்ற பழங்கள் இருப்பதால் எல்லாம் சிறிய அளவிலேயே இருக்கின்றன.

இங்குள்ள வில்வநாதர் சந்நிதிக்கு மேற்பக்கம் தான் நூற்றுக்கால் மண்டபம், அதற்கு வடபுறமே வல்லாம்பிகை கோயில். இங்குள்ள வல்லாம்பிகையே தனுஷ்மத்ஸ்யாம்பாள் என்கின்றனர். அந்த வல்லாம்பிகையையும் வணங்கிவிட்டு பாதாள கோயிலை வலம் வந்து கீழ்புறம் உள்ள வாயில் வழியாக நுழைந்துதான் வல்லநாதரை தரிசிக்க வேணும்! இந்த வாயிலிலேதான் நந்தி கிழக்கு நோக்கிய வண்ணம் படுத்திருக்கிறது. கருவறை யிலே வல்லநாதர் லிங்க வடிவிலே கோயில் கொண்டிருக் கிறார். இவரையே நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் பாடியிருக்கிறார்.

சார்ந்தவர்க் கின்பங்கள்

தழைக்கும் வண்ணம்

சேர்ந்தவன், நேரிழை

யோடும் கூடி

தேர்ந்தவர் தேடுவார்

தேடச் செய்தே

சேர்ந்தவன் உறைவிடம்

திருவல்லமே!

என்பது சம்பந்தர் தேவாரம். இன்று சார்ந்தவர் துன்பங்கள் துடைத்து இன்பங்கள் தழைக்கும் ஆற்றலோடு விளங்கும் ஒரு முனிவரும் தங்கும் தலமாக இருக்கிறது இத்திருவலம். இக்கோயில் திருப்பணி இப்போது முடிவு பெற்றிருக்கிறது. இத்திருப்பணியைச் செய்தவர்கள் பிரபல பணக்காரர்கள் அல்ல. அந்த வட்டாரத்தில் மிகசெல்வாக்கு உடையவர்களும் அல்ல.

ஓர் ஏழைப் பரதேசி, வல்லநாதர் என்னும் வில்வாரண்யராம் சித் புருஷராக வாழ்கிறார். பலரது நோயைத் தீர்க்கிறார். அதன் மூலம் பைசா பைசாவாக பணம் திரட்டி, ஒரு பெரிய திருப்பணியையே முடித்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு சிறப்புடையதாகிறது. வல்லநாதருக்குத் தெரியாதா தனக்கு வேண்டியதைத் தானே தேடிக் கொள்ள. ஆம், எவ்வளவுதான் அவரை விட்டு விலகி ஓடினாலும் நம்மைத் தொடர்ந்து வந்து அருளுகிறவர் ஆயிற்றே!

நினையாத நெஞ்சை நினைப்பித்து, கல்லாததைக் கற்பித்து, காணாததைக் காட்டி, சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து வந்து அடியவர்களை ஆட்கொள்ளுபவராக அல்லவா விளங்குகிறார்? வசதி உடையவர்கள் எல்லாம் சென்று வணங்கி வல்ல நாதர் அருள் பெறுமாறு வேண்டிக்கொண்டு நான் நின்று கொள்கிறேன்.

3. குடந்தை கீழ்க்கோட்டம்

எனது அமெரிக்க நண்பர் ஒருவர். அவருக்கு நம் தமிழ் நாட்டுக் கலைகளின் மீது ஆர்வம் அதிகம். அவரும் நம் கோவில்களில் காணும் இன்பவடிவங்களின் அழகில் மெய் மறப்பார். அவை என்ன என்ன அடிப்படைத் தத்துவங்களை விளக்குகின்றன என்று நான் சொல்லி விளக்கினால் அதிசயித்து நிற்பார்.

நான்கைந்து வருஷம் U.S.I.S.ல் பணியாற்றி விட்டு அமெரிக்கா திரும்புகின்ற அவசரத்தில் என் வீட்டிற்கு வந்தார். தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த காலம். “மிஸ்டர் தொண்டைமான். நான் இன்னும் சில தினங்களில் என் சொந்த நாடு திரும்புகின்றேன். அப்படித் திரும்புமுன் தமிழ் நாட்டில் இன்பச் சிறப்புகளை எல்லாம் விளக்கும் ஒரு கோயிலைப் பார்த்து விட வேண்டும். அக்கோயிலும் அங்குள்ள இன்ப வடிவங்களும் என் நினைவில் என்றும் பசுமையாக இருக்க வேணும். உம்மைப் பற்றி என் மனைவியிடம் பிரமாதமாகச் சொல்லியிருக்கிறேன். என்னைப் போல அவளுக்கும் ஆசை. எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா? என்று மிக்க பரிவோடு பேசினார். தஞ்சைப் பெரிய கோயிலக் காட்டுகிறதா. காட்டினால் தக்ஷணமேரு என்னும் விமானத்தையும், பெருவுடையார் வடிவத்தையும் தானே காட்ட வேண்டும். இல்லை கோனேரிராஜபுரம் நடராஜனைக் காட்டலாமா? ஆக்கூர் ஆயிரத்து ஒருவரைக் காட்டலாமா? அடம்பர் இராமனைக் காட்டலாமா? இல்லை. வழுவூர் கஜ சம்ஹாரனையும் பிக்ஷாடனரையும் காட்டலாமா? இதையெல்லாம் காட்டுவதில் ஒரு சங்கடம் வேறே இருக்கிறதே.

இவர்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் கோயில்களில் அனுமதிக்க மாட்டார்களே, ஆகவே கோயில் உள்ளே அல்லாமல் பிராகாரத்திலேயே சிறந்த வடிவங்கள் இருக்கும் ஒரு கோயிலையல்லவா காட்ட வேண்டும் என்று பலபல எண்ணினேன். கடைசியில் ஒரு நண்பரது காரிலேயே ஏறிக்கொண்டு கும்பகோணத்தில் அருகே ஒரு கோயிலுள் நுழைந்தோம்.

அக்கோயிலின் ராஜ கோபுர வாயிலே மிகவும் பெரிதாக அகன்றும் உயர்ந்தும் இருந்தது. அந்த வாயிலில் நண்பர்களை நிறுத்திக்கொண்டு சொன்னேன், 'இக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்கிறது. கோயில் கோபுரத்திற்கும் கருவறையில் உள்ள லிங்கர் இடையில் உள்ள தூரம் கிட்டத்தட்ட முன்னூறு அடி, இடையில் இரண்டு வாயில்கள், ஒரு கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி எல்லாம் உண்டு.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 10,11;12 தேதிகளில் {about 'April 24, 25, 26) காலை 6 மணிக்கு உதிக்கின்ற சூரியனின் ஒளி இவ்வாசல் வழியாய் புகுந்து, இடையில் இருக்கும் தடங்கல்களை எல்லாம் கடந்து கருவறையில் உள்ள இறைவன் உருவை ஒளிமயமாக்குகிறது.“ என்று.

இத்தலவரலாற்றில் சூரியனும். இந்திரனும் வந்து இங்கு வழிபாடு இயற்றியிருக்கின்றனர் இவ்வரலாற்றை உண்மை என இன்றைய மக்கள் உணர இப்படி ஒரு கட்டிட அமைப்பும் கோபுர வாயில் அமைப்பும் என்றேன். நண்பரின் மனைவி இதைக்கேட்டு அப்படியே அதிசயித்து நின்றாள். நண்பர், “இது அவ்வளவு பெரிய விஷயமல்ல தொண்டைமான், கொஞ்சம் விஷயம் அறிந்தவன் கோயிலைக் கட்டி இருக்கிறான். அவன் ஒரு சிறந்த கலைஞனாகவே இருக்க வேண்டும். தன் கற்பனைக்கு ஒரு நல்ல உருவம் கொடுத்து ஒரு கோயிலை கட்டத் தெரிந்திருக்கும் அவனுக்கு நாம் தலை வணங்க வேண்டியதுதான் என்று பாராட்டிவிட்டு மேல் நடந்தார்.

கோயிலில் வெளிப்பிராகாரத்தைக் கடந்து அடுத்த பிராகாரத்துள்ளே நுழைந்த உடனே அங்கே ஒரு தனிக் கோயில் நடராஜருக்கு. அக்கோயிலை தேர்போல் அமைத்து அத்தேரின் முன்பக்கம் இரண்டு யானைகள் தேரை இழுப்பதுபோல ஒரு அமைப்பு. அதை விட தேரின் இருபக்கத்திலும் இரண்டு சக்கரங்கள். தேரினை இழுத்துக் கொண்டு ஓடுவது போல் ஒரு பாவனை.

உடன் வந்த நண்பர்களைக் கொஞ்சம் கண்மூடி மூடித் திறக்கச் சொன்னேன். அப்படியே செய்து விட்டுச் சொன்னார்கள், தொண்டைமான் அப்படி கண்ணை மூடிமூடித் திறந்தால் தேர் ஓடவே ஆரம்பித்து விடுகிறது, தேரின் கீழ் சிக்கிவிடக் கூடாதே என்று பயமாக வேறு இருக்கிறது என்றார்கள். அவ்வளவு தத்ரூபமாக தேர் அமைந்திருக்கிறது. எல்லாம் கல்லில், அதன் பின் நடராஜர் சந்நிதிக்கே நண்பர்களை அழைத்துச் சென்றேன். கிட்டதட்ட 5,6 அடி உயரத்தில் நடராஜர் கம்பீரமாக எழுந்து நிற்கிறார், செப்புச் சிலை வடிவில். சிவகாமியும் 5 அடி உயரத்தில் நிற்கிறாள்.

மற்ற கோயில்களில் இருக்கும் சிவகாமி போல கைகளை ஒயிலாய் போட்டுக் கொண்டிருக்காமல் தன் காதலன் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றவாறு தாளமிடும் பாவனையில் அவள் கைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறாள்.

'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது. இதை எல்லாம் அமெரிக்க நண்பர் அனுபவிக்க முடியாவிட்டாலும், சிலை வடிவில் உள்ளதை அனுபவித்தார்கள் இருவரும். அங்கிருந்து அவர்களை இழுத்துச் செல்வது பெரும் பாடாகிவிட்டது.

4. திரிபுவனச் சிற்பங்கள்

இன்றைய உலகம் சினிமா உலகம். சினிமாவில் காதல் காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன என்பதையுமே அறிவோம். பண்டைத் தமிழன் காதல் வாழ்வில் திளைத்தவன். சங்க இலக்கியங்கள் எல்லாம் அந்த வரலாற்றைத் தானே கூறுகின்றன. ஒத்த குலமும் ஒத்த நலனும், ஒத்த அழகும், ஒத்த பண்பும் உடைய தலை மகன் ஒருவனும் தலைமகன் ஒருத்தியும் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஒரு பொழிலிடத்தே ஊழ்வினை வசத்தால் தனித்து சந்திக்கின்றனர். காதல் அரும்புகிறது. பின்னர் மலர்கிறது, என்றெல்லாம் கதை விரிகிறது இலக்கியங்களிலே.

இன்றோ கல்லூரிகளிலே, கடற்கரையிலே, சாலைகளிலே, சோலைகளிலே கன்னி ஒருத்தியும் காளை ஒருவனும் சந்தித்து காதலை வளர்க்கிறார்கள் - என்றே சினிமாக் கதைகள் உருவாகின்றன. பெண் சோலை மரங்களுக்கிடையே ஓடுவதும், மல்லிகைப்பந்தரின் கீழே அவளை ஓடிப் பிடித்து விளையாடி காதல் உரையாடுவதும், நாம் நாளும். பார்க்கும் காட்சிகளாக அமைகின்றன. வெள்ளித் திரையில் கொடியடியில் காணும் மடக்கொடிகளாக மங்கையர் நிற்பதைத்தானே வெள்ளித்திரை தெள்ளத்தெளிவுடன் உருவாக்குகிறது.

இந்த கற்பனைக்கெல்லாம் மூலமாய் அமைந்த வடிவங்கள் நம் நாட்டுச் சிற்பக் கலை உலகிலும் உண்டு, ஆம் கொடியடியில் காணும் மடக்கொடிகள் இருவர் கல்லுருவில் நிற்கிறார்கள், ஒரு கோயிலிலே. அந்தக் கோயில் தான் திரிபுவனம் கம்ப ஹரேஸ்வரர் கோயில் இந்தப் பெண்களை, ஆம் சிலை உருவில் நிற்பவர்களைப் பார்த்த பின்தான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்

நஞ்சினும் கொடிய நாட்டம்

அமுதினும் நயந்து நோக்கி

கெஞ்சவே கமலக்கையால்

தீண்டலும், நீண்ட கொம்பர்

தன் சிலம்பு அடியில் மென்பூச்

சொரிந்து, உடன் தாழ்ந்த என்றால்

வஞ்சி போல் மருங்குலார் மாட்டு

யாவரே வணங்கலாதார்?

என்று பாடி இருக்க வேணும். இன்னும் புகழேந்தியும் கம்பனது அடி ஒற்றியே,

பாவையர் கை தீண்டப்

பணியாதார் யாவரே?

பூவையர் கை தீண்டலும்

அப்பூங்கொம்பு - மேவி அவர்

பொன்னடியில் தாழ்ந்தனவே.

என்றும் பாடுகின்றான். இந்தப் பெண்வடிவங்களை சிற்ப உலகில் சலபாஞ்சிகைகள் என்று கூறுகின்றனர். தமிழ் நாட்டின் சிற்பக்கலை உலகில் இவ்விரு பெண்களும் ஓர் ஒப்பற்ற சிருஷ்டி என்று கூறினால் அதை ஒருவராலும் மறுக்க முடியாது. அவர்கள் நிற்கின்ற ஒயில், அவர்கள் உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாமே அழகுக்கு அழகு செய்கின்றன.

இன்னும் கூந்தலை வாரி முடித்து, அவைகளைச் சுற்றி முத்துமாலைகளைக் கோத்துக் கட்டி, அந்தக் கொண்டைகளிலே மகரிகைகளை அணிந்து, சர்வாலங்கார சோபிதைகளாக அவர்கள் நிற்கின்றனர். காதிலே அணிந்துள்ள விராட குண்டலங்களும், இடுப்பில் அணிந்துள்ள அந்தரீயமும், காலிலே அணிந்திருக்கும் சலங்கையும் ஒலிக்கும் ஒலியையே கேட்கிறோம் நாம். மார்பகத்தை மூடாது, மலையனைய முலை காட்டி மாரனையே பொர விடும் மங்கையராக அல்லவா அவர்கள் நிற்கிறார்கள்? இவர்களைக் கண்ட பின்,

நடந்தாள் ஒரு கன்னி மாரச

கேசரி நாட்டில், கொங்கைக்

குடந்தான் அசைய, ஒயிலாய்,

அது கண்டு, கொற்றவரும்

தொடர்ந்தார், சந்நியாசிகள் யோகம்

விட்டார், சுத்த சைவரெலாம்

மடந்தான் அடைத்து சிவபூசையும் -

கட்டி வைத்தனரே!

என்று கவிஞன் ஒருவனுக்கு பாடத் தோன்றினால் வியப்பே இல்லை. இந்த இரண்டு சலபாஞ்சிகை சிற்பவடிவங்களைக் காணவே ஒரு நடை போகலாம் திரிபுவனத்திற்கு.

சரி, போகிறதே போகிறோம் அங்குள்ள மற்ற சிற்ப வடிவங்களையும் காணாமல் திரும்ப இயலுமா என்ன? கோயிலை மூன்று வாயில்கள் அழகு செய்கின்றன.

அவற்றை முறையே தோரணத் திருவாயில், திருமாளிகைத் திருவாயில், திரு அனுக்கன் திருவாயில் என்கின்றனர், இவற்றை எல்லாம் கடந்து உள்ளே சென்று மூலக் கோயிலை ஒரு சுற்று சுற்றினால் கருவறை மேலே: எழுந்துள்ள ஒரு பெரிய விமானத்தையுமே காண்போம்.. இந்த விமானம் தஞ்சைப் பெரு உடையார், கங்கை. கொண்ட சோனீச்சுரத்தார் கோயில் விமானங்களைப் போல் உயரமோ காத்திரமோ உடையது அல்ல என்றாலும், அழகில் சூறைந்ததல்ல. இதனையே சச்சிதானந்த விமானம் என்பர். விமான தரிசனம் செய்து கொண்டே மேலப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கே மேற்கே பார்த்த கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். நான் கண்ட லிங்கோத்பவர்களில் எல்லாம் அழகு வாய்ந்த வடிவம் இது ஒன்றேதான். பொங்கழல் உருவன் அவன் என்பதைக் காட்ட, அந்த வடிவத்தில் சுடர் விடும் பல சுடர்களுக்கு உள்ளேயே இறைவனைக் காட்டியிருக்கிறான் சிற்பி.

இனி கோயிலுள் சென்று நடுக்கம் தீர்த்த பெருமானாம் கம்பகரேஸ்வரனைத் தரிசித்துவிட்டு திரும்பும் பொழுது, செப்புச்சிலை வடிவில் நிற்கும் பிக்ஷாடனர் திருக் கோலத்தையுமே காணலாம். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களில் சிறந்த ஒன்று அது. சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து நம்மை ஆளாக கொண்டு, நம் அன்பையும் ஆணவத்தையும் பிக்ஷை கேட்கும் அந்த அடிகளை வணங்கிய பின் வடப்பக்கம் உள்ள அறம் வளர்த்தாளையும் வணங்க வேண்டும்.

அதற்குப் பின் நாம் சரபர் சந்நிதியில் நுழைந்தால் அங்குதான் நாம் காணவந்த கன்னியர் இருவர் நிற்பர். அவர்களைக் கண்டு அவர்கள் அழகில் மயங்கி நம் உள்ளங்களைப் பறிகொடாதவாறு நிமிர்ந்து நோக்கினால், சரப மூர்த்தியைக் காணலாம். அது என்ன சரபமூர்த்தி என்கிறீர்களா? சரபர் சிவனது அஷ்டாஷ்ட மூர்த்தங்களில் ஒன்று என்பதைப் பலர் அறிவார்கள். அவர் எப்படித் தோன்றினார், எதற்காகத் தோன்றினார் என்று சொல்ல வேண்டாமா? நமக்குத் தெரியும், மகாவிஷ்ணு இரணியனை அழிக்க பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் , உள்ள நரசிம்ம வடிவம் எடுத்தார் என்று.

இரணியன் உடல் கிழித்து உதிரம் குடித்ததும் அவருக்கு ஒரு வெறியே ஏற்பட்டு விடுகிறது. அந்த வெறியை அடக்க சிவபிரானே சரபர் வடிவில் வந்து அதனை ஒடுக்குகிறார். பாதி சிங்க வடிவிலும், பாதி பறவை வடிவிலும் வந்தவரையே சரபர் என்கிறோம். நரசிம்மனை அடக்க இறைவனே சரபனாக வந்தான் என்று கொள்வது வைஷ்ணவ பக்தர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் எல்லா மூர்த்திகளும் தோன்றி நின்று ஒடுங்கும் இறைவன் ஒருவனே, அவனே நரசிம்மன், அவனே கம்பகரேஸ்வரன், அவனே சரபன் என்று மட்டும் உணர்ந்து கொண்டால் உள்ளத்தில் விகற்பங்கள் ஒன்றும் தோன்றாது. இக்கோயிலில் மூலவராம் சரபரை விட, உத்சவராக சிறிய வடிவில் செப்புப் படிமமாக இருப்பவரே மிக்க அழகு வாய்ந்தவர். சிற்பக் கலை உலகில் அதிசயமானவரும் கூட!

இத்தனை நல்ல சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டதுதான் திரிபுவனம் கோயில். இக்கோயிலை - மூன்றாம் குலோத்துங்கன் என்னும் திரிபுவனச் சக்ரவர்த்தி பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கட்டியிருக்கிறான். சோழர் கோயில் கற்பணிகளிலே ஒரு முக்கியமான மைல் கல் இக்கோயில். இந்தத் திரிபுவனச் சக்ரவர்த்தி விரும்பியபடியே இவனது முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் திருத்தொண்டர் பெரிய புராணத்தைப் பாடி இருக்கிறார்.

அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த குலோத்துங்கள், அவரை யானை மீதேற்றி தானும் உடன் இருந்து அவருக்குச் சாமரை வீசிக் கௌரவித்திருக்கிறான். பக்தியும் கலையும் நிரம்பியவனாக இருந்ததனால் அல்லவா இப்படி ஒரு கலைக்கோயிலும் காவியக் கோவிலும் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறான் அவன். இக்கோயில் இன்று தருமபுரம் ஆதீன கர்த்தர் அவர்கள் மேற்பார்வையில் இருக்கிறது. திருப்பணி சிறப்பாக நடந்து குடமுழுக்கும் நடக்கிறது. ஆதீன கர்த்தர் அவர்களின் கலைப்பணியையும் பக்திக் கனிவையும் நினைத்து நான் தலை தாழ்த்தி நின்றேன்.

5. திருக்கண்ணமங்கை

பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு நடன நிகழ்ச்சி. அங்கு நடந்த நடன நாட்டியங்களைக் காண நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். சென்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்தோம் பஸ்மாசுர மோகினிக் கதையை நடனம் ஆடிக்காண்பித்தார்கள் நடிகர்கள், அதை அடுத்து ஒரு நிகழ்ச்சி, கஜேந்திர மோக்ஷம் என்று கண்டிருந்தது, நிகழ்ச்சி நிரலில். பஸ்மாசுர மோகினியில் பஸ்மாசுரன், சிவன் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லோரும் மேடையில் தோன்றி நடனம் ஆடியது போல இந்த கஜேந்திர மோக்ஷத்தில் கஜேந்திரன், முதலை, கருடன், மஹாவிஷ்ணு எல்லோருமே மேடை மீது தோன்றப் போகிறார்களோ என்று எண்ணினோம்.

கருடன், மஹா விஷ்ணு வேஷத்தை வேண்டுமானால் மனிதர்களே போட்டுக் கொள்ளலாம். இந்த யானை, இந்த முதலையாக எல்லாம் மனிதர்கள் தோன்ற முடியுமா என்ன? ஏதோ பொம்மையை வைத்துத் தான் நாடகம் நடத்த முடியும்; கதையை ஓட்ட முடியும் போலும் என்று கருதினோம். ஆனால் நடந்தது எல்லாம். நாங்கள் நினைத்தபடி அல்ல.

ஒரே ஒரு நடிகர் மேடை மீது தோன்றினார். பின்னணி வாத்தியங்கள் அமைதியாக ஒலித்தன. மேடை மீது நின்ற நடிகர் இரண்டு கைகளையும் நீட்டி, அவைகளின் மூலமாக் நீர். நிறைந்த தடாகத்தில் அலை வீசும் மெல்லிய அலைகளைக் காண்பித்தார். பின்னர் அதே கைகளால் அல்லி மலரும் அற்புதக் காட்சியையுமே காண்பித்தார். இவற்றின் மூலமாக அல்லிக்குளமே எங்கள் கண் முன் வந்தது.

நடன அரங்கில் தடாகத்தையும் தாமரை மலரையும் இப்படி நம் கண் முன் கொண்டு வந்தவரே, பின்னர் மேடை மீது மெதுவாய் நடக்க ஆரம்பித்தார். இரண்டு காலாலே நடந்தாலும், அவர் நடந்த நடை நாலுகாலால் நடக்கும் பெரிய யானையின் காம்பீர்ய நடையாகயிருந்தது.

ஒரு கை, யானையின் தும்பிக்கை போல மெல்ல மெல்ல நெளிந்து கொண்டே யிருந்தது. இப்படி நடந்த யானை தடாகத்தில் இறங்குவதாகப் பாவனை. அங்கு நீர் உண்பதாகவும், தும்பிக்கையால் நீரை வாரி இறைப்பதாகவும் சிறப்பாகக் காட்டினார் நடிகர். இப்படி நடித்த சில நிமிஷ நேரங்களில் அவரே உடலை வளைத்த வளைப்பில் முதலை தண்ணீருக்குள் நீந்தி வருகின்ற காட்சி எங்கள் கண் முன் வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவரே, முதலை காலைப் பிடித்துக் கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாக மாறினார்.

பின்னர் அவரே கருடனாக, கருடன் மேல் ஆரோ கணித்து வரும் பெருமானாக எல்லாம் மாறி விட்டார். மேடையில், ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விட்டார். இத்தனையையும் நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஒரே ஒரு நடிகர், பத்து நிமிஷ நேரத்தில் மேடை மீது நின்று கொண்டே இந்த நடன நாடகத்தை ஆட, நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ, அதைப் போலவே நாடகத்தைக் காண்பவர்களும் கற்பனை பண்ணிக் கதை முழுவதையும் தெரிந்து கொள்ள, ஏன்? உணர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக, எல்லாம் ஒரு நடிகர் மாறி மாறி நடித்ததை எல்லாம் அன்று கண்டு களித்து மகிழ்ந்தேன். இன்றும் அதை எண்ணி மகிழ்கிறேன்.

இதே கலையழகைப் பின்னர்ச் சிற்ப உலகில் நான் கண்ட போது அப்படியே அதிசயித்து நின்றேன். தமிழ் நாட்டில் ஒரு சிற்பிக்கு ஒரு கல் கிடைக்கிறது. கல்லின் அளவோ நாலுக்கு இரண்டு {4அடி x 2அடி). அதன் கனமோ ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன், சிற்பி கஜேந்திர மோக்ஷத்தையே ஆம். அந்த அற்புதமான கதையைத் தான் தன் மனக் கண்ணில் கண்டிருக்கிறான்.

உள்ளக் கிழியில் உரு எழுதி வைத்திருந்ததைக் கல்லில் உருவாக்கிக் காட்டவும் முனைகிறான். இருப்பதோ ஒரு சிறு கல். அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த யானையையே பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் . காக்க வருகின்ற பெருமாள், அந்தப் பெருமாளைத் தூக்கி வருகிற கருடன் எல்லாம் உருவாக வேண்டுமே என்று கவலைப் படவில்லை சிற்பி. கிடைத்த கல்லிலே பெரும் பகுதியைக் கருடனுக்கும் பெருமாளுக்கும் ஒதுக்கி விடுகிறான்.

அடித்தளத்தில் ஒரு சிறிய இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த - யானையின் காலைப் பிடிக்கும் முதலையுமே இருக்கின்ற கொஞ்ச இடத்தில் உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான், அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து அவசரம், அவசரமாகவே வரும் அந்தப் பெருமாளின் கோலம் எல்லாமே உருவாகிறது கல்லில், சிற்பியின் சிற்றுளியால், என்ன வேகம்! என்ன வேகம்! இந்தப் பெருமாளின் வரவிலே என்று எண்ணும் படி செய்து விடுகிறான் சிற்பி. சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கரங்கள் போக, இன்னும் இரண்டு கரங்களில் ஒன்று, அபயப்பிரதானம் அளிக்கிறது, மற்றொன்று வரதத்தைத் குறிக்கிறது.

கருடனது உடல் அமைப்பிலே ஒரு கவர்ச்சி, கடவுளின் வடிவிலே ஓர் அழகு எல்லாவற்றையும் உருவாக்கிய கலைஞன் யானை, முதலைகளை செதுக்குவதிலும் நிரம்ப கவனம் செலுத்தியிருக்கிறான். அதனால் உயிருள்ள முதலையையும் உணர்ச்சி மிகுந்த யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். அப்படி அற்புதமாக ஒரு கல்லில் உருவாகி இருக்கும் சிலையைக் கண்டபின் தான், ஒரே நடிகர் இத்தனையையும் நாம் கற்பனை பண்ணிப் பார்க்கும். அளவில் நடித்துக் காட்டுவது அவ்வளவு அதிசய மில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த அழகான சிலை இருப்பது திருகண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில். திருக்கண்ணமங்கை செல்லவேண்டுமானால், திருவாரூருக்குச் செல்ல வேணும். அங்கிருந்து நாலு, ஐந்து மைல் மேற்கே குடவாசல் - கும்பகோணம் போகும் ரஸ்தாவில் போக வேணும். அந்த ரோட்டை விட்டு இறங்கி இன்னும் கொஞ்சம் மேற்கே நகரவும் வேணும். அப்படி நகர்ந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். குளத்தில் இறங்கிக் குளிக்கத் துணிவில்லாதவர்கள் நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதுடன் திருப்தி அடைந்து கொள்ளலாம்.

அதன் பின் குடைவருவாயிலைக் கடந்து சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பக்தவத்சலன் என்னும் பத்தராவிப் பெருமாளையே சேவிக்கலாம்,, பெருமாளைச் சேவித்த பின் கோயில் உட்பிராகாரத்தை வலம் வந்தால் காணலாம், அழகான சிற்பவடிவங்கள் சிலவற்றை. நீர் மல்கினதோர் மீனாய், ஓர் ஆமையுமாய், சீர் மலிகின்ற தோர் சிங்க உருவாகி கார்மலி வண்ணன் கண்ண மங்கைப் பெருமாள் காட்சிதருகிறான் என்று திருமங்கை மன்னன் பாடுகிறான்.

அந்தப் பெருமானின் பத்து அவதாரத்தையும் நாம் அங்குகாணமுடியாவிட்டாலும் "தாயெடுத்தசிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனாம்“ கண்ணனை வேணுகோபாலனாகவே காண்கின்றோம் ஒரு மாடக் குழியில். இத்துடன் பூமி தேவியையே காத்தளித்கின்ற வராக மூர்த்தியையும், இரணியன் குடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மனின் பயங்கர உருவையுமே பார்க்கின்றோம் அங்கு.

இவர்களோடு சேம மதில் சூழ் இலங்கையர்கோன் சிரமும் கரமும் துணித்த அந்த ஸ்ரீராமனையே சோதண்டம் ஏந்திய கையனாய்க் காண்கிறோம், இன்னுமொரு மாடக்குழியில், இத்துடன் நான் முன்னரே குறிப்பிட்ட கஜேந்திர மோக்ஷக் காட்சியையும் காண்கிறோம். மகிழ்கின்றோம். நம்மைப் போலவே திருமங்கை மன்னனும் இத்திரு உருவைக் கண்டு மகிழ்ந்திருக்க வேணும், இல்லா விட்டால்

இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய்

முதலை தன்னால் அடர்ப்புண்டு

கொலையார் வேழம் நடுக்குற்றுக். --

குலைய அதனுக்கு அருள் புரிந்தான்.

என்று இந்த கண்ண மங்கைக் காராளனைப் பாட முடிந்திருக்குமா என்ன? இத்தனை சிலைகளையும் தூக்கியடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு, ஆதிசேஷனை நினைத்தால், அவன் விரித்த படுக்கையில் சுகமாகப் படுத்து, அறிதுயில் கொள்ளும் அனந்தசயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். “பாற்கடலில் பாம்பணை மேல் பையத்துயின்றான். பரமன்" என்பது தானே கலைஞன் கற்பனை.

ஆனால் இங்குள்ள பரமனோ, ரொம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டு, எழுந்தே உட்கார்ந்திருக்கிறான். பாயாகச்சுருண்டு கிடந்த பாம்பே இங்கு கோப்புடைய சீரிய சிங்காசனமாக அமைந்து விடுகிறது, இந்த வைகுண்ட நாதனுக்கு. ஒரு காலை ஊன்றி, ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கும் தோற்றத்திலே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய திருக்கரம், அவன்றன் உல்லாசத்தையே காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய் திருமாமணிமகுடம் தாங்கி, புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் காணும் கலைச்சிகரம். இன்னும் இது போன்ற பல சிற்ப வடிவங்கள். ஆம் இக் கோயிலையே ஒரு நல்ல கலைக் கூடமாக அமைத்து வைத்து விட்டார்கள் நம் நாட்டுச் சிற்பிகள்.

இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீரே. இங்குள்ள தாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். நான் மட்டு மென்ன, இந்தக் கண்ண மங்கை பக்தவத்ஸலனைப் பாடிய அந்தத் திருமங்கை ஆழ்வாரே, அங்குள்ள அபிஷேக வல்லித் தாயாரைப்பாட மறந்து விட்டாரே!

வண்டமரும் மலர்ப்புன்னை .

வரிநிழல் அணி முத்தம்

தென் திரைகள் வரத்திரட்டும்

⁠திருக் கண்ணபுரத்து உறையும்

எண்திசையும் எழு கடலும்

இருநிலனும் பெரு விசும்பும்

உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு

இழந்தேன் என் ஒளிவளையே.

என்று, இந்த மங்கை மன்னன் கண்ணபுரத்தானை நினைந்து நினைந்து, தான் வளை இழந்ததைச் சொல்லிச் சொல்லி புலம்புகின்றபோது, இக்கண்ணமங்கை அபிஷேக வல்லியை நினையாதது அதிசயம் இல்லை தானே. ஆனால் நான் மங்கை மன்னன் போல் ஒரு மங்கை அல்லவே, ஆதலால் அபிஷேகவல்லி சந்நிதிக்கும் சென்றேன். வணங்கினேன். துதித்தேன், அங்கும் ஓர் அதிசயம் காத்துக் கிடந்தது எனக்கு. இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு. இந்தத் தேன் கூடு, அங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை.

ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப் பட்டிருப்பதற்குக் கதை மட்டும் உண்டு. கண்ணமங்கையானைப் பிரிய விரும்பாத முனி புங்கவர் பலர் தேனீயாகப் பிறக்கவரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்குக் கூடு கட்டி அனுவரதகாலமும் பக்தவத்சலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் சிரமமானதாக இல்லை. பெருமாளின் திருமார்பில் அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலேதான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு, திளைத்து எந்நேரமும் பாடிக் கொண்டே சுற்றிச் 'சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டையும் தேனீக்கள் பாடும் பாட்டையும் கேட்டுத்தானே பாட்டினால் உன்னை

என் நெஞ்சத்து இருந்தமை

காட்டினாய்

என்று பாடினானே மங்கை மன்னன், அது ஞாபகத்திற்கு வராமலா போகும்! இந்தத் தேன் கூட்டுக்கு, அதாவது இந்தக் கூட்டில் வாழும் முனிவர்களுக்கு, இன்று பூசை நடக்கிறது. திருக்கண்ண மங்கை செல்வோர் இதைக் கண்டு தொழாமல் இருப்பதில்லை. நாமும் செல்லலாம். அங்குள்ள கலைச் செல்வங்களை எல்லாம் கண்டு தொழலாம், முனிவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தேனைக் கூடக் கொஞ்சம் உண்டு மகிழலாம். இங்கு நடக்கும் உற்சவம், வைகுண்ட ஏகாதசி. வைகுண்டநாதன் பக்தவத்சலனாகக் கோயில் கொண்டிருக்கின்ற இடமல்லவா, வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் எல்லாம் செல்லலாம்.

6. எண்ணாயிரம்

நாம் வசிக்கும் இந்த மண்ணிற்குத்தான், இந்த பூமிக்குத்தான் எத்தனை சக்தி! கரடு முரடாய்ப் பரந்து கிடக்கும். ஓர் இடத்தைக் கொஞ்சம் கீறி அதனுள்ளே சில விதைகளைப் போட்டு விடுகிறோம். அன்று கொஞ்சம் மழையும் பெய்கிறது. இரண்டு மூன்று தினங்களில் அந்த - இடத்திலிருந்து எத்தனை எத்தனை அபூர்வமான சிருஷ்டிகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன! உண்ண உணவளிக்கும் கதிரை நீட்டிக் கொண்டு நெற்பயிர் வந்து விடுகிறது. உடுக்க உடையுதவும் பஞ்சைக் சிதறிக் கொண்டு பருத்திச் செடி வளர்கிறது, 'காய்க்கிறது, வெடிக்கிறது.

இன்னும் வித விதமான வர்ண ஜாலங்களைக் காட்டிக் கொண்டு மலர்களும் புஷ்பிக்க ஆரம்பித்து விடுகின்றன. நறு மணத்தை அள்ளியே வீசுகின்றன. அத்தனை அபூர்வ பொருள்களையும் தன்னுள்ளே தானே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலே தான் இந்த மண்ணை, இந்த பூமியைப் பூமா தேவி என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றார்கள். வந்தித்து வணங்கியும் இருக்கிறார்கள்.

சீதையின் அவதார தத்துவத்தை விளக்க விரும்பிய கம்பன் கூட இந்த உண்மையை நன்றாக உணர்ந்திருக்கிறான். பூமா தேவி என்னும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்களுக்கு. அருள் வடிவமாய்த் தரிசனம் கொடுக்கிறாள். அவளது அழகான மேனியிலிருந்து நெற்கதிராகிய பச்சைப் பசுங்கதிர்கள் வெளிவந்து பிரகாசிக்கின்றன.

ஆனால் அவள் சுய உருவை நம்மால் எல்லாம் காணமுடியவா செய்கிறது. பூமிக்குள் மறைத்து வைத்திருந்த சுய ரூபத்தை வெளிப்படுத்தியது போலவே உழுகின்ற கொழு முகத்தில் சீதை உதிக்கின்றாள் என்றெல்லாம் கூறுகின்றான்.

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி

பொழிகின்ற புவிமடந்தை திருவெளிப்பட்டெனப் புணரி

எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிந்துஒதுங்கித் தொழுகின்ற நன்னலலத்துப் பெண்ணரசி தோன்றினாள்.

என்பதுதானே கம்பனது பாட்டு,

சரி, பூமா தேவியின் அருள் உரு இன்னதென அறிந்து கொண்டோம். ஆனால் இந்தப் பூமாதேவியை அழித்து விட, சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத்தானே செய்கிறது? ஒரு கதிர் உதிர்கின்ற இடத்திலே இரண்டு கதிரைத் தோன்றச் செய்பவன் உலக வளர்ச்சிக்கே துணைபுரிகிறான் என்பர் பெரியோர், இதைத் தெரிந்தும் நாமே அணுகுண்டாலும் அக்கிரமத் தாலும் அவள் உருவையே சிதைக்க முற்படுகிறோம்.

இன்று நாம் முயல்கிறோம் என்றால் அன்றும் ஓர் அரக்கன் இதே முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். பூமாதேவியையே சுருட்டி எடுத்துக் கடலுள் மூழ்க அடித்து விட முயன்றிருக்கிறான். அன்றும் வந்தான் பூமகளைக் காக்க ஒருவன், ஓர் உழவன். எல்லா உலகங்களையும் காத்தனிக்கும் அந்தப் பரந்தாமனே பன்றி உருவில் தோன்றிக் கடலுள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். இப்படி வந்தவனையே வராக மூர்த்தி என்கிறோம், அவனை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

பரந்தாமனது பத்து அவதாரத்தையுமே உலக வளர்ச்சியின் உதாரணம் (Evolution) என்று கொண்டால், வராக அவதாரம் உழவன் செய்யும் திருப்பணியை உருவகப் படுத்துகிறதுதானே. ஆம், பூமிக்குள் இருக்கும் எத்தனை - எத்தனையோ சக்திகளை வெளிப்படுத்தி, மக்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் அனுபவிக்க மலர் வகைகளையும் அருளுபவன் அவனே அல்லவா? அடடா, என்ன அழகான கற்பனை, இந்த வராக மூர்த்தியை உருவாக்குவதிலே!

இத்தகைய கற்பனையைச் சித்தரிக்க விரும்புகிறார் ஒரு ஓவியர், கொஞ்சகாலத்திற்கு முன் நம்மிடையே இருந்தவர் தாம் அவர். ஆனால் பாவம், அவர் எதைக் கண்டார்? பூமியைக் கண்டாரா? பூமாதேவியைக் கண்டாரா? இல்லை. அவளது அருள் நிறைந்த சக்தியைத்தான் கண்டாரா? அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கில மோஸ்தரில் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் காணும் பூகோளப் படமும் பூகோள உருண்டையும் தானே!

வராகம் என்றால் என்ன என்று தெரியும், வராக உருவில் பரந்தாமன், பூமியை எடுத்து வந்ததும் தெரியும். உடனே உருவாகிவிட்டது சித்திரம். வராக மூர்த்தியின் மூக்கின் வளைவுக்கேற்ப பூகோளமும் உருண்டிருந்தது பொருத்தமாகப் போயிற்று. பூகோளத்தின் ஒரு பகுதி (Eastern Hemisphere) ரொம்ப ஜோராய் ஜம்மென்று இந்த மூக்கிலே உட்கார்ந்து இருப்பது போலப் படம் உருவாகி விட்டது. பல வண்ணங்களில் படம் அச்சாகியும் விட்டது நாமும் நல்ல படம் என்று சொல்லி வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டு வீட்டில் தொங்கவிட்டுக் கொண்டோம்.

ஆனால் இப்போது படத்தைப் பாருங்கள். வீடு தோறுந்தான் இருக்குமே. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, என்ன நீங்கள் சொன்னீர்களே அந்தக் கற்பனை ஒன்றும் இந்தப் படத்தைப் பார்த்ததில் என்னுள்ளத்தில் உதயமாகவில்லையே என்றால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

இந்தக் கற்பனையின் அற்புத உருவைக் காண வேண்டுமானால், நேரே பேரணி ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் வாங்குங்கள். அங்கிருந்து நேரே மேற்கே பார்த்து நாலு ஐந்து மைல் நடந்து போங்கள். இடையில் வரும் சிற்றூர்களில் வேண்டுமானால், எண்ணாயிரம் என்கிற ஊர் எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எண்ணாயிரம் என்ற ஊருக்குச் சென்றதும் அங்குள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குப் போங்கள். வழியில் யாராவது மறித்து ஊர்க்கதை, ஸ்தலத்தின் பெருமையை எல்லாம் எடுத்துரைக்க முயன்றால், 'அதெல்லாம் அப்புறம்' என்று சொல்லி நிறுத்தி விடுங்கள்.

கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மூலஸ்தானத்திற்கே போங்கள். போகும்போது, கோயில் உள்ளேயே நெருஞ்சிமுள் உங்கள் காலைப் பதம் பார்த்தால் என்னைத் திட்டாதீர்கள். இதற்கெல்லாம் தக்க பலன்தான் கைமேல் கிட்டப் போகிறதே. சுதையில் உருவாகியிருக்கும் மூலவர் நரசிங்கப் பெருமாளையெல்லாங்கூடப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

கர்ப்பக்கிருகத்திற்கு அடுத்த கட்டிலே அந்தராளத்தில் வடக்கே பார்க்க நின்றுகொண்டு உங்கள் டார்ச் லைட்டை அடியுங்கள். அவ்வளவுதான். உங்கள் முன்னால் எட்டடி உயரத்தில் வராகமூர்த்தி ஆஜானுபாகுவாய் காட்சியளிப்பார். சங்கு சக்கரதாரியாக அவர் எழுந்து நிற்கின்ற திருக்கோலமும், அவரது மடியிலே கூப்பிய கையுடன் பூமாதேவி இருக்கின்ற நேர்த்தியும் பார்க்கப் பார்க்கப் பரவசத்தையே தரும். மூர்த்தியின் தூக்கிய திருவடிக் கீழ் அரக்கன் குன்றி நிற்பதையும் பார்க்க மறந்து விடாதீர்கள். அடடே, எவ்வளவு அருமையான சிற்பம்! இந்த இருட்டறைக்குள்ளே ஒளிந்து கிடப்பானேன்?

அதை உலகுக்கு, ஆம், தமிழ் உலகத்துக்குத்தான் எடுத்துக் காட்ட பரந்தாமனது. வராக அவதார மகிமையை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டாமா? நெருஞ்சி முள் காலில் தைத்தாலும் மூர்த்தியைக் கண் குளிரத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிட்டி விடுகிற தல்லவா?

“எண்ணாயிரம்' பேரே அழகாக இருக்கிறது. வாய் நிரம்பவும் இருக்கிறது. இந்தப் பெயர் இந்தச் சிற்றூருக்கு வருவானேன்? கிராமத்தாரிடம் கேட்டால் இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்; அதனால்தான் எண்ணாயிரம் என்ற பேர் நிலைத்தது என்பார்கள்.

ஆனால் கொஞ்சம் துருவி ஆராய்ந்தால் அதில் உண்மையில்லை என்று தெரியும். இந்தச் சிற்றூர் பல்லவர் ஆட்சியில் பருத்திக் கொல்லை என்ற பெயருடன் பிரபல மாயிருந்திருக்கிறது. இங்கே ஒரு பரம பாகவதர். அவருக்கு ஓர் அருமை மனைவி. இருவரும் அதிதிகளையும் சாதுக்களையும் உபசரிப்பதில் சிறந்தவர்கள். இருந்த பொருள் அத்தனையையுமே வாரி வாரி வழங்கி விடுகின்றனர்.

இந்த அதிதி சத்காரத்தில் அவர்கள் செய்த வஸ்திர தானமோ சொல்ல முடியாது. கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது ஒரே ஒரு வஸ்திரமே. பாகவதர் உஞ்ச விருத்திக்கு வெளியில் சென்றால் அந்த நாச்சியார் வஸ்திரமின்றி வீட்டில் மறைந்திருப்பார், இறைவன் சோதனை பின்னும் கடுமையாயிற்று. உடையவர் ஸ்ரீபெரும் புதூரிலிருந்து திருவஹீந்திரபுரத்திற்குச் செல்லும் வழியில் பருத்திக் கொல்லை பரம பாகவதரின் பிரதாபத்தைக் கேள்விப்பட்டு தம் பரிவாரங்களுடனும் அடியவர்களுடனும் பருத்திக் கொல்லைக்கு எழுந்தருளுகிறார். அவர்கள் வரும் வேளையில் நாச்சியார், வீட்டில் வஸ்திரமின்றி மறைவில் இருக்கிறார்.

கணவரோ உஞ்சவிருத்திக்குச் சென்றிருக்கிறார். தம் வீட்டைத் தேடிவந்த உடையவருக்கும் அடியார்களுக்கும் மறைவிலிருந்தே முகமன் கூறி எல்லோரையும் நீராடி விட்டு உணவருந்த வரும்படி வேண்டிக் கொள்கிறார், நாச்சியார். நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

நாச்சியார் கொஞ்சம் சிந்திக்கிறார். அவருக்குத் தெரியும் அவ்வூரில் உள்ள பணக்காரச் செட்டியார் ஒருவருக்குத் தம்மேல் ரொம்ப நாளாகக் கண் என்று. அவருக்குச் சொல்லியனுப்புகிறார். தம் கற்பையே விற்று அடியவர்களுக்கு உணவூட்டத் துணிந்து விடுகிறார். செட்டியார் வருகிறார். நாச்சியார் எண்ணத்தை அறிகிறார். உடனே வந்து, குவிகின்றன உடுக்க உடையும், உணவு தயாரிப்பதற்கு வேண்டிய சாமான்களும். செட்டியாரை இரவில் வந்து சேரும்படி நாச்சியார் சொல்லியனுப்பி விட்டார். உஞ்சவிருத்திக்குச் சென்ற பாகவதர் வந்தார். விஷயம் அறிந்தார். சந்தோஷம் அடைந்தார். உடையவர் பரிவாரத்திற்கு அருமையான விருந்தொன்று நடந்தது. குறித்த இரவும் வந்தது. செட்டியாரும் கோலாகலமாக வந்தார்.

ஆனால் அவரால் நாச்சியாரின் தெய்வீக ஒளிமுன், கண்திறக்க முடியவில்லை. தனது தவறை உணர்ந்தார். நாச்சியார் அடிகளில் வீழ்ந்து வணங்கினார். மன்னிப்பைப் பெற்று அகன்றார். நாச்சியார், செட்டியார் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்த உடனே உடையவரும் இருந்து விட்டார். அங்கேயே கொஞ்சகாலமாக, சமணர்கள் கொதித்தெழுந்தனர். வாதப் பிரதி வாதங்கள் மும்முரமாய் நடந்தன. சமணர்கள் தோற்றனர். தோற்றதோடு மட்டுமல்லாமல் ஒப்பந்தப்படி கழுவேறவும் தயாராகி விட்டனர். பரம தயாநிதியான உடையவர் அத்தனை சமணர்களையும் அந்தணர்களாக ஆக்கினார். எண்ணாயிரம் பேர் அன்று புனர் ஜென்மம் பெற்றனர். பருத்திக் கொல்லையே எண்ணாயிரம் என்று பெயர் பெறலாயிற்று.

அஸ்டஸகஸ்ரம் என்ற பிராமண வகுப்பினர் தோன்றிய கதை இதுதான் என்பர் தெரிந்தவர்கள், இவர்கள் குடியேறிய கிராமங்கள் பிரம்ம தேசம், சதுர் வேதி மங்கலம் என்றெல்லாம் தெரிகிறது.

எண்ணாயிரத்தில் அழகிய நரசிங்கப்பெருமாள் கோயில் உடையவரால் உருவாக்கப்பட்டது என்பது கர்ண பரம்பரைக் கதை, நரசிங்கரின் உக்கிரம் அளவு கடந்ததாய் இருந்திருக்கிறது. மூலவிக்கிரகம் பின்னப்பட்டு வெளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுதையில் ஆக்கப்பட்ட நரசிங்கர்தான் இன்றைய மூலவர்.

பெருமாளையும், பெருமாளுக்கு ஒரு கோயிலையும் ஆக்கிக் கொடுத்த உடையவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். நல்ல கருங்கல்லில் உருவாகியிருக்கிறார். உலோகத்தில் வார்க்கப்பட்டவரோ என்று சொல்லும்படி நல்ல மழமழப்புடன் இருக்கிறார். அவரே காட்சி கொடுக்கிறார் பக்கத்தில். பருத்திக் கொல்லை நாச்சியார் அளித்த விருந்து காரணமாகவோ என்னவோ உடல் தளதள என்றிருக்கிறது.

நானறிந்த மட்டில் வராக மூர்த்தியும் உடையவரும் இவ்வளவு அழகாய் வேறிடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்விரு சிற்பங்களைக் காண்பதற்காகவே இந்த ஊருக்கு ஒரு பயணம் கட்டலாம். கட்டுங்களேன்!

7. செவிசாய்த்த விநாயகர்

ஒரு சிறு கதை. ஆம் பள்ளிச்சிறுவராக இருந்த போது நாமெல்லாம் படித்தக்கதைதான். வகுப்பில் வரிசையாக பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லோரும் ஏழு, எட்டு வயது நிரம்பாதவர்களே. திண்ணைப் பள்ளிக் கூடந்தானே. வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பையன்களில் சிலர் பாடத்தைக் கேட்கிறார்கள், சிலர் விளையாடுகிறார்கள். சிலர் முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கு ஓர் எலி வளை, வளைக்குள் ஓர் எலி எதனையேர் இழுத்துக் கொண்டு செல்கிறது. இதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு பையன். பாடம் நடத்திக் கொண்டிருக்கிற உபாத்தியாயர் திடீரென்று அந்தப் பையனைப் பார்த்து கேட்கிறார்:

'அடே! நான் சொல்லுகிறதெல்லாம் உன் காதில் நுழைகிறதாடா' என்று எலியையே கவனித்துக் கொண்.டிருந்த பையன் படக் கென்று 'ஆமா சார் எல்லாம் நுழைந்து விட்டது வால் மாத்திரம்தான் நுழையவில்லை சார்' என்று பதில் சொல்லுகிறான். இத்துடன் இந்த ஹாஸ்யக்கதை முடிந்து விடுகிறது. நாமும் கேட்டுக் களித்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பதிலைக் கேட்டு அந்த வாத்தியார் சும்மாவா இருந்திருப்பார்? பயலே! பாடத்தைக் கவனிக்காமல் எலி வளையில் நுழைவதையா அத்தனை அக்கறையோடு கவனித்துக் கொண்டே இருந்திருகிறாய் என்றுதான் கேட்டிருப்பார் -

இந்த வாத்தியார் வேலையையே தன் சீமந்த மைந்தனான விநாயகரிடம் செய்திருக்கிறார், சிவபெருமான். அந்தக் கதை தெரிய வேண்டாமா! கதை இதுதான். அன்பில் என்ற ஒரு சிறு ஊர் கொள்ளிடகரையிலே இன்றைய லால்குடி என்னும் திருத்தவத்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஊர் சிறியதே என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய ஊர். அன்பில் கிராமத்தில் புதை பொருளாகக் கிடைத்த செப்பேடுகள் சோழ மன்னனது சரித்திரத்தையே உருவாக்க மிகவும் உதவியிருக்கிறது.

மேலும் அன்பில் அநிருத்தர், அந்த சுந்தர சோழன் என்னும் முதல் பராநந்தகனது அமைச்சராக இருந்து பெரும்புகழ் எய்திய வராயிற்றே. அந்த அன்பில் என்ற தலத்திலே, ஆலந்துறை என்ற ஒரு கோயில். அங்கு கோயில் கொண்டிருக்கிறார் சத்தியவாகீசன், துணைவி சௌந்திர நாயகியுடன். சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் பூசித்த காரணத்தால் சத்திய வாகீசர் என்று பெயர் பெற்றுமிருக்கிறார்கள்.

பாலறாவாயராம் அந்த சீர்காழிப் பிள்ளை ஞான சம்பந்தர், தலம் தலமாகச் சென்று, ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள மூர்த்திகளைப் பாடிப்பாடி நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் இந்த அன்பில் ஆலந்துறைக்கும் வந்திருக்கிறார். வந்தவர் கொள்னிடத்தின் தென் கரைவழியாக வந்திருக்கிறார். கொள்ளிடத்திலோ பெருவெள்ளம். ஆற்றைக் கடக்கப் பாலமோ, பரிசிலோ இல்லை,

அந்தத் தென்கரையில் நின்று - பார்த்தவருக்கு வடபக்கம் நீண்டுயர்ந்த கோபுரத்தோடு கூடிய கோயில் தென்பட்டிருக்கிறது. ஆதலால் கொள்ளிடத்தின் தென் கரையில் நின்றே பாடியிருக்கிறார்.

கணை நீடு எரிமார் அரவம் வலரவில்லாய்

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

என்று பாடத்துவங்கியிருக்கிறார். இந்த பாட்டு ஆலந்துறைப் பெருமான் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. காரணம் கோயிலில் வேதம் ஓதும் மாணவர்கள் வேதத்தை உச்சஸ்தாயியிலே ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒலியை மீறிக்கொண்டு சம்பந்தர் பாடல் இறைவன் காதில் விழுவது கஷ்டத்தானே. இதை சம்பந்தருமே உணர்கிறார் திரும்பவும்.

சடையார் சதுரன் முதிரா மதிசூடி

விடையார் கொடி ஒன்று! உடை எந்தைவிலோ

கிடைஆர் ஒலிஒத்து: அரவத்து இசைக்கிலனை

அடையார் பொழில் அன்பில்! ஆலந்துறையாரே.

என்றே பாடுகிறார். பாடல் இறைவன் காதில் விழுந்து விடுகிறது. வந்திருப்பவர் ஆளுடைய பிள்ளையார். அவர் அக்கரையில் நின்று பாடுகிறார். என்பதை உணர்கிறார். பாட்டை அனுபவிக்கவே முனைந்து விடுகிறார். இந்த நிலையில் தன் பக்கல் இருந்த மூத்த பிள்ளை, பிள்ளையாரோ பாட்டைக் கேட்காமல் எங்கோ கவனமாக . முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். (அன்றைய பள்ளிப்பிள்ளையைப் போலவே தான் வாகனமாம் மூஞ்சூாறு வளையில் நுழைவதைக் கவனித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ} இதைப் பார்த்த அந்தப் பரம ரஸிகரான பெருமான்.

தன் பிள்ளையின் காதைப் பிடித்துத் திருகி, “கேளடா நம்ம சம்பந்தன் பாடுகிறான் அக்கரையிலிருந்து" என்று சொல்கிறார். அவ்வளவுதான் பிள்ளையாரும் அப்போதே செவிசாய்த்துப் பாடல்களை கேட்க முனைந்து விடுகிறான். தந்தையும் மகனுமே ஞான சம்பந்தரின் மற்ற ஒன்பது பாடல்களையுமே நன்கு அனுபவித்திருக்க வேண்டும்.

இத்தனையும் உண்மையாய் நடந்ததா என்று கேட்காதீர்கள். நடந்ததோ - நடக்கவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இன்று, அந்தத் கோயிலில் நுழைந்தும், கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் ஒரு மூலையில், அந்த செவி சாய்த்த விநாயகர் சின்னஞ்சிறிய கல்லுருவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரையே பார்க்கிறீர்கள். அட்டைப் படத்திலே அவர் உட்கார்ந்திருக்கிற ஜோரைத் தான் பாருங்களேன். ஒரு காலை மடித்து ஒரு காலை ஊன்றித்தலை சாய்த்து, பாடலைக் கூர்ந்து கேட்டு கொண்டல்லவா இருக்கிறார். முகத்திலேதான் எத்தனை பாவம். இந்த செவிசாய்த்த விநாயகரைப் பார்க்கவே ஒரு நடைபோகலாம், அந்த அன்பில் ஆலந்துறைக்கு.

இன்றைக்கு நாட்டில் மக்களுக்கு எத்தனை எத்தனையோ குறைகள். அந்தக் குறைகளை எடுத்துக் கூற பத்திரிகைகள், மேடைப் பிரசங்கங்கள் வேறே. ஆனால் நாட்டிலே இருக்கும் ஆரவாரத்திலே, இப்படிக் குறைகளை எடுத்துக்கூறும் குரல் எல்லாம் நாட்டை ஆளுவோர் காதில் விழவா செய்கிறது? இவர்களுடைய காதையும் திருகி, இதையும் கொஞ்சம் கேளுங்கள் என்று சொல்ல ஓர் ஆலாந்துறையார் வேண்டியிருக்கிறது. ஆளுபவர்கள் பிடித்து வைத்த பிள்ளையார்களாக இராமல், செவிசாய்த்திருக்கும் விநாயகர்களாக மாற வேணும். இந்த ஆண்டின் விநாயக சதுர்த்தியிலே அப்படி இவர்கள் மாற இந்த செவி சாய்க்கும் விநாயகனையே வேண்டிக் கொள்வோம்.

8. வேலுக்குரிச்சி வேட்டுவன்

இன்றைய இலக்கிய உலகம் சிறுகதை உலகம். சிறுகதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாக இருப்பதையே பார்க்கிறோம். ஏதோ பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த லைலா மஜ்னூ, அனார்க்கலி முதலிய கதைகள்தாம் தமிழ்நாட்டின் காதல் கதைகள் என்றில்லை. அதற்கும் எவ்வளவோ காலத்திற்கு முந்தியே தமிழகத்தில் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள், அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு காதல் கதைதானே. அவைகளையும் தூக்கி அடிக்கும் வகையில் புராண இதிகாசங்களில் வரும் சீதா கல்யாணம், ருக்மணி பரிணயம், வத்சலா கல்யாணம், வள்ளித் திருமணம் எல்லாம் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் அல்லவா?

வடமொழிக் கவிஞனான வான்மீகி, சீதையை ராமன் பெற்றது, வில்லொடித்து வெற்றிப் பரிசாக என்று கூறினால், அக்காவியத்தைத் தமிழாக்கிய கம்பன், சீதா கல்யாணத்தையும் ஒரு காதல் கதையாக அல்லவோ மாற்றியிருக்கிறான்! இந்தக் கதை கூட வடநாட்டிலிருந்து தென்னாடு வந்ததே. ஆனால் தமிழ்க் கடவுளான முருகன், கதை ஓர் அற்புதமான காதல் கதை அல்லவா? எத்தனை தரம் கதையாகக் கேட்டாலும், படமாகப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாத அமர கதையாக அல்லவா இருக்கிறது!

இந்தக்கதையிலே கூட ஒரு சிறப்பு. சூரபதுமனை சம்ஹரித்து, தேவர் துயர் துடைத்ததற்கு வெற்றிப் பரிசாக, தேவ இந்திரன் மகள் தேவயானையை மணந்தவன், பின்னர் காதலித்து மணக்கிறான் வள்ளியை, வடநாடு தென்னாடு இரண்டையும் இணைக்கும் முறையில் மட்டுமல்ல. தேவர்கள் - மக்கள் இவர்களையும் இணைக்கும் முறையில் அல்லவா இந்த வள்ளியை மணந்திருக்கிறான்! இந்தக் கதையை கச்சியப்பர் தாமியற்றிய கந்த புராணத்தின் கடைசிப் பகுதியாக அமைத்திருக்கிறார். அவர் சொல்லும் கதை இதுதான்.

திருச்செந்தூர் என்னும் திருச்சீரலை வாயிலே சூர சம்ஹாரம் முடித்து, திருப்பரங்குன்றத்திலே தெய்வயானையை மணந்து, அமைதியாகக் குடும்பம் நடத்த திருத்தணிகைக்கு வந்து சேர்கிறான் முருகன். திருத்தணிகைக்கு சில காத தூரத்திலே காடும் மலையுமான பிரதேசம் ஒன்றிருக்கிறது. அங்கு வேட்டுவக்குடி மக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தலைவனாய் நம்பிராஜன் இருக்கிறான். இவனுக்கு ஆண்மக்கள் எழுவர் இருக்கின்றனர். என்றாலும் பெண் குழந்தை இல்லையே என்று ஏங்குகிறான். அதற்காகத் தன் வழிபடு கடவுளான முருகனையே வேண்டுகிறான். முருகனது அருளால் ஒரு மானின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை வள்ளிக் கிழங்கு எடுத்த குழியில் வைத்து விட்டு மான் ஓடி மறைந்து விடுகிறது.

அப்பக்கமாக வந்த நம்பிராஜன் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறான். வள்ளிக் கிழங்குக் குழியில் கண்டெடுத்த குழந்தையை வள்ளி என்றே அழைக்கிறான். அவளும் வளர்ந்து பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கையாகிறாள்.

வேடர் குல முறைப்படி அவளைத் தினைப் புனத்துக்கு நம்பிராஜன் அனுப்புகிறான். அவளும் தன் தோழியருடன் தினப்புனம் காவல் காத்து வருகிறாள். கிளிகளும், மயில்களும், பூவையும் புறாக்களும் தினை கொய்ய வந்தால் அவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறாள். இந்த வள்ளியை நாரதர் பார்க்கிறார். இந்த அழகியை அடைய வேண்டியவன் அந்த முருகனான தலைவனே அல்லவா - என்று நினைக்கிறார்.

உடனே அவர் தன்னையே பாங்கனாக அமைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்குள்ள தலைவனாம் முருகனிடம் வள்ளியைப் பற்றிக் கூறுகிறார். முருகனும் வள்ளி தினைப்புனம் காக்கும் மலைப் பிரதேசத்திற்கே வருகிறான். காலிலே கழலும், இடையிலே கச்சும், தோளிலே வில்லும் ஏந்தி கரிய மேனியும் நெடிய வடிவும் தாங்கி வேட்டுவர் கோலத்திலேயே வருகிறான். தினைப்புனங்காத்து நிற்கும் வள்ளியை காண்கின்றான்.

ஒத்த குலமும் ஒத்த நலனும் உடைய தலைமகனும் தலைமகளும், அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஊழ்வினை வசத்தில் ஒருவரை ஒருவர் கண்டு தமிழர் மரபிற்கேற்ப இருவரும் காதல் கொள்கின்றனர். அங்கே ஒரு சிறு காதல் நாடகமே நடக்கிறது. 'நான் துரத்தி வந்த மான் இங்கு வந்ததுண்டோ ?' என்று கேட்டுக் கொண்டே வள்ளியின் பக்கலில் வருகிறான் வேட்டுவ முருகன். அவளும் துரத்தி வந்த மானுக்கு அடையாளங்கள் கேட்டு நிற்கிறாள்.

நமக்குத் தெரியும் ஏனல் காவல் இவளும் அல்லள், மான் வழிவருபவன் இவனும் அல்லன் என்று. இந்த நிலையில், தன் மகளைக் காணப் பரிவாரங்களுடன் வருகிறான் நம்பிராஜன். எதிர்பாரா வகையில் இந்த இடையீடு ஏற்பட்டதன் காரணமாக, வேட்டுவனாக வந்த முருகன் வேங்கை மரமாக மாறி அங்கு நிற்கிறான். புதிதாகத் தோன்றிய வேங்கையே உனக்கு இனிய

துணையாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் திரும்பு கிறான் நம்பிராஜன். வேங்கையாக இருந்த முருகனும் திரும்ப வேடுவனாகி, வள்ளியை அடுத்து, காதல் மொழிகள் பேசுகிறான். வள்ளியின் உள்ளத்திலுமே காதல் அரும்புகிறது. திரும்பவும் நம்பிராஜன் பரிவாரம் அங்கு வருவதைக் கண்டு வள்ளி வேட்டுவனை ஓடிவிடுமாறு பணிக்கிறாள்.

முருகனும் ஓடிவிடுவது போல் பாவனை செய்து விட்டு ஒரு விருத்தனது வடிவிலே நம்பியின் முன் ஆஜராகிறான்.

தான் குமரித்துறையில் நீராடிச் செல்வதாகச் சொல்கிறான். நம்பியும் இந்த வார்த்தையை நம்பி, விருத்தனான முருகனை தன் மகள் வள்ளியின் பாதுகாப்பிலேயே தினைப்புனத்தில் இருத்திவிட்டுச் செல்கிறான். அவளும் இவனுக்கு தேனும் தினை மாவும் பிசைந்து கொடுத்து உபசரிக்கிறாள். இவனோ தன் வயதிற்கு அடுக்காத காதல் மொழிகள் பேசுகிறான்.

அவளோ இந்த விருத்தனை வெறுக்கிறாள். கடைசியில் தன் விருப்பம் எளிதில் நிறைவேறாது என்பதறிந்து தன் தமையனான அத்தி முகத்தானை நினைக்கிறான். அவனும் யானை உருவில் வந்து வள்ளியை பயமுறுத்துகிறான். அந்தப் பயத்தை நீக்கும் வகையில், விருத்தனான முருகன் வள்ளியை அணைத்துக் கொள்கிறான். தன் சுய உருவையும் காட்டுகிறான்.

இதற்குள் தினைப்புனம் காவல் வேலை முடிந்து, வள்ளி அரண்மனை திரும்பி விடுகிறாள். முருகனும் அரண்மனை சென்று வள்ளியை அவன் தந்தை அறியாமல் சிறை எடுத்து வருகிறான். வேடுவர் தலைவனான நம்பி, முருகனும் வள்ளியும் சென்ற வழியில் தொடர்ந்து வருகின்றான். போர் நிகழ்கிறது. போரில் வேடுவர் மடிகின்றனர் பின்னர். முருகனே வேட்டுவர்களையெல்லாம் எழுப்பி, தன்னையும் யாரென்று தெரிவித்து வள்ளியை மணம் புரிந்து கொள்கிறான். தன் காதல் மனைவியான வள்ளியையும் அழைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்கு தன் இரண்டு மனைவியருடன் இல்லறம் நடத்துகிறான்.

இதுதான் கதை, தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப இக்கதை அமைந்திருப்பது சுவையாக இருக்கிறது, தமிழ் நாட்டுத் தலங்களில், முருகனைப் பல கோணங்களில் கண்டு களித்த நான் வள்ளிமலை என்னும் தலத்திற்கு தினைப்புனம் காக்கும் வள்ளியையும், வேட்டுவனாகி வந்த வேலனையும் காணும் ஆவலுடனேயே சென்றேன்.

அதற்காக நூற்றுக்கு மேற்பட்ட படிகள் எல்லாம் ஏறி மலையை அடைந்தேன். அங்குள்ள பாறைகள், குகைகள், கோயில் எல்லாம் சுற்றி அலைந்தேன். வள்ளிமலை என்ற பெயருக்கு ஏற்ப, வள்ளி கவண் ஏந்திய கையளாய். ஒரு பாறையில் சிற்ப வடிவில் இருப்பதைக் கண்டேன்.

சரி, இங்கு வள்ளியிருந்தால் அவளைத் தேடிவந்த வேடுவனும் இருக்கத்தானே வேண்டும் என்று அவனைத் தேடினேன் அங்கு அவன் அகப்படவில்லை. கோயிலுள் சிலையாகவும் செப்புப் படிமமாகவும் இருப்பவன், வள்ளி தேவயானையுடன் இருக்கும் முருகனாகவே இருக்கிறான். அதனால் ஏமாற்றமே அடைந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு அன்பர், வள்ளியை வேலன் மணந்த தலம், கன்னியாகுமரிப் பக்கம் அல்லவா இருக்கிறது என்றார். அங்கும் சென்றேன்.

குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள குமார கோயிலில் வள்ளியும் முருகனும் தனித்துக் கம்பீரமாகச் சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆம், திருமண கோலத்தில்தான் இருக்கிறார்கள். தெய்வயானைக்கு அங்கு இடமில்லைதான். என்றாலும் அங்கும் வேட்டுவ வடிவில் குமரனைக் காண முடியவில்லை. இப்படியெல்லாம் அலமந்து நிற்கும் போதிலே, சென்ற வருஷம் நாமக்கல்லுக்குச் சென்றிருந்தேன்.

அங்குள்ள அன்பர்கள் கொல்லிமலையிலே வேலுக் குரிச்சி என்ற ஊரிலே உள்ள கோயிலிலே உள்ள முருகன் வேட்டுவக் கோலத்தினன் என்றார்கள், நாமக்கல்லிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் உள்ள அந்த வேலுக்குரிச்சிக்கே சென்றேன். அங்கே கொல்லிமலைச் சாரலிலே உள்ள ஒரு குன்றிலே ஒரு சிறு கோயில். ஏற வேண்டியதெல்லாம் ஐம்பது படிகளே. அக்கோயிலைச் சுற்றி ஒரு சிறுமதில். அம்மதிலின் கீழ்புறம் ஒரு வாயில். அதன் வழி நுழைந்து, கோயிலின் தென்புறமுள்ள பாதாள வாயில் வழியே உள்ளே சென்றால் மேற்கே பார்த்த கருவறையில் வேலேந்தி நிற்கிறான் வேலன். அவன் சுமார் மூன்று அடி உயரமே உள்ளவன். என்றாலும் நிற்பதிலே ஒரு மிடுக்கு. தலையிலே வேட்டுவக் கொண்டை, காலிலே வேடுவர் அணியும் பாதரட்சை, வலக்கையிலே ஒரு வேல், தொடையில் வைத்திருக்கும் இடக்கையிலே ஒரு கோழி சரி, சரியான வேட்டுவ வடிவிலே உள்ள முருகன் இவன் தான் என்று தீர்மானித்தேன்.

வேலுக்குப் பதில் வில் மட்டுமே ஏந்தியவனாய் நின்றுவிட்டால், வேட்டுவ வடிவம் பூரணமாகி விடும் என்டாது என் எண்ணம். இந்த வடிவழகனை நான் வணங்கிக் கொண்டிருந்தபோது, இப்படி வேட்டுவ வடிவில் உள்ள முருகனை நான் நீண்ட நாளாகத் தேடி அலைத்திருக்கிறேன். வேறு எங்கும் கண்டதில்லை என்றேன், பக்கத்தில் இருந்த அன்பர் திருச்செங்கோடு என்னும் தலத்தில், மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள முருகனைப் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஓ! பார்த்திருக்கிறேன். அவனும் இடக்கையில் கோழி ஒன்றை இடுக்கியிருக்கிறான் என்பதும் தெரியும். என்றாலும் இந்த செங்கோட்டு வேலவனை மற்றபடி வேட்டுவன் என்று சொல்லும் வகையில் உருவ அமைப்பு இல்லையே என்றேன்.

வேலுக்குரிச்சி வேலவன் நல்ல வேட்டுவ வடிவினன். தமிழ் நாட்டில் வேறு இடங்களில் காணக் கிடைக்காத வடிவினன். வள்ளியை மணம் புணர வந்த நிலையில் முதற்படி இந்நிலை. நமக்கெல்லாம் அவன் வேட்டுவனாகக் காட்சி கொடுத்தாலும் எல்லாம் அறிந்த அந்த வள்ளியின் கண்களுக்கு அவனே தான் மணக்க விரும்பிய வேலவன் என்று தெரியாமல் இருக்குமா என்று எண்ணினேன். என் எண்ணத்தை உணர்ந்தாரோ என்னவோ அர்ச்சகர் கவசம் சாத்தட்டுமா என்றார். 'சரி' என்றேன். உடனே திரையை இழுத்து மறைத்து விட்டு விபூதி அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் அணிவித்துப் பின்னர் திரையை விலக்கினார்.

அன்று வள்ளியின் கண்களுக்கு வேடன் எந்த உருவில் தோன்றியிருப்பான் என்பதையுமே கண்டேன். இளைஞனாக, அழகனாக இருப்பவன்தானே முருகன், இளமையும், அழகும் நிறைந்தவனாக இருப்பதோடு, நல்ல ராஜ கம்பீர நாடாளும் நாயகனுமாக அல்லவா அவன் மாறி விட்டான். இந்த நாயகனைக் கண்டு நங்கை வள்ளி காதல் கொண்டு நின்றதில் வியப்பில்லைதான்!

இந்த வேட்டுவ முருகனது ஒரிஜினல் வடிவினையும், கவசம் அணிந்த கவின் பெறு வனப்பினையும் காண நீங்கள் எல்லாம் செல்ல விரும்புவீர்கள். சொந்தக்கார் உள்ளவர்கள் மட்டுமே சௌகர்யமாகச் செல்லலாம். இல்லை என்றால் இரண்டு மைலாவது நடக்கக் காலில் திறன் இருக்க வேண்டும். மலை ஏறும் சிரமமும் கொஞ்சம் உண்டு. ஆனால் அத்தனை சிரமமும் இல்லாமலேயே அந்தக் கோலங்கள் இரண்டையும் நீங்கள் காணுகிறீர்கள், பக்கத்தில் உள்ள படங்களிலே இந்த வேட்டுவனை

வள்ளிக் கிசைந்த

மணவாளன் வேட்டுவனாய்

அள்ளிக் கொளும் பேர்

அழகுடனே - துள்ளுகின்ற

கோழியினைக் கையிடுக்கி

கொல்லிமலைச் சாரலிலே

வாழுகின்றான். சென்றே வணங்கு!

என்றே நான் கூறினால், 'சரி' என்றுதானே தலை அசைப்பீர்கள் நீங்கள்?

9. தமிழ் நாட்டின் அஜந்தா

ஒரு நாள் காலை நேரம். நானும் சில நண்பர்களும் கன்னியா குமரியிலிருந்து திருவனந்தபுரத்துக்குப் பயணம் புறப்பட்டோம், நாற்பது ஐம்பது மைல் மேடு பள்ளங்களின் வழியாக. எல்லாம் நல்ல 'சிமண்ட்' சாலை போடப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் காரில் போவதே ஒரு இன்பம். போகிற வழியெல்லாம் தோப்புகள், வயல்கள், ஆறுகள், சிற்றோடைகள், தாமரைத் தடாகங்கள்தான். கண் நிறைந்த காட்சிகளே எங்கும். நெய்யாற்றங்கரைக்குக் கீழ்புறம் (ஆம்; நெய் யாற்றங்கரையில் தண்ணீர்தான் ஓடுகிறது. நெய் ஆறாக ஓடுகிறது என்று நினைத்து அங்கு போய் ஏமாந்து விடாதீர்கள்.) ஒரு பெரிய தடாகம். தெளிந்த தண்ணீர் அதில் நிறைந்திருக்கிறது. பக்கத்திலே சேறு பட்ட வயல்கள். தடாகத்திலும், இந்த வயல்களிலும் செவ்வாம்பல் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காதலன் வரவை நோக்கும் காதலியைப் போல் உதய சூரியன், ஆகாய வீதியிலே வர வர மெள்ள மெள்ள இதழ் விரித்துச் சிரிக்க ஆரம்பிக்கின்றன மலர்கள். இந்த மலர்களுக்கிடையிடையே அன்னப் பறவைகள் அங்கு மிங்கும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

அன்னப் பறவைகளின் குஞ்சுகளும் தாய்மாரோடு நீந்துகின்றன, கொஞ்ச நேரத்தில் தடாகம் முழுவதும் செக்கச் செவேலென்று தாமரைப் பூக்கள் மலர்ந்து விடுகின்றன. அந்தக் காட்சி தண்ணீரிலே தீப்பற்றிக் கொண்டது போலத் தோன்றுகிறது. தாய்ப் பறவைகள், "ஏது, நம் குஞ்சுகள் இந்தத்தீயின் வெம்மையில் வெம்பிப்போய்விடக் கூடாதே“ என்று அஞ்சி தத்தம் குஞ்சுகளைத் தங்களுடைய சிறகுகளால் அனைத்து ஒடுக்கிக் கொள்கின்றன. இப்படியெல்லாம் ஒரு காட்சியை நாம் இன்று பார்க்கிறோம். இதே காட்சியை இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பும் ஒரு கவிஞர் பார்த்திருக்கிறார். பார்த்தவர், அந்தக் காட்சியை

“அள்ளல்ப் பழனத்து

அரக் கரம்பல் வாய் அவிழ

வெள்ளம் தீப்பட்டது

என வெரீஇப் - புள்ளினம் தம்

கைச் சிறகால் பார்ப் பொடுக்கும்.”

(முத்தொள்ளாயிரம்)

என்று ஒரு நல்ல பாட்டிலே அமைத்தும் வைத்திருக்கிறார். ஓர் அற்புத சித்திரத்தை அழகிய சொல்லிலே தீட்டி வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இதைவிட அழகான ஓர் ஓவியத்தைக் கல்லிலே தீட்டி வைத்திருக்கிறான் ஒரு சக்கரவர்த்தி. இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னாலே தீட்டப்பட்ட அந்தச் சித்திரத்தில் நல்ல அழகான தாமரைத் தடாகம் ஒன்று உண்டு. தடாகம் முழுவதும் மலர் மயந்தான். அன்னப் பறவைகளும் குஞ்சுகளும் வெள்ளம் தீப்பட்டது என அஞ்சி நிற்கும் காட்சியெல்லாம் மிக மிக அழகு. தடாகத்தில் அன்னப்பறவைகள் மட்டுமல்ல, யானைகளும் மாடுகளும் வேறே இறங்கிக் குழப்புகின்றன. தாமரைத் தடாகம் என்றால் பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும்தானா? மக்களுக்கு இல்லையா? ஆகையால் புதுப் புனல் குடையும் ஆடவர் சிலரையும் அங்கே காண்கிறோம்.

பெண்டிரும் இருந்திருக்க வேண்டும் என்று கொஞ்சம் கற்பனையும் செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு சித்தன்ன வாசல் சமணக் குகைக் கோயிலிலே முதற்கட்டின் விதானத்திலே சித்திரித்திருக்கிறான் மன்னன் மகேந்திர வர்மன். ஜைனர்களுடைய சுவர்க்கம் ஆகிய சாமவ சரவணப் பொய்கையையே சித்திரிக்க முயன்றிருக்கிறான். எல்லாம் கல்லின் மேல் சுண்ணாம்பு பூசி அதன் மேல் என்றும் அழியா வர்ணங்களைக் குழைத்துத் தீட்டிய சித்திரங்கள் தான்.

சித்தன்ன வாசலைத் ‘தமிழ் நாட்டின் அஜந்தா' என்று சொல்லலாம். அஜந்தா செல்ல அவகாசம் இல்லாதவர்கள் சித்தன்ன வாசலுக்கு நடையைக் கட்டலாம். தொண்டைமான் புதுக் கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து காரிலோ வண்டியிலோ நேரே மேற்கே சென்றால், இந்தக் குகை வாயிலின் முன் கொண்டு விடும். பின் அங்குள்ள இரும்புக் கிராதியைக் காவலன் மூலம் திறந்து உள்ளே சென்று முதற் கட்டில் நுழைய வேண்டும்.

கொஞ்சம் நம்முடைய கௌரவத்தை யெல்லாம் கட்டித் தூர வைத்து விட்டு, மேலே கிடக்கும் துண்டை எடுத்துக் கீழே விரித்து அதில் படுத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தால் - பார்க்கலாம் நான் மேலே சொன்ன சித்திரங்களை. கொஞ்ச நேரம் இமை கொட்டாது பார்த்தால், அந்தச் சித்திரக்காரப் புலி செய்துள்ள வர்ண விஸ்தாரங்கள் அழகிய காட்சிகள் எல்லாம் தத்ரூபமாய்க் காட்சியளிக்க ஆரம்பித்து விடும். படுத்தவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விடாமல், அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மற்றக் காட்சிகளையும் பார்க்கலாம். தடுப்பவர் ஒருவருமே கிடையாது.

சித்தன்ன வாசல் குகைக் கோயில் மிகவும் சிறிய கோயில்தான். உள்ளே ஒரு சதுரமான அறையும் வெளியே ஒரு நீண்ட தாழ்வாரமுமே. எல்லாம் கருங்கல் மலையிலே குடையப்பட்டிருக்கிறது. தாழ்வாரத்துப் பக்கச் சுவர்களில் இரண்டு சிலைகள். வடக்கே பார்த்து இருப்பவர் பார்ஸவ நாதர். அவரை ஜைன தீர்த்தாங்கரர் இருபத்தி நாலு பேர்களில் ஒருவர் என்கிறார்கள். அவருடைய தலைமீது படமெடுத்த நாகம் விரிந்து குடை பிடிக்கிறது. தென்புறம் பார்க்க இருப்பவர் ஜைன குரு ஆச்சார்யார். இவருக்குச் சாதாரண குடையேதான். இருவரும் அர்த்த பத்மாசனத்தில் தியானத்தில் இருக்கிறார்கள். இந்தச் சிலைகள் கல்லில் செதுக்கிய சிலைகள். மேலே வர்ணம் பூசப்பட்டுப் பின்னால் உதிர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மேல் விதானத்தையும், பக்கச் சுவர்களையும் விட்டுக் கொஞ்சம் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ள தூண்களைப் பார்த்தால் உலகமே கண்டு அதிசயிக்கத் தகுந்த இரண்டு அழகிய சித்திரங்களைப் பார்ப்போம். வடபுறத்தில் ஒரு நடன மாதைப் பார்க்கிறோம். அவளுடைய அங்கங்களில் ஒரு குழைவு. கண்களிலே ஒரு கவர்ச்சி. அணிகளிலே ஒரு வியப்பு. அவளது ரோஜா வர்ண உடல் அழகும், கருங் கூந்தலிலே தாமரை சொருகியிருக்கும் நேர்த்தியும் நம்மை மயக்கவே செய்யும். அவளது தோற்றத்திலும், நடனத்திலும் நாம் உள்ளத்தைப் பறிகொடுத்து விடாமல் கொஞ்சம் கண்களைத் திருப்பி அடுத்த தூணைப் பார்த்தால் அங்கே காட்சி கொடுக்க மகேந்திர வர்மனே காத்து நிற்கிறான்.

மகேந்திர வர்மன் பெரிய வீரன், நல்ல கவிஞன், சங்கீர்ண ஜதியின் ஆதி கர்த்தா, மத்த விலாச நாடகாசிரியன், பெரிய சித்திரக்காரப் புலி என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மற்ற விஷயங்கள் எல்லாம் உண்மையோ என்னவோ தெரியாது. ஆனால் அவன் ஒரு பெரிய சித்திரக்காரப் புலி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதான். அவனுடைய காம்பீர்யம் அவனுடைய மகுடத்திலேயே தெரிகிறது. அவனுடைய முகத்திலோ களை சொட்டுகிறது. “நல்ல பணியை நாமும் தமிழ் நாட்டிலே செய்து முடித்து விட்டோம்” - என்ற ஆத்ம திருப்தியை அவன் கண் களிலே காண்கிறோம்.

ஆனால் ஒரே ஒரு எச்சரிக்கை. இந்த இரண்டு சித்திரங்களையும் பார்ப்பதற்கு சூட்சும திருஷ்டி வேண்டும். மங்கிய சித்திரங்கள்தான் அங்கே இப்போது இருக்கின்றன. கண்ணாடிக் கண்ணர்கள் யாராவது போய், 'ஒன்றுமே தெரியவில்லையே' என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

வெளித் தாழ்வாரத்தை விட்டு உள்ளே சென்றால் அங்கும் சுவரெல்லாம் சித்திரம். பல இடங்களில் பொரிந்து விழுந்து விட்டன என்றாலும், விதானத்தில் எழுதப்பட்டுள்ள சித்திரம் மட்டும் ஆசு அழியாமல் இருக்கிறது. கம்பளம் விரித்தாற் போன்ற சித்திரம் வெகு அழகாய் இருக்கிறது. ஜைனர்கள் கற்பனை செய்துள்ள தெய்வ லோகக் காட்சியே அங்கு சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அங்கும் மூன்று தீர்த்தாங்கரர்களின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குகைக் கோயிலைப் பல்லவ சக்கரவர்த்தி மகேந்திரவர்மன், அப்பர் பெருமான் அருளால் சைவ சமயத்தைத் தழுவுவதற்கு முன் செய்து முடித்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள் சரித்திரக்காரப்புலிகள். ஜைனனாக இருக்கும் போதே இந்தச் சித்திரங்களை எழுதியிருக்க வேண்டும் என்று வேறே சொல்கிறார்கள். மன்னன் மகேந்திரனைப் போன்ற மகா ரஸிகர்கள், ஜாதி மதபேதங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.

இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சியும் விவாதமும் நமக் கென்னத்திற்கு?. நாம் பார்த்து அனுபவிக்க வேண்டியதெல்லாம் அவனும் அவனுடைய சகாக்களும் தீட்டி வைத்திருக்கும் சித்திரங்களைத் தானே. சித்திரங்கள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகவே அழியாதிருப்பது அதிசயத்திலும் அதிசயமே. மூலிகைகளிலிருந்து எடுத்த வர்ணம் என்று மட்டும் சொல்வதற்கில்லை. உலோகங்களிலிருந்தும் வர்ணத்தை வடித்தெடுத்திருப்பார்கள் போல் தோன்றுகிறது, சாதாரண வர்ணத்தில் கூட இந்தச் சித்திரங்களைத் தீட்டி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க என்னால் இயலவில்லை. ஏதோ பேனாச்சித்திரங்களைத் தந்தே உங்களைத் திருப்தி செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கும் ஒரு 'அஜந்தா' உண்டு. அதை நாமும் பார்த்து விட்டோம் என்று கொஞ்சம் திருப்தியடையலாம் அல்லவா?

10. நவ திருப்பதி

ஒரு பக்தர், நம்மாழ்வாரது திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடிப் பாடித் திளைத்தவர். நம்மாழ்வாரது அவதாரத் தலமான திருக்குருகூரையும், அங்கு ஆழ்வார் தங்கியிருந்த புளிய மரத்தையும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதி நாதரையும் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்.

அந்தக் குருகூர் திருநெல்வேலி மாவட்டத்திலே தண்பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கரையிலே இருக்கும் ஒரு சிறிய ஊர் என்றும், நம்மாழ்வார் அவதரித்த நாளிலிருந்து அந்த திருப்பதிக்கு ஆழ்வார் திருநகரி என்று பெயர் வழங்கி வருகிறது என்பதையும் கேட்டிருக்கிறார். அந்த பக்தருக்கு ஓர் ஆசை, அந்தக் குருகூருக்குச் செல்லவேண்டும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆழ்வாரையும், ஆதிநாதரையும் வணங்கவேண்டும் என்று, சம்சார பந்தங்களில் சிக்கிச் சுழலும் பக்தருக்கும் அதற்கு நாளும் பொழுது, வாய்க்க வில்லை. பல வருடங்கள் கழிகின்றன. கடைசியாக ஒரு நாள் வசதி பண்ணிக்கொண்டு ரயில் ஏறி திருநெல்வேலியில் வந்து இறங்குகிறார். அப்போது திருகுருகூருக்கு ரயில் போடப்படவில்லை. பஸ் வண்டிகளும் இன்று ஓடுவது போல் ஓடவில்லை. டாக்சி கார்களே கிடையாத காலம் அது. இதையெல்லாம் ஈடு செய்யத்தான் அவரிடம் நிறைய ஆர்வம் இருக்கிறதே.

அந்த ஆர்வத்தையே துணையாகக் கொண்டு, வழி விசாரித்துக் கொண்டு, திருநெல்வேலியிலிருந்து கிழக்கு தோக்கி நடக்கிறார். கிருஷ்ணாபுரம், ஜயதுங்கன் நல்லூர்,

கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் எல்லாவற்றையும் கடக்கிறார், ஓரிடத்தும் தங்காமலேயே. கடைசியாக பதினேழு மைல் நடந்ததும் ஊர் தெரிகிறது. விசாரித்தால் அதுதான் ஆழ்வார் திருநகரி என்கிறார்கள். ஊருக்கு வடபுறம் தாமிரபரணி ஓடுகிறது. படித்துத் தெரிந்து கொண்டதும், முன் சென்றவர்கள் சொன்ன அடையாளங்களும் சரியாகவே இருக்கின்றன. பக்தரது உள்ளத்திலே ஒரே குதூகலம். பக்தர் நல்ல கவிஞரும் கூட, அவரது உள்ளத்தில் எழுந்த உற்சாகம் கவிதையாக பிரவகிக்கிறது. பாடுகிறார் அவர்:

இதுவோ திரு நகரி?

ஈதோ பொருநை?

இதுவோ பரம பதத்து

எல்லை - இதுவோ தான்

வேதம் பகர்ந்திட்ட

மெய்ப்பொருளின் உட்பொருளை

ஓதும் சடகோபன் ஊர்?

இதுதானா ஆழ்வார் திருநகரி? இதுதானா தண் பொருநை? இதுதானா வைகுந்தநாதன் தங்கும் பரமபதத்து எல்லை? - இதுதானோ வேதத்தின் உட்பொருளையெல்லாம் திருவாய் மொழியாகப் பாடிய - சடகோபன் என்னும் நம்மாழ்வார் பிறந்த பதி. அடடா! இதைக் காணுகின்ற பேறு எளிதில் சித்திக்கக் கூடியதா என்ன, என்று ஒரே ஆனந்த வெறியில் ஆடிப்பாடவே ஆரம்பித்து விடுகிறார். அப்படி ஒரு வெறியை பக்தர் ஒருவருக்கு உண்டாகிய திருப்பதி தான் ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகளால் பாடப்பெற்ற தலங்கள் 274 என்று ஒரு கணக்கு. ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகள் 108 என்றும் அறிவோம். சமயகுரவர்கள் பாடிய தேவாரங்கள் முழுவதும், ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் முழுவதும் நமக்கு கிடைத்து விட்டன என்று உறுதி கூற முடியாது. ஆதலால் பாடல் பெறாத பதிகள் என்று நாம் எண்ணும் பல தலங்கள் பாடல்கள் பெற்றிருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடமுண்டு. என்றாலும் பாடல் பெற்ற பதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு.

அதிலும் நம்மாழ்வார் பாடிய பதிகள் என்றால் கேடகவா வேண்டும். பாண்டிநாட்டு வைணவ திருப்பதிகள் பதினெட்டு என்றால், அதில் ஒன்பது தாமிரபரணி நதிக்கரையிலே குருகூராகவும், அதைச்சுற்றிய திருப்பதிகளாகவும் இருக்கின்றன. அவைகளையே நவதிருப்பதிகள் என்று வைணவ உலகம் போற்றுகிறது.

இத்திருப்பதிகளை தரிசிப்பதில் ஒரு பெரிய புண்ணியம் உண்டு, உள்ளத்துக்கு ஒரு மகிழ்ச்சியும் ஒரு தெம்பும் உண்டு என்று அறிகிறபோது நமக்குமே அத் திருப்பதிகளை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் எழுவது இயற்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைணவ பக்தர்கள் கால்நடையாகக் காலையிலேயே புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம் முதல் திருகோளூர் வரை எட்டுத்திருப்பதிகளுக்கும் சென்று அங்குள்ள பெருமாள்களை எல்லாம் வணங்கி மாலையில் ஆழ்வார் திருநகரி வந்து ஆதிநாதரும் ஆழ்வாரும் பரமபதத்துக்கு எழுத்தருளும் போது தாமும் உடன் சேர்ந்து கொண்டால் இந்த பிறவியிலேயே முத்தி நிச்சயம் என்று நம்பிக்கை யோடு யாத்திரைக்கு வருபவர்களும் உண்டு.

நமக்கெல்லாம் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இதற்கு வசதி பண்ணிக் கொள்ள அவகாசம் கிடைக்கிறதோ என்னவோ? நல்ல தீபாவளி தினத்தன்று - ஆம் எல்லோருக்கும் விடுமுறை கிடைத்திருக்கும் நாளில் - காலையில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை புனைந்து இந்த நவ திருப்பதிகளையும் ஒரு சுற்றுச்சுற்றி தரிசித்து விடலாமே. அதற்கு நமக்கு அவகாசமும் கிடைக்குமே. அதற்கும் அவகாசமில்லாத தமிழ் அன்பர்களை இன்று மானசீகமாகவே இந்த நவதிருப்பதிகளுக்கும் அழைத்துச் சென்று விட முனைகிறேன் நான் இன்று. என்ன, உடன் வருகிறீர்கள் அல்லவா? இல்லை நேராகவே சென்று பார்த்து விடுவோமே என்று துணிகிறவர்களுக்கு ஒன்று சொல்வேன்.

திருநெல்வேலியிலோ இல்லை ஸ்ரீவைகுண்டத்திலோ ஒரு டாக்சி கார் ஏற்பாடு செய்து கொண்டு புறப்படுவது நல்லது. நடந்தே கிளம்புவோம் என்றால் ஒரு எச்சரிக்கை. மொத்தம் பதினாறு, பதினெட்டு மைல் நடக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்த நடராஜா சர்வீசை விட்டு காரிலே சென்றால் சுமார் மூன்று நான்கு மணி நேரத்திற்குள் முடித்துத் திரும்பி விடலாம். இந்த நவதிருப்பதிகளில் ஆறு திருப்பதிகள் தாமிரபருணியின் வடகரையிலும் மூன்று திருப்பதிகள் தென்கரையிலும் இருக்கின்றன என்றாலும், ஆற்றின் வடகரையில் நடந்தாலும் சரி, காரில் சென்றாலும் சரி, நான்கு திருப்பதிகளையே வசதியாகக் காண முடியும்.

தொலைவில்லிமங்கலம் என்னும் கிராமத்தில் ஆற்றின் வடகரையை அடுத்து இருக்கும் இரட்டைத் திருப்பதிகளைக் காண தென் கரையிலிருந்து நடந்தே ஆற்றைக் கடந்து செல்வதுதான் நல்லது. வசதியானதும் கூட இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை விட யாத்திரையையே துவங்கி விடுவது நல்லது.

திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலோ ரயிலிலோ, முதலில் ஸ்ரீவைகுண்டம் போய்ச் சேர்ந்து விடுவோம். ரயிலில் சென்றால் தாமிர பருணியின் தென்கரையில் புதுக்குடி என்ற சிற்றூரில் தான் இறங்குவோம். இனி ஆற்றின் பேரில் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாக நடந்து ஸ்ரீவைகுண்டம் ஊர் போய்ச் சேரலாம். பாலத்தின் மீது போகும் போதே நீண்டுயர்ந்த கோபுரம் தெரியும். அதை நோக்கி நடந்தால் அங்குள்ள கள்ளப்பிரான் கோயில் வாயில் வந்து சேருவோம்.

விறு விறு என்றே உள்ளே நுழைந்து, அர்த்த மண்டபம் சென்றால் அங்கே தங்கத்தால் ஆன மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் நிற்க, கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்பார். அவர் நம் உள்ளம் கவரும் கள்வராக பேரழகுடன் இருப்பார். இவருக்கும் பின்னாலேதான் மூலவராக கருவறையிலே வைகுந்த நாதர் தனித்தே நிற்கிறார். இவர் பலகாலம் மண்ணுள் மறைந்திருந்ததாயும், அந்த இடத்திலே பசுக்கள் எல்லாம் பால் சொரிந்து நிற்க, அதன் பின்னரே வெளி வந்திருக்கிறார். அதனால் அவரை பால் பாண்டியன் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ஐந்து ஆறாம் தேதிகளில் காலையில் இளஞ்சூரியனது கிரணங்கள். கோபுரவாயில் மண்டபங்கள் எல்லாம் கடந்து வந்து வைகுந்த நாதர் மேனியைப் பொன்னிறமாக்குகின்றன. சிவபெருமானுக்கு இச்சூரிய பூசை பல தலங்களில் நடக்கிறது என்றாலும், பரந்தாமனுக்கு இந்த சூரிய பூசனை நடப்பது இந்தத் திருப்பதி ஒன்றிலேதான். இக் கோயிலின் கன்னி மூலையில் வைகுண்ட நாயகி தனிக் கோயிலில் கோவில் கொண்டிருக்கிறாள். அதற்கு எதிர்த்த வட திசையில் சோரநாத நாயகிக்கும் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இக் கோயிலில் காண வேண்டியவை செப்புப் படிமமாக இருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் ஒருவர். வெளி மண்டபத்திலே இரண்டு அழகிய சிற்பங்கள். ராமன் சுக்ரீவனை அணைத்துக் கொண்டு நிற்கும் கோலம் ஒன்று. அதற்கு எதிர்திசையில், லக்ஷ்மணர் அனுமனையும் அங்கதனையும் அணைத்து நிற்கும் கோலம் ஒன்று. இரண்டுமே தமிழ்நாட்டின் சிற்பக்கலை உலகில் பிரசித்தி பெற்றவை.

வைகுண்ட நாதன் சந்நிதியிலேயே நீண்டநேரம் நின்றுவிட்டோம். இனி விறு விறு என்று மூன்று மைல் நடந்தால் நத்தம் என்ற ஊர் வந்து சேருவோம். நத்தம் என்னும் நவதிருப்பதி ஒன்று கிடையாதே என்று எண்ணினால், அந்த ஊர்தான் வரகுணமங்கை என்ற திருப்பதி என்று அறிவோம்.

அங்கு கோயில் கொண்டிருப்பவர் விஜயாசனர். பெயருக்கு ஏற்ப இருந்த திருக்கோலத்திலேயே காட்சி அளிப்பார். அவர் பக்கத்தில் வரகுண வல்லித்தாயாரும் வீற்றிருப்பார். அவர்களையும் வணங்கிவிட்டு மேல் நடந்தால் புளிங்குடி என்ற திருப்பதி வந்து சேருவோம். இங்கே புஜங்க சயனராக பெருமாள் கிடக்கிறார். நல்ல ஆகிருதியான வடிவினர். அர்த்த மண்டபத்தையும் கடந்து கருவறைவாயில் வரை சென்றால்தான் அவரது முழு வடிவையும் காணலாம்.

அதற்கெல்லாம் பட்டாச்சாரியார்கள் அனுமதிக்க மாட்டார்கள். கோயில் பிராகாரத்தைச்சுற்றி வரும் போது வடக்கு வாயில் சன்னல் வழியாகக் கண்டால் பாததரிசனம் கிடைக்கும். பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ என்று கொஞ்சம் கற்பனை பண்ணி அந்தக் காசினி வேந்தன் வடிவைக்கண்டு கொள்ளவேண்டியது தான், இதுவரை நாம் கண்ட மூன்று கோயில்களையும் சேர்த்தே நம்மாழ்வார் மங்களா சாஸனம் செய்து வைத்திருக்கிறார்.

புளிங்குடி கிடந்து வரகுலைமங்கை

இருந்து, வைகுந்தத் துள்நின்று

தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே

என்னை ஆள்வாய், எனக்கருளி

தணிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்ப நீ காண வாராயே

என்பது நம்மாழ்வார் பாசுரம்.

புளிங்குடியிலிருந்து ஐந்து மைல் கிழக்கு நோக்கிச் சென்றால் பெருங்குளம் வந்து சேருவோம். பெயருக்கு ஏற்ப ஊரை ஒட்டி வடபுறத்தில் ஒரு பெரிய குளமே இருக்கிறது. இங்குள்ள கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மாயக்கூத்தர். இவரே உத்சவர். மூலவராக இருப்பவர் வேங்கட வாணர். அவர் பிரஹஸ்பதிக்கு பிரத்யக்ஷமானவர். அவர் பக்கலிலேயே பிரஹஸ்பதியும் இருக்கிறார். இந்த மாயக்கூத்தனையும் நம்மாழ்வார் பாடி மகிழ்ந்திருக்கின்றார்.

மாடக் கொடி மதிள்

வண்குட்டால் நின்ற மாயக் கூத்தன்

ஆடற்பறவை உயர்த்த வெல் போர்

ஆழி அலவனை ஆதரித்தே.

என்பதே நம்மாழ்வார் பாசுரம். மாயக் கூத்தனையும் குளந்தை வல்லியையும் வணங்கி விட்டு துலை வில்லி மங்கலம் நோக்கி நடக்கலாம். ஆம் நடக்கவே வேணும். வாய்க்கால் கரை, வயல் வரப்பு உடங்காடு எல்லாம் கடந்தே துலை வில்லி மங்கலத்து இரட்டைத் திருப்பதி சேர வேண்டும். இந்தப் பயணம் எளிதானது அல்ல. பாதையும் சரியாய் இராது.

ஆதலால் காரில் ஏறிக்கொண்டு, வந்த வழியே திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்து தாமிர பருணியின் தென்கரையிலே ஆறு மைல் தூரம் போனால் காமெல்லாபாத் என்ற முஸ்லீம் சகோதரர்களின் புதிய கிராமத்தண்டை வந்து சேருவோம். அங்கு ஆற்றின் தென்கரையிலே காரை நிறுத்திவிட்டு, இறங்கிக்கரை ஏறி ஆற்றைக் கடந்தால் துலை வில்லி மங்கலத்தில் உள்ள இரட்டைத் திருப்பதி வந்து சேருவோம். நல்ல உடங்காட்டிற்குள்ளே இரண்டு சிறிய கோயில்கள் ஒன்றை ஒன்று அடுத்து இருக்கும். ஒன்றிலே இருப்பவர் தேவர் பிரான். மற்றொன்றிலே நிற்பவர் அரவிந்த லோசனர். இவர்களையும், கருந்தடங் கண்ணி என்னும் தாயாரையும் தரிசித்து வணங்கி இந்த இரட்டைத்திருப்பதிப் பெருமாள்களைப் பற்றிப் பத்து பாடல்களை நம்மாழ்வார் பாடி மங்களா சாஸனம் செய்திருக்கிறார்.

சிந்தையாலும் சொல்லாலும்

செய்கையினாலும் தேவர் பிரானையே

தந்தை தாயென்றடைந்த சடகோபன்

என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார்.

இனி இரட்டைத் திருப்பதியை விட்டு தாமிரபரணியின் தென்கரை வந்து கார் ஏறி, கிழக்கே ஒன்றரை மைல் சென்று வடக்கே திரும்பினால், தென்திருப்பேறை என்னும் திருப்பதி வந்து சேருவோம். இங்கே கோயில் கொண்டிருப்பவர்தான் மகர நெடுங்குழைக்காதர். எல்லாத் திருப்பதிகளிலும் பெருமாளின் அங்க அழகை வைத்து புதுப்புதுப் பெயர் பூண்டு நிற்கும் பெருமாள் இத்திருப்பதியில் காதில் அணிந்திருக்கும் குழையையே தன் திருப் பெயராகத் தாங்கி நிற்கும் அழகுடையவராக இருக்கிறார். இங்குள்ள மூலவர் நிகரில் முகில்வண்ணன். இப்பெருமாளையும் குழைக்காதவல்லித் தாயாரையும் வணங்கி,

மகா நெடுங்குழைக்காதன் மாயன்

நூற்று வரை அன்று மங்க நூற்ற

நிகரில் முகில் வண்ணன் நேமியான்

என் நெஞ்சம் கவர்ந்தென்னை ஊழியாலே

என்ற நம்மாழ்வார் பாடலையும் பாடிவிட்டு, மேற்கு நோக்கி மூன்று மைல் நடந்தால் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத்தலமான திருக்கோளூர் என்னும் திருப்பதி வந்து சேருவோம்.

மதுரகவியாழ்வார் பெருமாளையே பாடவில்லை. அவர் கண்ட ஞானஒளி, வகுள பூஷண பாஸ்கரன் நம்மாழ்வார்தானே? அவரே அவருக்குத் தெய்வம் - எல்லாம். கோயில் சிறிய கோயில் தான் என்றாலும், அங்குள்ள பெருமாள் வைத்தமாநிதி. இவரும் கிடந்த திருக்கோலம் தான்.

உண்லும் சோறு பருகும் நீர்

தின்னும் வெற்றிலை.

- -

யெல்லாம் எம்பெருமான்

என்றே கண்கள் நீர் மல்கி

மண்களில் உளவன சீர்

வளம் மிக்கவனூர் வினவி

திண்ணம் யென்னினமான் புகும்

ஊர் திருக்கோளூரே

என்று நம்மாழ்வாரால் பாடல் பெறும் பேறு பெற்ற ஊர் ஆயிற்றே. இங்குள்ள வைத்த மாநிதியாம் மது சூதனனை வணங்கி விடைபெற்று, நவதிருப்பதிகளில் பிரதான தலமாகிய ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர் வந்து சேரலாம்.

அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதிநாதப் பெருமாள், பொலிந்து நின்ற பெருமாள், சடகோபர் என்னும் நம்மாழ்வார், அவர் இளமையில் இருந்த திருப்புளி எல்லாவற்றையும் தரிசித்து விட்டு ஊர் திரும்பலாம். திரும்பும் போது இதுவோ திருநகரி என்று எக்களிப்போடு பாடிய கவிஞன் போல

சேமம் குருகை யோ?

செய்ய திருப்பாற்கடலோ

நாமம் பாராங்குசமோ

நாரணமோ - தாமம்

துளவேர் வகுளமோ

தோள் இரண்டோ நான்கும்

உளவோ பெருமான் உனக்கு

என்று நவதிருப்பதிகளையும் பாடிய நம்மாழ்வாரிடமே கேட்கலாம். அத்தகைய தெம்பு தான் இதற்குள் நமக்கு வந்திருக்க வேண்டுமே!

11. அருக்கன் குளம் - காட்டுராமர் கோயில்

தாயுரை கொண்டு தாதை ஏவ கானாளப் புறப்படுகின்றான் கமலக்கண்ணனான ராமன். உடன் செல்கிறார்கள் தம்பி லக்ஷ்மணனும் மனைவி சீதையும். மூவரும் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது இலங்கை வேந்தனான ராவணன் வஞ்சத்தால் மூவரும் பிரிகிறார்கள், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன்.

அப்படிச் செல்லும் ராவணனை எதிர்த்துப் பறவைக்கரசனான சடாயு போரிடுகிறான். தன் இறகுகளை ராவணன் வெட்டி விட்டதால் கீழே விழுந்து கிடக்கிறான். சீதையைத் தேடிப் புறப்பட்ட ராமலக்ஷ்மணர்களைச் சந்தித்து, சீதையைச் சிறை எடுத்துச் சென்ற அரக்கன் போன வழியைச் சொல்லிவிட்டு, சடாயு உயிர் துறக்கிறான். சடாயுவைத் தன் தந்தையாகவே மதித்த ராமன், தன் தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன்களை எல்லாம் செய்கிறான். இதனை ஆதிகவி வான்மீகி சொல்கிறார். அவர் வழி நின்று அமரகாவியம் எழுதிய கவிச் சக்கரவர்த்தி கம்பனும் சொல்கிறான்.

ஏந்தினன் இருகை தாளினால்

ஏற்றினன் ஈமம் தன் மேல்

சாந்தொடு மலரும் நீரும்

சொரிந்தனன் தலையின் சரல்

கரந்து எரிகாலமூட்டி

கடன் மூறை கடவா வண்ணம்

நேர்ந்தனன் நிரம்பு நன்னூல்

மந்திர நெறியில் வல்லான்.

என்பது கம்பன் பாட்டு.

இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது? என்று ஒரு கேள்வி, சோழநாட்டிலே சீகாழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ளே சடாயு குண்டம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதில் கொஞ்சம் சாம்பலும் இருக்கிறது. அதுவே சடாயுவைத் தகனம் செய்த இடம் என்று கூறும் அத்தல வரலாறு. ஆனால் ராமன் ஈமக் கிரியை களைச் செய்தான் என்ற வரலாறு இல்லை.

திருநெல்வேலி ஜில்லாவிலே நாரணம்மாள் புரம், மணி மூர்த்தீஸ்வரம் என்னும் இரண்டு சிற்றூர்களுக்கு இடையே ஒரு சிறு கிராமம் அருக்கன் குளம் என்ற பெயரோடு தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது. அங்கும் ஒரு சடாயு குண்டம் இருக்கிறது சடாயு குண்டம் என்பது ஒரு நல்ல கிணறு போல் இருக்கிறது. எக்காலத்தும் அதில் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது: இக்குண்டத்தின் கரையிலே ஒரு சிறு கோயில். அதில் கோயில் கொண்டிருப்பார் அனந்த நாராயணன். வைகுந்த வாசனான அந்த நாராயணன், லட்சுமி சமேதனாக அங்கே சிலை உருவில் இருக்கிறான். பக்கத்திலே சடாயுவும் நின்று கொண் டிருக்கிறான்.

இந்த சடாயு குண்டத்திற்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தொலைவில் ஒரு பெரிய கற் கோவில் இருக்கிறது. அதனைக் காட்டு ராமர் கோயில் என்கின்றனர், உடை மரங்கள் நிறைந்த ஒரு காட்டிடையே, இரண்டரை ஏக்கர் விஸ்தீரணமுள்ள இடத்தில், இக்கோயில் கட்டப் பட்டிருக்கிறது. செப்பறைலிருந்து பாலாமடை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையை அடுத்து. இக்கோயில் இருக்கிறது.

தென் தமிழ் நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில், கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் விமானத்திற்குச் சிகரம் இல்லை. அதில் கலசமும் இல்லை. இதை எல்லாம் விட கருவறையில் ராமர், லக்ஷ்மணர், சீதை சிலைகளையே காணோம். அவைகளை யாரோ உடைத்து எறிந்திருக்கிறார்கள். உடைந்த துண்டுகள் மட்டும் கோயில் பிராகாரத்திலே கிடக்கின்றன.

இந்த இடத்தில்தான் சடாயுவுக்கு ராமன் ஈமக்கடன் செய்தானா என்று கேட்கத் தோன்றும். இக்கேள்விக்கு விடை பெற, ஊரை அடுத்துள்ள ராமலிங்கர் கோயில் பக்கம் போக வேணும். இக்கோயில் நல்ல நிலையில் இருக்கிறது.

அங்குதான் ராமர் பூஜித்த ராமலிங்கரும் பர்வத வர்த்தினியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இக் கோயிலுக்கு வடபுறம் ஒரு சிறு கோயில். அக்கோயிலிலே ராமாவதாரத்தின் மூலமூர்த்தியான ஸ்ரீநிவாசப் பெருமாள் நிற்கிறார். அவர் பிண்டம் போடுவது போல் வலதுகையை மடக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார்.

இந்த வடிவினைப் பார்த்த பின் நமது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விடும். இதுதான் உண்மையிலேயே சடாயுகுண்டம், சடாயுதீர்த்தம் எல்லாம். இந்தத் தாமிரபரணிக் கரையிலேதான் ராமன் தெய்வ மரணம் உற்ற சடாயுவுக்கு பிதுர்க்கடன்களை எல்லாம் செய்திருக்கிறான்.

பின்னர் பக்தர்கள் விருப்பப்படியே அங்கேயே எழுந்தருளியிருக்கிறான். பதிநான்கு வருஷம் காட்டிடையே வாழ்ந்த அந்த சக்கரவர்த்தி திருமகனான ராமனை காட்டு ராமன் என்றும் அவன் கோயிலைக் காட்டு ராமர் கோயில் என்றும் மக்கள் அழைப்பதும் பொருத்தம் தானே?

இப்படி பிரசித்தி பெற்ற கோயிலில் மூல விக்கிரகங்கள் இல்லாத குறையை நீக்க அன்பர் சிலர் மூன் வந்திருக்கின்றனர். ராமன், லக்ஷ்மணர், சீதை மூவரது வடிவினையும் நல்ல சிலை உருவில் அமைத்து வைத்திருக்கிறார்கள். அவற்றை விரைவில் கோயிலில் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த காட்டு ராமனுடைய திருப்பணியிலே பங்கு கொண்டால், நமது பெயரும் நிலைத்து நிற்குமல்லவா?

12. பெருங்குளத்து மாயக் கூத்தர்

கூத்தன் என்றதுமே நம் எண்ணத்தில் வருவது ஆனந்தக் கூத்தாடிய நடராஜ மூர்த்தம்தான். இலக்கிய வரலாறுகளிலே சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி, பாண்டரங்கம் முதலிய கூத்துகளைப் போலவே கண்ணனும், அல்லியம், மல்குடம் முதலிய ஆட்டங்களை ஆடினான் என்பது குறிக்கப்படுகிறது. இன்னும் முருகன், துர்க்கை, கொல்லிப் பாலை, இந்திராணி முதலியோர் ஆடிய கூத்துகளும் விவரிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மேலே மாயனர்ம் பரந்தாமனே ஒரு மாயக் கூத்தையும் ஆடி மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறான் என்கிறபோது, அந்த வரலாற்றை அறிய ஆவல் ஏற்படுவது சகஜம்தானே! அந்த வரலாறு இதுதான்.

தண் பொருநை என்னும் தாமிர பரணியின் வடகரையிலே குளந்தை என்று ஒரு சிற்றூர். அங்கே கோயில் கொண்டிருப்பவர் வேங்கடவாணர். அவரிடம் ஆறாத பக்தி கொண்டிருப்பவர் வேதசாரர் என்ற அந்தணர். அவரும் அவர் மனைவி குமுததுவதையும் இல்லறம் நடத்தி வந்தனர்.

அவர்களுக்கு கமலவதி என்று ஒரு மகள் பிறந்து வளர்ந்து வந்தாள். இந்த நிலையில் ஓர் அரக்கன் அங்கு வந்து வேதசாரரின் மனைவியைக் கவர்ந்து சென்று விடுகிறான். மனைவியை மீட்க வழியறியாது. திகைக்கிறார். தான் வணங்கும் ஸ்ரீநிவாசனிடமே விண்ணப்பித்துக் கொள்வதைத்தவிர வேறு செய்ய அறியாது வாழ்கிறார். ஸ்ரீநிவாசனும், அவனது ராமாவதாரத்தில் தன், மனைவி சீதையை இராவணன் எடுத்துச் சென்று, அசோக வனத்தில் சிறை வைத்திருந்தபோது, பிரிவுத் துயரை அனுபவித்தவன்தானே?

ஆதலால் பக்தனாம் வேத சாரரின் துயர் துடைக்க வேண்டி, அரக்கன் மேல் படை கொண்டு சென்று அவனை வென்று, அவனனத் தன் காலின் கீழ் போட்டு மிதித்து மாயக் கூத்தாடுகின்றார். இதனாலேயே இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமன் சோரநாட்டிய சர்மன் - மாயக் கூத்தன் என்று பெயர் பெற் றிருக்கிறான். சோரனிடமிருந்து பக்தரது மனைவியை மீட்டுக் கூத்தாடிய பெருமகனே சோர நாட்டியன் எனப் படுகிறான். இவனைப் பற்றிய துதி ஒன்று இத்துணை விவரத்தையும் கூறுகிறது.

ஸ்ரீ வேதசார மகிஷியும் அபக்ருத்ய நித்யாம்

ஸ்நாதுங்க தாம் திதி சுதேன

குகாப நீதாம். ஆனிய தூர்ண மதிசது

கருணா நிதி ஹிய ஹதம் சோர நாட்டியம்

அனிஷம் கானம் பிரயத்யே.

என்பதுதான் துதி. இந்த சோர நாட்டியன் என்னும் மாயக் கூத்தன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் பெருங்குளம் என்னும் திருக் குளந்தை. அது வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டில் ஒரு திருப்பதி, அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

பெருங்குளம் என்னும் திருக்குளந்தை, திருநெல் வேலிக்குக் கிழக்கே இருபத்தி ஐந்து மைல் தொலைவிலுள்ள சிறிய ஊர். இதற்கு ரயிலில் போவதானால் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இறங்கி கார் வைத்துக் கொண்டோ , பஸ் ஏறியோ, பத்துமைல் வடகிழக்காகப் போக வேணும். தூத்துக்குடியிலிருந்து இருபதுமைல் தெற்கே வந்தாலும் வரலாம். இந்த ஊரில் அதன் பெயருக்கேற்ப பெரிய ஏரி - குளம் ஒன்றிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செல்லும் வழியே பல குளக்கரைகள் வழியாகத்தான் செல்கிறது.

ஒரு பக்கம் நீர் நிறைந்த ஏரிகளும், ஒரு பக்கம் பரந்த நெல்வயல்களுமாக கண்ணுக்கு இனிய காட்சி அளிக்கும். இத்தலம், ஆழ்வார் பாடிய நவதிருப்பதிகளுள் ஒன்று. அந்த நவதிருப்பதிகளில் தாமிரபரணியின் வடகரையிலிருப்பவை ஆறு. அதில் இது மேற்கே இருந்து நான்காவது திருப்பதி, இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமனாம் மாயக் கூத்தனை,

கூடச் சென்றேன் இனி என் :கொடுக்கேன், கோல்வளை நெஞ்சத்

தொடக்கமெல்லாம்

பாடற்று ஒழிய, இழந்து

வைகல் பல் வளையார் முன்

பரிசலிந்தேன்

மாடக் கொடி மதின் தென் குளந்தை

வண் குடபால் நின்ற

மாயக் கூத்தன்

ஆடல் பறவை உயர்ந்த

வெல்போர் ஆழி

வலவனை ஆதரித்தே -

என்று பாடி மகிழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். இம்மாயக் கூத்தனையும், இத்தலத்தையும் பற்றி இவர் பாடிய பாட்டு இந்த ஒரே பாட்டுத்தான்.

இவ்வூரையடைந்து, குளக்கரையையும் கடந்து, சந்நிதித் தெரு வழியாக மேற்கு நோக்கி நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் வாயிலில் ஒரு சிறு கோபுரம் உண்டு. அதனை அடுத்தே பந்தல் மண்டபம். அம் மண்டபத்திலேயே திருமஞ்சனக் குறடு. இந்த மண்டபத்தில் நுழையும் முன்பே, தென்பக்கம் திரும்பினால், ஒரு சிறு மண்டபம் பூட்டி வைக்கப் பட்டிருக்கும்.

அதைத் தான் கழுநீர்ப் பெருமான் சந்நிதி என்பர். மடைப் பள்ளியிலிருந்து வரும் கழுநீர் எல்லாம் அப்பக்கமாகத்தான் ஓடும். அங்கு ஒரு காவல் தெய்வம் இருந்திருக்க வேண்டும். அவனையே கழுநீர்த் துறையான் என்று அன்று மக்கள் அழைத்திருக்க வேண்டும்.

இன்று அம்மண்டபத்தில் இருப்பது ஒரு பீடம் மட்டுமே. கழுநீர்த் துறையான் கழுநீரோடு கழுநீராய் கரைந்து போய்விட்டான் போலும்! கோயில் வாயிலுக்கு வடபுறம், அவருக்குத் தனி சந்நிதி. அவரையும் வணங்கிவிட்டே கோயிலுக்குள் நுழையலாம். கொடி மடம் மகாமண்டபம் எல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வர வேணும். அங்கிருந்தே மூலவராம் வேங்கட வாணனைத் தரிசிக்கலாம். வேங்கடவாணன் அந்த திருமலை வேங்கடவனைப் போல தனியாகவே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலே வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இந்த வேங்கடவாணன் இருக்கும் கருவறையிலே வேதசாரரும், அவர் மனைவி குமுதவதையும் கூப்பிய கையராய் நிற்கிறார்கள். அத்துடன் பிரகஸ்பதியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவிக்கு அவர் இடம் கொடுக்க வில்லை. அர்த்த மண்டபத்தில் இருக்கும் உத்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இரு மருங்கிலும் அலர்மேல் மங்கைத் தாயாரும், குளந்தை வல்லித் தாயாரும் இருக்கின்றனர்.

மூவரும், இவர் பக்கலில் கருடனும், அழகிய குறட்டொன்றிலே சர்வாலங்கார பூஜிதராய் நிற்கின்றனர். வேங்கட வாணனையும் மாயக் கூத்தரையும் வணங்கித் திரும்பும்போது இத்தலத்திற்குச் சிறப்பான கருடாழ்வார் இருவரைக் காணலாம். ஒருவர் புத்தம் புதிய மேனியர். மற்றொருவர் புராதனமானவர்.

அவர் கையிலே பாம்பொன்று ஏந்தி, பெருமாள் எழுந்தருளுவதற்கு ஏற்ற முறையில் கால் மடித்து சிறகை விரித்து நிற்கிறார். இன்னும் இத்தலத்தில் ஆழ்வார்கள் பலரும், உடையவரும், சேனைமுதலியார் என்னும் விஸ்வக்சேனரும் மற்றக் குறடுகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். இன்னும் மணவாள மாமுனிகள் சந்நிதியும் தனியே இருக்கிறது.

இங்குள்ள மாயக் கூத்தருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி ரஸமான வரலாறு ஒன்று உண்டு. ஆழ்வார் திருநகரியில் நாயக்கர் மண்டபம் கட்டி முடிந்த காலத்தில் வைகாசி உத்சவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த உத்சவத்திற்கு நவதிருப்பதிப் பெருமாள்களும் எழுந்தருளுவது வழக்கம். பல வருஷங்களுக்கு முன் இந்த உத்சவத்தைக் காண சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அவர்கள் தாம் நமது முன்னாள் அறநிலைய அமைச்சர் திரு வேங்கடசாமி நாயுடு அவர்களின் முன்னோர். அக்குடும்பத்தலைவர் மற்றொருவருக்கும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளேயே ஒரு பிரார்த்தனை செய்து கொண்டார். நவதிருப்பதிப் பெருமாள்களில் ஆதி நாதரைத் தவிர மற்றவர்களில் எவர் முதல் முதல் நாயக்கர் மண்டபத்திற்கு வந்து சேர்கிறாரோ, அவருக்குத் தங்கக்கவசம் செய்து சாத்துவது என்று பிரார்த்தனை. அன்று முதல் முதல் எழுந்தருளியவர் மாயக் கூத்தர். அதனால் அவர் பிரார்த்தனைப்படி தங்கக் கவசம் செய்து அணிவித்திருக்கிறார்.

ஆம். பெரியவர் பெருமான்களிடையே ஓர் ஓட்டப் போட்டியையே வைத்திருக்கிறார். அந்தப் போட்டிப் பந்தயத்தில் முன்னோடி வந்து ஜெயித்தவர் மாயக் கூத்தராக இருந்திருக்கிறார். மாயக் கூத்தர் சோர நாட்டியம் மட்டும் ஆடவல்லவர் அல்ல. நன்கு ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி பெறக் கூடியவர் என்பதை அறிகிறோம்.

இக்கோயிலில் கல்வெட்டுகள் இல்லை என்றாலும், ஆழ்வார் திருநகரியில் எடுத்த கல்வெட்டுக்களில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது அக்கல்வெட்டுகள் மூலம், பெருங்குளத்தில் சில நிலங்கள் ஆழ்வார் திருநகரித் திருவிழாச் செலவினுக்கு நன்கொடையாக அளிக்கப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. இக்கல்வெட்டுகளில், இவ்வூர், உத்தம பாண்டிய நல்லூர் என்ற பெருங்குளம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்கோயிலுக்குப் கீழ்புறம் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் வழுதீசர். இவர் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த உக்கிரப்பெருவழுதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது வரலாறு என்பதால் அவரது பழமையும் விளங்கும். இந்த வழுதீசர் கோயில் ஜீரணோத்தாரணப் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

மாயக்கூத்தர் கோயில் கோபுரம், கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய விமானம் எல்லாம் சிதைந்து இருக்கிறது. மண்டபங்களும் பழுதுற்ற நிலையிலே தான் இருக்கின்றன.

இவைகளையெல்லாம் புதுப்பிக்கும் பணியை உள்ளூர் அன்பரும் பிறரும் ஆரம்பித்திருக்கிறார்கள். மாய்க்கூத்தர் பெயர் தாங்கிய மாயக்கூத்தர் அய்யங்கார் என்பவரே முன்னின்று காரியங்களை நடத்துகிறார். மாயக் கூத்தரே முன்னின்று நடத்தும் திருப்பணியில் பங்கு கொள்வது பெரும்பேறு. அந்தப் பேற்றைத் தமிழன் பர்கள் பலரும் பெறட்டும் என்றே இதனையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.

13. திருமலை முருகன்

இன்று தமிழ் நாட்டில் பல கோயில் திருப்பணிகள் ஏராளமாக நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மீனாக்ஷி கோயிலில் இருபத்தி ஐந்து லக்ஷம் ரூபாய் செலவில் திருப்பணி நடந்தது. குடமுழுக்கும் நடந்தது. அதைப் பற்றியும் அப்பணியில் ஈடுபட்ட பெருமக்களைப் பற்றியும் விரிவாகப் பலர் பேசுகிறார்கள்.

இந்தத் திருப்பணிக்கே இத்தனை மகத்துவம் என்றால், ஒரு கோயிலையே கட்டியவர்களை கோயிலில் வைத்தே கும்பிடலாம் போல் இருக்கிறது. பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சியில் கைலாச நாதருக்கு ஒரு கலைக் கோயிலைக் கட்டியிருக்கிறான். தஞ்சையில் ராஜ ராஜ சோழன் பெரு உடையாருக்கு ஒரு பெரிய கோயிலையே கட்டியிருக்கிறான். மதுரை மீனாக்ஷி கோயிலின் பெரும் பகுதியை திருமலை நாயக்கரே கட்டியிருக்கிறார் என்றெல்லாம் சரித்திர ஏடுகள் பேசுகின்றன.

ஆனால், ஒரு கோயிலுக்குத் திருப்பணி செய்ததும், அக்கோயில் நிர்வாகங்கள் எல்லாம் சரிவர நடைபெற நூற்றைம்பது கோட்டை விரைப்பாடும், தோப்பும், நிலமும் தேடி வைத்தது ஒரு சாதாரணப் பெண் பிள்ளை என்று அறிகிற போது நாம் அப்படியே அசந்து விடுகிறோம். அப்படி ஒரு திருப்பணி செய்தவர்தான் சிவகாமி ஆத்தாள் என்னும் மறவர் குலப் பெண். அத்திருப்பணி. நடந்த தலம்தான் செங்கோட்டையை அடுத்த திருமலை முருகன் கோயில்.

இனி இக்கோயில் உருவான வரலாற்றையும், அங்கு திருமலை முருகன் கோயில் கொண்ட திறத்தையும், அக்கோயிலுக்கு சிவகாமி ஆத்தாள் செய்த சேவையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே.

திருமலை ஒரு சிறிய மலை தான். அந்த மலையிலே. ஒரு சுனை இருக்கிறது. அதனைப் பூஞ்சுனை என்கின்றனர். அச்சுனையின் கரையிலே ஒரு புளிய மரம் இருக்கிறது. அதனை அடுத்து சப்த கன்னிமார் கோயில், ஒன்றும் இருக்கிறது. அக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூசையை முடித்து விட்டுப் புளிய மரத்தடியில் வந்து இளைப்பாறுகிறார். அங்கு தலையைச் சாய்த்தவர் தூங்கிவிடுகிறார். அவரது கனவில் முருகன் தோன்றி, இந்த மலைக்கு வடபக்கம் ஓடும் அனுமன் நதிக்கரையில் கோட்டை மேடு என்ற இடத்தில் நாம் மண்ணுள் புதையுண்டு கிடக்கிறோம். நம்மை எடுத்து வந்து மலை மீது பிரதிஷ்டை பண்ணினால், உங்கள் அரசனது பிணீ தீரும் என்கிறார். இச்செய்தியை அர்ச்சகர் அரசனிடம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் இருந்த மூர்த்தியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்கிறான் அரசன். ஆதியில் வேலும் மயிலும் கொண்ட கற்சிலையாகத்தான் முருகன் இருந்திருக்கிறான், அதனையே அர்ச்சகர் கனவு கண்ட புளிய மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். அதனையே உத்தண்ட வேலாயுதம் - ஆதிமூல நிலையம் என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பல வருஷங்கள் கழிகின்றன. நெடுவேலி என்ற கிராமத்தில் மறவர் குலத்தில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்குச் சிவகாமி என்று பெயர் சூட்டப்படுகிறது. நாளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள்.

அவளைக் கங்கை முத்துத் தேவர் என்பவர் மணக்கிறார். அவளுக்கோ முருகனிடத்தில் அபார பக்தி. ஆதலால், துறவறம் பூண்டு செவ்விய நெறியிலே வாழ்கிறாள். தன் கணவன் இறந்த பின் தன் சொத்து அத்தனையையும் திருமலை முருகனுக்கே சாஸனம் செய்து கொடுத்து விடுகிறாள். அவள்தான் இக்கோயிலைக் கட்ட முனைந்திருக்கிறாள். மலையடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டல் என்ற இடத்திலே ஒரு சத்திரம் அமைத்து, அதில் இருந்து மலைக்கு வருபவர்களுக்கு ஆகாரமும் நீர்மோரும் கொடுத்திருக்கிறாள். மலைமேல் செல்கிறவர்கள் கையில் ஆளுக்கு ஒரு செங்கல்லும், ஒரு ஓலைப் பெட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்து மலை மீது எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறாள்.

இந்த விதமாகவே செங்கல்லும் சுண்ணாம்பும் மலை மீது வந்து குவிந்து, கோயில் உருவாகியிருக்கிறது - (இன்றும் மலை மேல் நடக்கும் திருப்பணிக்குச் செங்கல்லை ஆண்களும் பெண்களும் சுமந்து செல்கிறார்கள். நூறு செங்கற்கள் கொண்டு செல்ல ஆறு தடவை மலை ஏறவேண்டியிருக்கிறது. அதற்குக் கூலி ரூ 1.25 என்கிறார்கள். ஆம். அன்று மதுரையில் உள்ள சொக்கலிங்கம் பிட்டுக்கு மண் சுமந்தார். இன்றோ நம் மக்கள் துட்டுக்கு மண் சுமக்கிறார்கள்!)

இப்படித்தான் திருமலைக் குமரன் கோயில் சிவகாமி ஆத்தாளால் முதலில் உருவாகியிருக்கிறது. அவள் கனவில் முருகன் தோன்றி, தனக்குச் சேரவேண்டிய சொத்தும் அதற்குரிய சாஸனமும் எங்கே புதைந்து கிடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறான். அதைக் கண்டெடுத்து, அந்த சொத்தை வைத்திருந்தவருடன் வழக்காடி கிட்டத்தட்ட 150 கோட்டை நன்செய் நிலங்களையும், தோப்பு முதலியவைகளையும் கோயிலுக்குச் சேர்த்திருக்கிறாள் இந்த அம்மையார். இப்படி இந்த அம்மையார் செய்த கைங்கரியத்தினால்தான் திருமலை முருகன், இம்மலை மீது நிலை பெற்றிருக்கிறான் என்று அறிகிறபோது நாம் பூரித்து விடுகிறோம்.

இத்திருமலை முருகனைக்காண நாம் நேரே செங்கோட்டை ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுக்க வேணும். அங்கிருந்து ஐந்துமைல் வண்டி வைத்துக் கொண்டோ நடந்தோ செல்ல வேணும். அவகாசம் இருந்தால் காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்ஸிற்காகக் காத்து நிற்க வேணும். தென்காசியில் இறங்கினாலும், குற்றாலத்தில் தங்கி இருந்தாலும் அங்கிருந்து காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்களிலும் செல்லலாம். சொந்தக்கார் உடையவர்கள் என்றால் ஜாம் ஜாம் என்று காரிலேயே சென்று மலையடிவாரத்தில் இறங்கலாம்.

அதன் பின் மலை ஏற வேணும். மலையடிவாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அதில் ஒரு கோயில். அங்கு இருப்பவர்தான் வல்லபை கணபதி. எல்லாம் வல்ல சக்தியையே தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டிருப்பார் அவர். அவரைக் கண்டதும் நமக்கு வடநாட்டு ஞாபகம் தான் வரும். வடநாட்டில் கார்த்திகேயன் கட்டை பிரமச்சாரி, கணபதிதான் சித்தி புத்தி என்னும் இருவரை மணந்தவர். அதே போலத்தான் திருமலையிலும் கணபதிதான் வல்லபையுடன் இருக்கிறார். அவர் தம்பி திருமலை முருகனோ தனித்தே நிற்கிறான். வல்லபை கணபதியை வணங்கி விட்டு மலைமேல் ஏறவேணும்.

முன்னர் அமைத்திருந்த பாதையில் 544 படிகளே இருந்தன. சில பகுதிகள் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ நன்றாக வளைத்து ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது மொத்தம் 615 படிகள் இருக்கின்றன. பழனி மலை ஏறும் தூரத்தில் பாதிதான். திருத்தணி மலை ஏறுவது போல் இரண்டு பங்கு ஏறவேணும்.

ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு பழைய படிக்கட்டுக்களில் ஏறினால், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி விட்டு, திருமலை முருகனை வணங்கக் கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்து விடலாம். கோயிலுள் நுழையுமுன் கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரமும் அதன் அடியில் உத்தண்ட வேலா யுதமும்,' ஆதி மூலநிலையமும் இருக்கும்.

அங்கு நம் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்து விட்டு கோயிலைச் சுற்றிக்கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிராகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச் செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத் தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள்.

ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம், பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு தூணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும்.

அதற்கு எதிர்ப் பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கிறானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிராகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும், வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.

திருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலா விக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்பு வேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம்.

அதனால்தான் அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினனே. அவனுக்கும் அவன் துணைவி யாருக்கும் ஆடைகள் உடுத்து, அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்ச்சகர்கள். அவன் மஞ்சம் மிகச் சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து . வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப் பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பார்.

இப்படி இலை விபூதி கொடுப்பதற்கென்றே சொக்கம்பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய் நிலங்களை மானியமாக விட்டிருந்தாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள். உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப் பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே!

முருகனையும் - சண்முகனையும் வணங்கி விட்டு உட்பிராகாரத்தைச் சுற்றினால், ஈசான்ய மூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனோ என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அது சிவனது பைரவ மூர்த்தம் என்பார்கள். அதற்குரிய சுணங்கள் அங்கிருக்க மாட்டான். இந்த பைரவன் மிக்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி, சந்நிதி வாயில்களை எல்லாம் பூட்டி, சாவியை அவர் முன்பு கொண்டு போய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துகளையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலை விட்டு வெளியே வரும்போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக் குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்து விட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம்தான் என்றாலும் மிக்க அழகான வடிவம் - இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால்ய வயதே உடையவன் ஆனதால் வள்ளி தெய்வயானை சந்நிதிகளும் கிடையாது.

திருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களில் அருணகிரியார் பாடி இருக்கிறார்.

எனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா

சிவாகப் பரமற்கு இளையோனே

தினை வனத் தெரிவைக்கு உரியோனே

திருமலைக் குமரப் பெருமானே

என்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத் கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இளவயதினன் என்றாலும் அவனுக்கு அவளே உரியவள் என்று கோடி காட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை, தெரிவை என்று கிழவியாக்கி விடுகிறாரே அருணகிரியார் என்பது தான் என் கோபத்திற்குக் காரணம். குறிஞ்சிக் கிழவனுக்கு ஏற்ற கிழவியாக இருக்கட்டும் வள்ளி, என்று நினைத்தாரோ என்னவோ! இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு, காதல், பிரபந்தங்களும், இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.

ஐவர் சகாயன், மருகன்

திருமலை ஆறுமுகத்

தெய்வ சுகாயமுண்டே,

வருமோ கொடுந்தீவினையே

என்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடி இருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.

ஒன்றே ஒன்று, சொல்ல மறந்து விட்டேனே எனது குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறி இருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார்.

மலை மீதிருந்து கீழே தன் உடலை உருட்டியிருக்கிறார். குமரனும். அந்த உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடா வண்ணம் காத்திருக்கிறார்.. இதை அவரே பாடுகிறார்.

வடதிசையில் தலை வைத்து

மறலி திசைகால் நீட்டி

உடலை அந்தத் திருமலையின் உச்சியில் நின்று உருட்டி விட்டேன்.

விடலை இடும் தேங்காய் போல்

வேறு பட்டுச் சிதறாமல்

மட மடெனக் கொண்டு ஆங்கோர்

மண்தரையில் விட்டதுவே

இந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்டத் தைரியம் இல்லை. ஆனால் அங்கு அடித்த காற்றில், நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி கழன்று படிகளில் உருண்டது. சரி, கண்ணாடி உடைந்திருக்கும், பிரேமாவது மிஞ்சட்டும் என்று ஆள் அனுப்பி உருண்ட கண்ணாடியைத் தேடி எடுத்துவரச் சொன்னேன்.

என்ன அதிசயம்! கண்ணாடி உடைந்து சிதறாமல் அப்படியே இருந்தது. அந்தக் கண்ணாடியை அணிந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன். என் குருநாதர் ஆசியையும் திருமலை முருகன் அருளையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன்.

14. அஞ்சைக் களத்து அப்பன்

சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திரு நாவலூரிலே பிறக்கிறார். அவரை இறைவன் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச் சென்று அற்புதப் பழைய ஆவணம் காட்டி ஆட்கொள்கிறார். அவரைத் தம்பிரான் தோழன் என்றே அழைக்கிறார். அன்று முதல் சுந்தரரும் இறைவனோடு தோழமை பூண்டு, எண்ணற்ற அரிய காரியங்களைச் செய்ய இறைவனையே ஏவலாளனாகக் கொள்கிறார்.

இந்தத் தம்பிரான் தோழரின் இன்னொரு தோழர் சேர மன்னனாகிய சேரமான் பெருமாள் என்னும் திருத்தொண்டர். இவரும் சிவத்தொண்டில் ஈடுபட்டவர் சேர நாட்டிற்குத் தன் தோழனாகிய சுந்தரரைப் பலமுறை அழைத்திருக்கிறார். கடைசியாகச் சுந்தரரும் இணங்கி தன் மலைநாட்டுத் தலயாத்திரையைத் துவக்குகிறார். இதனைச் சொல்கிறார், திருத்தொண்டர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார்,

ஆரம் உரகம் அணிந்த பிரான்

அன்பர் அணுக்க வன் தொண்டர்

ஈர மதுவார் மலர்ச் சோலை

எழில் ஆரூமில் இருக்கும் நான்

சேரர் பெருமான் தனை நினைந்து

தெய்வப் பெருமான் கழல் வணங்கி

சாரல் மலைநாடு அடைவதற்குத்

தவிரா விருப்பின் உடன் போந்தார் -

இப்படி மலைநாட்டுத் தலயாத்திரையைத் தொடங்கியவர், வழியில் அவிநாசியில் முதலை உண்ட பாலனை அழைத்து, அவனை அவனது பெற்றோர்களிடம் சேர்ப்பித்து விட்டு மேலும் நடக்கிறார், வழியில் உள்ள ஆறுகளையும், காடுகளையும் கடந்தே. இவரது வருகையை, அடியார்கள் சேரமான் பெருமாளிடம் ஓடோடி வந்து அறிவிக்கிறார்கள். சேரமன்னனது உவகை கட்டுக்கு அடங்காததாகிறது. கரை புரண்டோடும் அவரது உவகையை சேக்கிழார் தமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். என் ஐயன் அணைந்தான் .

எனை ஆளும் அண்ணல் அணைத்தான்

ஆரூரில் சைவன் அணைந்தான் .

என் துணையாம் தலைவன் அணைந்தான்

தரணி எலாம் உய்ய அணைந்தான்.

அணைந்தான் -

என்றே குதூகலிக்கிறார். ஆகவே அவர் நகரை எல்லாம் நன்றாக அலங்கரித்து, யானை மீது எதிர்கொண்டு வந்து, சுந்தரை அழைத்துச் செல்கிறார், தனது நகருக்கும் திருமாளிகைக்கும். அப்படிச் சுந்தரரை அழைத்துச் சென்ற இடம்தான் அவனது தலைநகரான வஞ்சி, அதுவே திரு அஞ்சைக்களம். மண வாழ்க்கையை எல்லாம் வெறுத்த சுந்தரர், அங்கிருந்தே தன் கயிலை யாத்திரையைத் துவங்குகிறார். இறைவனும் தன் தோழனாம் சுந்தரருக்கு வெள்ளானை எல்லாம் அனுப்பி கயிலைக்கு அழைத்து வரச் செல்கிறார்.

அதன்படியே சுந்தரர் புறப்படும் போது, கோமகனும் குதிரைமீது அமர்ந்து சுந்தரருடன் கயிலை செல்கிறார் இப்படி இரண்டு பெரிய தொண்டர்கள் கயிலையை நோக்கிப் பிரயாணம் புறப்பட்ட இடமே திரு அஞ்சைக்களம் என்னும் தலம். அத்தலத்தை நோக்கியே நாமும் விரைகின்றோம். இன்று, நமக்கு கயிலை செல்லும் நோக்கமெல்லாம் இல்லாதிருந்தும் கூட.

திரு அஞ்சைக்களம் செல்ல, சென்னையிலிருந்து கொச்சின் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறவேணும். ஷோரனூர் எல்லாம் கடந்த பின் இருஞாலகுடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அங்கிருந்து கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூருக்கு வழி கேட்டுக் கொண்டு போக வேணும்.

போகும் வழியில் ஓர் உப்பங்கழியையும் கடக்கவேனும். முன்னாலே என்றால் இக்கரையில் காத்திருந்து படகில் ஏறித்தான் அக்கரை செல்ல வேணும். இப்போதோ . உப்பங்கழியில் பெரிய பாலம் ஒன்றையே அமைத்திருக்கிறார்கள். ஆதலால் காரிலோ பஸ்ஸிலோ ஏறிக் கொண்டு 'ஜாம் ஜாம்' என்று கொடுங்கோளூருக்கே போய் விடலாம். கொடுங்கோளூர் பகவதி கோயிலுக்கும் சென்று வணங்கி, அருள் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பின் மேற்கு நோக்கி ஒன்றரை மைல் போனால் திரு அஞ்சைக்களம் வந்து சேரலாம். உப்பங்கழி வழியாக படகிலே போனால் இறங்குதுறையில் இறங்கி, வடக்கு நோக்கி நடந்தால். கோயில் வாயில் வந்து சேரலாம். நாமோ, கொடுங்கோளூரிலிருந்து மேற்கு நோக்கியல்லவா வந்திருக்கிறோம். அங்கே ஒரு சந்நிதியில் கல்லால் அமைத்த தீபஸ்தம்பம் ஒன்று தெரியும்.

அந்தப் பக்கமாகத் திரும்பினால், ஒரு சிறு கட்டிடத்தில், சேரமான் பெருமாள் சுந்தர மூர்த்தி வாசக சாலை என்று தமிழிலே எழுதிய 'போர்டு' ஒன்று தொங்கும். கட்டிடம் திறந்து கிடந்தாலும் பதில் சொல்ல ஆள் ஒருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அங்கிருந்து கோயில் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வதும் எளிதன்று - கோயிலுக்குத்தான் கோபுரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாதே. கொஞ்சம் துணிந்து மேலே நடந்தால் சில ஒட்டுக் கூரைகள் தோன்றும். ஒரு பெரிய காம்பவுண்டும் தோன்றும்.

அதுதான் கோயில் என்பர். அங்குள்ள வாயில் கோயிலின் மேல்புறத்து வாயில். அந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், அங்கு ஒரு மரக்கொட்டகை தெரியும். அதனையே ஆனைப்பந்தல் என்கிறார்கள். விழாக்காலங்களில் ஆனையை அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தும் இடம் ஆதலால் ஆனை பந்தல் என்று பெயர் பெற்றதோ, இல்லை அன்று சுந்தரரை கயிலாயத் திற்கு அழைத்துச் செல்ல வந்த வெள்ளை யானை வந்து நின்ற இடம் ஆதலால் ஆனைப் பந்தல் என்று பெயர் பெற்றதோ, தெரியவில்லை. எப்படியோ ஒரு யானை வந்து அங்கு நின்றிருக்கிறது. அதனால் பந்தல் அமைக்க வேண்டும் என்றும் தோன்றியிருக்கிறது, மக்களுக்கு. இந்தக் கொட்டகையை ஒட்டியே ஒரு பெரிய பிராகாரம் இருக்கிறது. அதனைச் சுற்றிக் கொண்டு வடபக்கத்துக்கு வந்தால் அந்தப் பிராகாரத்திலேதான் தல விருட்சமான கொன்றை பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். அதனைச் சுற்றி ஒரு பீடம் இட்டு, சுவரும் எழுப்பியிருக்கிறார்கள்.

அதைக் கடந்தே கிழக்குப் பிராகாரம் வரவேணும். அங்கேதான் பிரதான வாயில். எல்லாம் ஒட்டுக் கூரைதான் என்றாலும் அந்த வாயில் சுவரில்தான் சுந்தரர் வெள்ளை யானையின் பேரில் கயிலை செல்லும் சிற்பம் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கிறது. இப்படிச் செதுக்கி வைக்க வேண்டும் - என்று தெரிந்திருக்கிறதே, அதற்கே ஒரு கும்பிடு போடலாம் தானே? இந்தப் பிராகாரத்திலே பிரதான வாயிலை அடுத்து தீபஸ்தம்பமும் கொடி மரமும் இருக்கின்றன. இந்த தீபஸ்தம்பம் முழுவதுமே இரும்பு அகல் விளக்குகளை அடித்து வைத்திருக்கிறார்கள். திருவிழாக்காலங்களில் எல்லா விளக்கையும் ஏற்றினால் எப்படியிருக்கும் என்று மானசீகமாகக் கற்பனை. பண்ணிப் பார்க்கலாம். தீப மங்கள சோதி நமோ நமோ என்று பாடவும் செய்யலாம். பொங்கழல் உருவனான அய்யனை, தீப ஒளி மூலம் அலங்கரிக்கக் கற்றவர் மலைநாட்டு மக்களே என்றால் மிகையில்லை. இந்தப் பிரகாரம் வழியாய் நடந்து தெற்குப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கு ஒரு சிறு சந்நிதி கிழக்கு நோக்கியிருக்கும். அது என்ன சந்நிதி என்று விசாரித்தால் அதுவே தக்ஷிணாமூர்த்தி சந்நிதி என்பர். தக்ஷிணா மூர்த்தி என்றால் தென்பக்கம் நோக்கியிருக்க வேண்டாமோ? இவர் என்ன கிழக்கு நோக்கியிருக்கின்றா? என்ற வியப்போடேயே கோயில் வாயில் வழியாக உள்ளே நோக்கினால், கல்லாலின் புடையமர்ந்து, வல்லாளர் நால்வருக்கும் உபதேசிக்க தக்ஷிணாமூர்த்தியைக் காணவில்லை. ஒரேயொரு சிவலிங்கம்தான் இருக்கிறது.

இந்தத் தனிக் கோயிலுக்குப் பக்கத்திலே சந்நிதி ஒன்றிருக்கிறது. அதுவே சாஸ்தா சந்நிதி. இவர் கோயிலுக்கு விமானம் இல்லை. வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். இவரே கயிலையில் சேரமான் பாடிய பாடல்களின் பிரதியை உலகுக்குக் கொண்டு வந்தவர் என்கிறார்கள். இந்த வரலாற்றை பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் கூறுகிறார்.

இனி இப்பிராகாரத்தைச் சுற்றிக் கொண்ட மேற்கு வாயில் வழியாக அடுத்த பிராகாரத்துக்குள் நுழையலாம். நாம் இங்கு வந்தது சேரமானையும் சுந்தரரையும் பார்க்கத்தானே? ஆதலால், அவர் இருக்கும் இடம் விரையலாம். இப்பிராகாரத்தில் தென்பகுதியில் மேற்குக் கோடியில் உத்சவமூர்த்திகளாக இருவரும் சிறிய வடிவிலே ஒரு சிறு அறையில் எழுந்தருளியிருக்கின்றனர். இரண்டும் ஒன்றரை அடி உயரமே உள்ள செப்புப் படிமங்கள். அழகு வாய்ந்தவைகளாக இல்லை. இவர்கள் வெளியில் உலா வருவதில்லை. ஆடிச்சுவாதியில் சுந்தரர் கயிலை சென்றதன் ஞாபகார்த்தமாக அன்று திருமஞ்சனம் ஆட்டப் பெறுகிறார்கள். இவர்கள் இருவரையும் வணங்கிவிட்டே மேல் நடக்கலாம்.

மேற்கு பிராகாரத்தைச் சற்றிக்கொண்டு, வடக்குப் பிராகாரத்திற்கு வந்தால், அங்கு நடராஜர் சந்நிதி இருக்கிறது. அவரே திருவஞ்சிக்குளம் சபாபதி. அப்படித் தானே அந்தப் பீடத்தில் பொறித்திருக்கிறது? இவர் விரித்த செஞ்சடை யான் அல்ல.

பாண்டிய நாட்டு நடராஜர்களைப் போல் பின்னு செஞ்சடை உடையவரே. இவரே சேரமான் வழிபட்ட மூர்த்தி என்கின்றனர். இங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. எதுவும் கவர்ச்சி உடையதாக இல்லை . இனி பிரதான கோயில் வாயிலுக்கு வரலாம். திரு அஞ்சைக்களத்து அப்பன் கருவறை பெரிதுதான். கிழக்கு நோக்கிய வாயில் வழியாக அங்குள்ள லிங்கத் திரு உருவைத் தரிசிக்கலாம், மிகவும் சிறிய திருமேனி.

இக்கருவறை மேல் உள்ள விமானம் மரத்தால் ஆக்கப்பட்டு செப்புத்தகடு வேய்ந்ததாக இருக்கிறது, இங்கு அம்மைக்குத் தனி சந்நிதி இல்லை. என்ன இவர் அம்மை இல்லா அப்பனோ என்று கேட்டால், இல்லை. செப்புப் படிமமாக ஒரு சிறு அம்மையையும் அப்பன் பக்கத்திலே வைத்துக் காட்டுவர். அங்குள்ள இருட்டில் விளக்கமாக ஒன்றும் தெரியாது.

இந்த அஞ்சைக் களத்து அப்பர் சுந்தரர் ஒருவராலேயே பாடப் பட்டவர், ஒன்றுக்கு இரண்டாக பரவையாரையும் சங்கிலியையும் மணந்த சுந்தரர், இந்த அஞ்சைக் களத்து அப்பனை தரிசித்த பின்தானே மனை - வாழ்க்கையை வெறுத்து, அதன்பின் கயிலை செல்ல விரைந்திருக்கிறார். அதையே அவர் தனது தேவாரத்திலும் பாடுகிறார்! வெறுத்தேன், மனை வாழ்க்கையை

விட்டொழிந்தேன், விளங்கும் குழைக்

காதுடை வேதியனே!

இறுத்தாய், இலங்கைக்கு இறை

ஆயவனை தலைப்பத்தோடு

தோள்பல இற்று வீழக்

கறுத்தாய் கடல் நஞ்சமுதுண்டு

கண்டம் கருகப் பிரமன்தலை

ஐந்திலும் ஒன்று

அறுத்தாய் கடங்கரை மேன -

மகோதை அணியார் பொழில்

அஞ்சைக் களத்து அப்பனே!

என்பது சுந்தரர் தேவாரம். இத்தலத்திற்கு வந்துதான் பரசுராமர் தன் தாயாம் ரேணுகையைக் கொன்ற பாவம் நீங்க, அஞ்சைக் களத்து அப்பனை வணங்கியதாகவும் புராணம் கூறுகிறது.

மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்றுதான். இந்தத் தலத்தையும் விடாமல் சென்று கண்டோம், என்ற திருப்தியோடு வீடு திரும்பலாம். கோவையிலிருந்து சிவக்கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள், ஆண்டு தோறும் இத்தலத்திற்கு வருவார்களாம். அவர்கள் கட்டளை இட்ட வண்ணமே இன்று கோவை அன்பர் ஒருவர் ஆண்டுக்கொரு முறை ஆடிசுவாதித் தினத்தன்று இத்தலம் சென்று வழிபாடு செய்து வருகிறார். அவகாசம் உள்ளவர்கள் அடுத்த ஆடிசவாதியில் அஞ்சைக்களம் சென்று அந்த அப்பனைத் தரிசிக்கலாம். பயணம் சிரமமானதுதான். அதற்குத் தக்க பலன் பெற சிறந்த சிற்ப வடிவங்களோ, கோயில் கட்டிட அமைப்போ இல்லாத குறையும் உண்டு.

இன்னும் இத்தலத்தில் சேரமான் பறம்பு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் சேரமான் பெருமாளது அரண்மனை. இருந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு கல்லையும் நட்டு எழுதி வைதிருக்கிறார்கள்.

இன்னும் கோளோற்பத்தி என்ற நூலிலே, இந்தச் சேரமான் பெருமாள், மெக்காவிற்குச் சென்று இஸ்லாமியராகி விட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் வழிவந்தவர்களே இன்றைய மலையாளத்து மாப்பிள்ளைமார் என்று கூறப்பட்டிருக்கிறதாம். நல்ல கதைதான், அறுபத்து மூன்று நாயன்மாரில் சிறந்த ஒருவரையே மதம் மாறியவராகக் கூறுவது! ஆதாரமில்லாத கற்பனைகளுக்குத்தான் கணக்கேது? அதை நம்பவா முடியும்?

15. கொடுங்கோளூர் பகவதி

வட இந்தியாவிற்குப் போய் அங்குள்ள இமயத்தின் சிகரத்திலேயே ஏறி அன்றைய வைஸ்ராயின் வாசஸ் தலமான சிம்லாவை அடைந்தால், அங்கு கோயில் கொண்டிருக்கும் பாதாள தெய்வம் சியாமளா என்றும், அவள் பெயரே சிம்லா என்று திரிந்து வழங்குகிறதென்றும் காண்போம். அந்த சிம்லாவிற்குச் செல்லும் வழியில் உள்ள' கால்கா, காளிகா தேவியின் இருப்பிடம். இன்றைய பஞ்சாபின் தலைநகரான சண்டிகரின் காவல் தெய்வம் சண்டிகா.

நமக்குத் தெரியும் காளிகட்டமே கல்கத்தா என்று மாறியதென்று, இப்படி காளிதேவியின் வழிபாடு வட நாட்டில் மலிந்திருக்க, அந்த காளிதேவி வழிபாடே தமிழ் நாட்டிலே துர்க்கை, பிடாரி, மாரியம்மன் வழிபாடாக பரவி இருக்கிறதென்று. இந்த வழிபாடு எல்லாம் தமிழ்நாட்டிலே நடப்பதற்கு காரணமாயிருந்தவள், சிலப்பதிகாரத்து காவிய நாயகியான கண்ணகி என்றும் கூறுவர். கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் வேட்டுவர் ஊரில் உள்ள கொற்றவை கோயிலில் தங்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வேட்டுவர், பூசை போடத் துவங்கியிருக்கின்றனர். துர்க்கையை வணங்கும் பூசாரி ஆவேசம் வந்து ஆடத் தொடங்கியிருக்கிறான். அப்போது அவன் அங்கு வந்திருந்த கண்ணகியைப் பார்த்து,

இவளோ கொங்கச் செல்வி

குடமலையாட்டி

தென் தமிழ்ப் பாவை

செய்தவக் கொழுந்து

ஒருமா மணியாய்

உலகுக்கோங்கிய

திருமாமணி

என்று ஏத்திப் புகழ்கிறான் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி - இவளைத் தெய்வமாகவே கொண்டாடும் பான்மையினாலே, இவள் துர்க்கையின் அம்சமாகவே பிறந்தாள் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார்.

இதனால்தான் கண்ணகியை பிற்காலத்தவர் காளி அம்சமாகவே கொண்டிருக்கின்றனர். கோவலன் கதை என்ற பெயரில் வழங்கும் அம்மானைப் பாடல் ஒன்றில் கண்ணகி திருவொற்றியூரில் வட்டபுரியம்மன் என்ற பெயரால் ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. இப்படி காளியாகவும் துர்க்கையாகவும் தமிழ்நாட்டில் வழிபடப் பெறும் கண்ணகியே, மலையாள நாட்டில், பகவதியாக வழிபடப் பெறுகிறாள். கொடுங் கோளூரில் உள்ள பகவதியை அங்குள்ள மக்கள் கண்ணகித் தெய்வமாகவே பாராட்டி வழிபடுகிறார்கள். அந்த பகவதி கோயில் கொண்டிருக்கும் பகவதி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

கொடுங்கோளூர் செல்ல சென்னை கொச்சி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஷோரனூரைக் கடந்து, இரிஞ்ஞாலக் குடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அவகாசம் இருந்தால் அந்த ஊரில் உள்ள பரதன் கோயிலுக்குச் சென்று, தவக்கோலத்தில் இருக்கும் பர்தனைக் கண்டு வணங்கலாம். அந்த ஊரிலிருந்து இரண்டு மைல் மேற்கே சென்றால் ஓர் உப்பங்கழி இடையிடும். முன்னர் எல்லாம் இந்த உப்பங்கழியைக் கடக்க, படகுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரம் அங்கே . காத்துக் கிடக்க வேணும்.

இப்போதெல்லாம் அந்த சிரமம் இல்லை. கழியில் நல்ல பாலம் ஒன்று அமைத்து விட்டார்கள். ஆதலால் நடந்து சென்றாலும் காரில் சென்றாலும், எளிதாக அந்தக் கழியைக் கடக்கலாம். எங்கே பார்த்தாலும் ஒரே தென்னஞ் சோலையாக இருக்கும். கொடுங்கோளூர் பகுதிக்கு வந்து சேரலாம். ஒரே ஒரு தெருவைக் கடந்ததும், ஒரு பெரிய மைதானத்தில் வந்து சேருவோம். அந்த மைதானத்தின் மத்தியில் இருப்பதுதான் கொடுங்கோளூர் பகவதி கோயில்

இக்கோயிலை அணுகும்போது வேட்டு வெடிச் சப்தம் பலமாகக் கேட்கும். இதென்ன, தீபாவளி சமயம் இல்லையே இங்கு வேட்டு வெடிப்பானேன் என்று கேட்டால் பகவதிக்கு வேட்டு வெடிப்பதில் நிரம்பப் பிரியம் என்றும், பிரார்த்தனை செய்து கொள்ளுகிறவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், 10 வெடி 20 வெடி வெடிக்கச் செய்வதாக பிரார்த்தித்துக் கொள்ளுவார்களாம். அதன்படியே சேவார்த்திகள் வேட்டு வெடிக்கிறார்கள் என்பார்கள்.

நமக்கும், நமது யாத்திரையெல்லாம் விக்கினமில்லாமல், நிறைவேற வேணுமே! ஆதலால் நாமும் ஆளுக்கு 4 வெடி என்று வெடிக்கலாம். நாலு வெடிக்கும் அங்குள்ளவர்கள் 4 அணாத்தான் வாங்கியிருக்கிறார்கள். கோயில் வாயிலை குறிப்பிட்ட காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருப்பார்கள்.

ஆதலால் கோயில் வாயிலைத் திறக்கும் வரை கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். சந்நிதிக்குக் கீழ்புறம் திறந்த வெளியில் சண்டிகேஸ்வரியின் சிலை இருக்கிறது. இந்த சண்டிகேஸ்வரிக்கு தவிடே அபிஷேகம்.

இந்த தவிட்டை கோயிலில் வளர்க்கப்படும் ஆடுகள் நாவால் நக்கி உண்ணுகின்றன. இந்த ஆடுகளையே பின்னர் பகவதிக்கு பலியிடுவது வழக்கம் என்கிறார்கள். இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் போது கோயில் மணி அடிக்கும். சந்நிதிக் கதவைத் திறந்து விட்டதற்கு அறிகுறி இது. உடனே விரைந்து கோயில் வாயிலுள் நுழைந்து, பகவதியின் சந்நிதி சேரலாம்.

பகவதி எட்டுக் கரங்களும், மூன்று கண்களும், கோரப் பற்களும் உடையவளாய் வீற்றிருக்கிறாள். பகவதி திருமுன்னர் - விளக்குகள் நிறைய இருக்கின்றன. இன்னும் யந்திரம், திருவாசி முதலியனவும் வைத்து வழிபடுகிறார்கள். இந்த சந்நிதிக்கு வலப்புறம் ஒரு கருவறை இருக்கிறது. பகவதியின் கருவறையிலிருந்து அதற்கு வாயிலும் இருக்கிறது.

ஆனால் அந்த வாயிலை அடைத்து வைத்திருக்கிறார்கள், வாயிலுக்கு முன் திரு வாசியை வைத்திருக்கிறார்கள். கருவறைக்கு வெளியில் மூடப்பட்டிருக்கும் கோயிலுக்கு விமானம் இருக்கிறது. இந்த மூடப்பட்ட கோயில் உள்ளே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனுடைய சாந்நித்யம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் சந்நிதியை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். பகவதிக்கு அருகே இடது பக்கத்தில் சப்தமாதாக்கள் சந்நிதி இருக்கிறது. அவர்களோடு விநாயகரும் இருக்கிறார்.

இந்த சந்நிதியை அடுத்த தெற்கு நோக்கிய கோயிலிலே கோடிலிங்க புரேசர் என்ற திருப்பெயரொடு சிவபெருமான் லிங்க உருவில் இருக்கிறார். அவரை வலம் வரக் கூடாதென்கிறார்கள். பகவதியை வலம் வந்து கோடிலிங்க புரேசரது இடப்பக்கமாகவே சுற்றி வெளியில் வர வேண்டும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. கோயிலுள் செல்லும் போதே வாயில் முன்புள்ள கடையில் மிளகு பாக்கெட்டுகள் வாங்கி உள்ளே பகவதிக்கு பூசை செய்யும் அர்ச்சகரிடம் கொடுத்து விடலாம். அதையே அவர் நமது ஆராதனைப் பொருளாக ஏற்று நைவேத்தியம் செய்து விடுவார். இப்படி கொடுங்கோளூர் பகவதிக்கு, வணக்கம் செலுத்தி விட்டு வெளியே வந்தால், அந்தக் கோயிலுக்கு இடப்புறம் ஒரு சிறு கோயிலைப் பார்ப்போம். அங்கு சென்று பார்த்தால் அங்கு கோயில் கொண்டிருப்பவர் க்ஷேத்திரபாலர் என்று அறிவோம்.

க்ஷேத்திரபாலர், பைரவ மூர்த்தங்களில் ஒன்று. பெரிய கம்பீரமான வடிவம், எட்டு ஒன்பதடி உயரம், அதற்கேற்ற காத்திரம், அவரையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

கொடுங்கோளூர் பகவதியைக் கண்ணகி என்பவர்கள், இந்த க்ஷேத்திரபாலரை கோவலன் என்கிறார்கள். கோவலனுக்கும், க்ஷேத்திர பாலருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. இனி ஒரே ஒரு கேள்வி. உண்மையிலேயே கொடுங்கோரூர் பகவதி கண்ணகியின் வடிவந்தானா? சோழ நாட்டில் உள்ள புகாரில் பிறந்து வளர்ந்து, கோவலனை மணந்து, பின்னர் அவனுடன் பாண்டிய நாட்டிற்கு வந்து அங்கு அவனை இழந்து, பின்னர் சேர நாடு சென்று விண்ணேறிய பத்தினிக் கடவுள் கண்ணகி, இவளே துர்க்கையின் அவதாரம் என்று எண்ணுவதற்கு சிலப்பதிகாரம் இடம் தருகிறது.

சேரமன்னனாகிய செங்குட்டுவன் வடதிசைக்கு படை கொண்டு, அங்கு தமிழ் மன்னரை இழித்துக் கூறிய கனக விசயர்களை வென்று, இமயத்தில் கல்லெடுத்து, அதைக் கனக விசயர் தலை மீது ஏற்றி, தன் தலைநகரான வஞ்சிக்குத் திரும்பி, அங்கு கண்ணகிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி வழிபட்டான் என்பது வரலாறு. இதனையே சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டம் விரிவாகக் கூறுகிறது.

வஞ்சி என்பது, திருவஞ்சைக்களம் கொடுங்கோளூர் முதலிய ஊர்கள் சேர்ந்த பகுதியே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியிருக்கின்றனர். சேர மன்னனாகிய சேரமான் பெருமான் இருந்து அரசாண்ட இடமும் கொடுங்கோளூரே. ஆகவே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுப்பித்த கோயில் இதுவாக இருக்கலாம். ஆனால் இன்று கட்டப்பட்டிருக்கும் கோயில் எல்லாம் பிந்திய காலத்தில் கூறை வேய்ந்து கட்டப்பட்டவையே. கொடுங்கோளூர் பகவதியே பழய கண்ணகி என்று கொண்டாலும், இன்று வழிபடப் பெறும் வடிவமே சேரன் செங்குட்டுவன் பாரதிஷ்டை செய்த வடிவம் என்று கொள்ள வேண்டியதில்லை, அக்கோயில் உள்ளேயே கருவறையை ஒட்டி மூடிக் கிடக்கும் அறையில் ஒருக்கால் அந்தப் பழைய வடிவம் இருந்தாலும் இருக்கலாம்.

இன்னும் கண்ணகியை இலங்கை மக்கள் பத்தினிக் கடவுளாக இன்று வழிபடுகின்றனர் என்கிறார்கள். அப்பத்தினிக் கடவுளை பௌத்தர்களும் இந்துக்களும் சேர்ந்தே வணங்குகிறார்கள் என்பர். தமிழ்நாட்டில் முதல் முதல் இப்பத்தினிக் கடவுளுக்கு கோயில் எடுப்பித்தவன் சேரன் செங்குட்டுவனே. அந்தக் கண்ணகி பிரதிஷ்டைக்கு கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும் வந்திருந்திருக்கிறான். பின்னர் அவனே கண்ணகி வழிபாட்டை இலங்கையிலும் ஆரம்பித்திருக்கிறான். அவனுடன் வஞ்சிக்கு வந்த பௌத்தர்கள் சும்மா இராமல் தங்கள் சமயப் பிரசாரத்தையும் ஆரம்பித்திருக்க வேணும்.

அதனால் அன்றைய சேர நாட்டு மக்கள் பௌத்தர்கள் பேரில் கோபமுற்று அவர்களைத் திட்டிப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கேரள நாட்டில் அந்தப் பாடல்கள் பிரசித்தம். இன்னும் கொடுங்கோளூர் கோவிலுக்கு வரும் பௌத்தர்களை, கேரள மக்கள் பச்சை பச்சையாகத் திட்டி பாடல்கள் பாடுகிறார்களாம். நல்ல காலம்! நான் அங்கு போயிருந்த போது பௌத்தர்கள் ஒருவரும் வரவில்லை. அந்த திட்டுகளையும் கேட்க முடியவில்லை.

பராசக்தியின் அம்சமே காளி, பகவதி என்பவள் எல்லாம். வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருபவள் அவள். அதே சமயத்தில் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கவும் அவள் தவறுவதில்லை. அதனாலேயே அவளை கண்கண்ட தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இக்கண் கண்ட தெய்வங்களின் ஜாபிதாவை ஒரு புரட்டு புரட்டினால், அங்கு திருச்செங்குன்றூர் பகவதி, கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி, கருவூர் வஞ்சி, ஒற்றியூர் வட்டப் பாறை அம்மன், நாகப்பட்டினம் பத்திரகாளி, நாட்டரசன் கோட்டை. கண்ணாத்தாள், முப்பந்தல் பேச்சி, ஆலங்காட்டுக் காளி எல்லோருமே வருவர். கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி என்றும் கொடுங்கோளூர் பகவதி பெயர் பெற்றிருக்கிற காரணத்தால், அவளே அந்தச் சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி என்றும் தெளியலாம். அந்த பத்தினித் தெய்வத்திற்கு வணக்கம் செலுத்தி ஊர் திரும்பலாம்.

16. குருவாயூர் அப்பன்

சித்திரை விஷு என்னும் சித்திரை மாதப் பிறப்பு தமிழ் வருஷப் பிறப்பாகக் கருதப்படுகிறது. என்றாலும் தமிழ் மக்கள் பொங்கலைக் கொண்டாடுகிற அளவுக்கு இந்தத் தமிழ் வருஷப் பிறப்பைக் கொண்டாடுகிறதில்லை. ஆனால் மலையாளிகளுக்கே சிறப்பான விழா இந்த விஷு தான். வருஷப் பிறப்பை அவர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா! அதற்கு முந்திய நாள் இரவே வீட்டையெல்லாம் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வீட்டின் நடுக் கூடத்தில் அரிசி காய்கறிகளை எல்லாம் சேமித்து வைத்து அத்துடன் பட்டுப் புடவைகள், தங்க நகைகளையும் வைத்து, குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே இந்நடுக் கூடத்திற்கு வந்து முதல் முதல் இந்த நல்ல சாமான்களையே பார்ப்பர்.

வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய அம்மா கண்களை கைகளால் பொத்தி அழைத்து வந்து சாமான்கள் வைத்திருக்கும் நடுக் கூடத்திற்கு வந்த பின்னே, கண்களைத் திறப்பர். வழியில் கண்களைத் திறந்து மற்ற சாமான்களைப் பார்த்து விடக் கூடா தல்லவா? இந்தச் சாமான்களோடு அவரவர் வீட்டில் பூஜையில் இருக்கும் படங்களையும் சேகரித்து வைத் திருப்பர்.

இவற்றையெல்லாம் விட, தமிழ் வருஷப் பிறப்பன்று முதல் முதல் குருவாயூரப்பன் முகத்தில் விழிப்பது அந்த வருஷம் முழுவதும் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை காரணமாக, அதற்கு முந்தியே மக்கள் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்காக குருவாயூர் கோவிலில் சென்று அதன் பிராகாரங்களில் படுத்துக்கிடப்பர். காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு கோயில் கதவம் திறந்ததும் கண்ணை மூடியபடியே விழுந்தடித்து ஓடி வந்து குருவாயூரப்பனை தரிசித்து விட்டே மற்றவர்களைப் பார்ப்பார்கள். இப்படிப் பார்க்கிறவர்கள் ஏதோ சாதாரண பொது மக்கள் என்று மாத்திரம் எண்ண வேண்டாம். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வீட்டுப் பெண்கள் கூட விஷு அன்று குருவாயூரப்பன் தரிசனத்திற்குக் காத்துக் கிடப்பர். அவரவர் அணிந்திருக்கும் துண்டுகளையோ, சேலை முந்தானையையோ விரித்துத் தான், அதில் படுத்து நித்திரை செய்வர்.

இந்த விஷு தரிசனம், மிக்க சிறப்பாக ஆண்டுதோறும் நடக்கிறது. நாளும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குருவாயூரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நமக்கெல்லாம் விஷு அன்று குருவாயூரப்பனைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது எளிதான காரியம் இல்லைதான் என்றாலும் அவகாசம் கிடைக்கும் பொழுதெல்லாம் குருவாயூர் செல்லலாம். குருவாயூரப்பனாம் பரந்தாமனைக் கண்டு தரிசிக்கலாம். பெறற்கரிய பேறுகள் எல்லாம் பெறலாம். அத்தகைய வாய்ப்பினை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவே குருவாயூரப்பனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லி, அவனிடத்து ஆற்றுப் படுத்தவே இக்கட்டுரை.

குருவாயூர் இன்றைய கேரள ராஜ்ஜியத்தில் நடுநாயகமான இடத்தில் இருக்கிறது. வடக்கே வட மங்கலமும் தெற்கே திருவாங்கூர் கொச்சியும் இருக்க, இரண்டுக்கும் இடையிட்ட இடத்தில் இருக்கிறது. வடக்கே இருந்து வருவோர் ரயிலில் வந்தாலும் காரில் வந்தாலும் ஷோரனூர் எல்லாம் கடந்து திருச்சூர் வந்து சேர வேணும். அங்கிருந்து மேற்கு நோக்கி, 15, 15 மைல் போய் அதன்பின் தெற்கே திரும்பி, நான்கு மைல் போனால் குருவாயூர் போய்ச் சேரலாம்.

போகிற வழி எல்லாம் ஒரே தென்னம் சோலைகள் தாம், கண்ணுக்கு மிகவும் இனிமையான பசுமை நிறைந்த காட்சியாக இருக்கும். கோயிலுக்கு இடப்புறமாகவே சென்று, அங்கு தேவஸ்தானத்தார் கட்டி வைத்திருக்கும் தேவஸ்தானச் சத்திரத்திற்கு முதலில் போய்ச் சேரலாம். சேவார்த்திகள் பெருகப்பெருக சத்திரத்து வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அங்கு தங்கி, ஸ்நானம் எல்லாம் முடித்து விட்டு, உடுத்திய வேட்டி துண்டுடனே தான் கோயிலுக்கு புறப்பட வேணும்.

கோயில் சிறிய கோயில்தான் என்றாலும், கோயில் வாயிலில் ஒரு யானையும், கோயில் பிராகாரத்தில் மூன்று நான்கு யானைகளையும் பார்க்கலாம். வேழம் உடைத்து மலை நாடு என்றல்லவா பாடினாள் ஔவை. யானைகளையே எழுந்திருத்து முதலான காரியங்களுக்கு உபயோகப் படுத்துவதால் ஒன்றுக்கு நான்காக யானைகள் இருக்கின்றன இங்கே. கோயில் வாயிலில் எல்லாம் கோபுரம் ஒன்றும் இருக்காது. மரத்தால் தட்டுத் தட்டாகக் கட்டி ஓடு போட்ட கூரை வேய்ந்திருக்கும். அந்தக் கூரையையும் முந்திக்கொண்டு பெரிய தகரக் கொட்டகை ஒன்று இருக்கும்.

இந்தக் கொட்டகையைக் கடந்து வாயிலுக்கு வந்து அதனையும் கடந்தே உள்ளே வரவேணும், பகலானாலும் சரி, இரவானாலும் சரி, கோயிலுள் கூடி இருக்கும் மக்கள் எல்லாம் 'நாராயணா, நாராயணா' என்று பகவந் நாம் ஸ்மரணை செய்து கொண்டே நிற்பர். இந்த நாராயண ஸ்மரணையைத் தவிர வேறு ஒலியையே கேட்கமுடியாது. அன்றே பாடினானே திருமங்கை மன்னன்,

குலம் தரும், செல்வம் தந்திடும்

அடியார் படுதுயர் ஆயின எல்லாம்

நிலந் தரம் செய்யும், நீள் விகம்பு அருளும்

அருளொடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

ஆம், "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்” நாராயணா என்னும் நாமம் என்று எக்களிப்போடு திருமங்கை மன்னனால் எப்படிப் பாடமுடிந்தது என்று அறிய விரும்பினால், குருவாயூரப்பன் சந்நிதிக்குச் சென்றால் போதும். கோயிலுள் சென்றதும் தீபஸ்தம்பம் இருக்கும் கீழ்பக்கத்து நடைபாதைக்கு வந்து சேருவோம். இப்படி கோயிலைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தையே மதிலகம் என்கின்றனர். அதன் தென் கீழ மூலையில்தான் கூத்தம்பலம் இருக்கிறது. அங்குதான் மலையாள நாட்டிற்கே சிறப்பான கூத்துகள் நடக்கின்றன. விசேஷ காலங்களில் மற்ற காலங்கள் பாகவத பாராயணங்களும் நடக்கும். இதைக் கடந்து மேற்கே திரும்பினால் அங்கு ஒரு சாஸ்தா சந்நிதி. அங்கு வணக்கம் செய்து விட்டு பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்தால், திரும்பவும் கீழ் நடைபாதைக்கு வந்து கோயிலுள் நுழையலாம். இந்தப் பாதை குறுகலாகவே இருக்கும். இதற்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள மண்டபங்களே வாயில் மண்டபங்கள். இவைகளைக் கடந்தே உள்கோயில் செல்ல வேணும்.

இதுதான் உள் பிராகாரம். இந்தப் பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகருக்கு ஒரு சந்நிதியிருக்கிறது. இங்குள்ள ஆரத்துக் கெட்டிபடி என்ற இடத்தில் இருந்துதான் மேல்பத்தூர் பட்டாத்திரி என்பவர் அவருடைய பிரபலமான 'நாராயணீயம்' என்ற பிரார்த்தனை நூலை எழுதினர் என்பர்.

இவற்றை எல்லாம் கடந்தபின் திரும்பவும் கீழ்வாயில் வந்து கருவறையில் உள்ள குருவாயூரப்பனைத் தரிசிக்க வேணும். குருவாயூரப்பன் சுமார் இரண்டடி உயரமே உள்ள சிறிய வடிவினன் தான். புஷ்பாலங்காரம் பண்ணி வைத்திருப்பார்கள்.

இரவு வேளைகளில் சென்றால் விளக்கொளியில் பிரமாத அழகுடன் காட்சி தருவான். ஆனால் அவனை, அவன் மேனியை, அலங்காரமில்லாத மேனியைக் காண விரும்பினால், அதிகாலை மூன்று மணிக்கே கோயில் செல்ல வேணும். நடை திறந்ததும், இரவு இருந்த புஷ்ப அங்கி சேவையிலும் காணலாம். பின்னர் மலர்களைக் களைந்து தைலக் காப்பிடும்போது மேனியின் முழு அழகையுமே காணலாம். சங்காபிஷேகம், மலர் நைவேத்தியம் எல்லாம் நடந்தபின் வாயில் கதவை அடைத்து விடுவார்கள்.

ஆனால் காலை ஏழு மணி சுமாருக்கு, யானை மீது குருவாயூரப்பனின் தங்கச் சிலை ஒன்றை ஏற்றி, மதிலகத்தில் பவனி வருவர். அப்போது பன்னிரண்டு விளக்கு ஏந்திச் செல்வர். இவ்விளக்கு ஏந்திச் செல்லும் உரிமை சில அம்பல வாசிக் குடும்பத்தினர்க்கே உண்டு. இது முடிந்த பின்தான் க்ஷீர அபிஷேகம் என்னும் பாலபிஷேகம் நடைபெறும். இது காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த க்ஷர அபிஷேகம், நவகாபிஷேகம் பந்தாட்டி நைவேத்தியம் பூசைகள் எல்லாம் காலை 9.30 மணி வரை நடக்கும். அடுத்த பூஜை உச்சிக் காலம்தான். மத்தியானம் 12.30 மணிக்குத்தான். அதன் பின் கோயில் நடையைப் பூட்டிவிடுவார்கள். திரும்பவும் மாலை 5.30 மணிக்குத் தான் திறப்பார்கள்.

அப்போதும் ஒரு ஸ்ரீபலி ஊர்வலம் நடக்கும். இரவு 8 மணிக்கு நைவேத்தியம் பூசை எல்லாம் நடக்கும். கடைசியாக திருப்புகை கொழுத்தி இரவு 10.30 மணிக்கே நடை சாத்துவார்கள். கோயிலில் பிரசாதமாக சந்தனமும் மலர்களும் தான் கொடுப்பர். பால் பாயசம், அப்பம் முதலியவைகளும் கிடைக்கும். இவைகளை விலை கொடுத்தே வாங்க வேணும்.

இங்கு நடக்கும் பிரார்த்தனைகளில் சிறப்பானது துலாபாரமும், குழந்தைகளுக்கு அமுதூட்டுதலும், திருமணம் செய்தலுமே. தண்ணீர் முதல் நவரத்தினம் வரை, ஆளின் எடைக்கு எடை தருவதாகப் பிரார்த்தித்துக் கொள்வர். அப்படியே பிரார்த்தனை செய்தவரையும் அவர் கொண்டுவரும் பொருளையும் நிறை போட்டு கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர். பிறந்த குழந்தைக்கு ஒரு வயதானதும், அமுதூட்டவும், குருவாயூரப்பன் கோவிலை நாடிவருபவர் பலர். கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் நைவேத்யம் முதலியவற்றை முதலில் குழந்தைக்குக் கொடுத்து, அதன்பின் அன்னம் கொடுப்பர். திருமணங்களையும் குருவாயூரப்பன் சந்நிதியிலேயே நடத்துவர் சிலர். இதற்கெல்லாம் கோவிலுக்கு கட்டணங்களும் செலுத்த வேணும்.

எல்லாம் சரிதான். குருவாயூரப்பன் அருளைப் பற்றி சிறப்பாகச் சொல்வார்களே, அதைப்பற்றி ஒன்றுமே சொல்லக் காணோமே என்றுதானே கேட்கிறீர்கள். ஆதியிலே, இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை பிரம்மா மகாவிஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் அதை அவர் கச்யபருக்குக் கொடுக்க அவர் அதனை கண்ணனைப் பெற்றெடுத்த தேவகி வாசுதேவருக்குத் கொடுத்தார் - என்பது பாகவத வரலாறு. பின்னர் உத்தவர் இதனைப் பெற்றிருக்கிறார். அதன் பின் கலியுகத்தில் மக்கள் எல்லாம் உய்ய உத்தவர் குருவிடமும் வாயுவிடமும் கொடுத் திருக்கிறார்.

இவர்களே இந்த நாராயணனை மான்மியூர் என்று அன்று வழங்கிய இந்தப் பிரதேசத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இப்படி குருவும் வாயுவும் சேர்ந்து கொண்டுவந்த காரணத்தாலேயே இவன் குருவாயூர் அப்பன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியிருக்கிறான். சந்திரவம்சத்து அரசனான பரீக்ஷித்து பாம்புகளைப் பழிவாங்க, அந்த பரீஷித்துவின் மகனான ஜனமேஜயன் நாகங்களுக்கு அஞ்சி வாழ்கிறான். நாகயக்ஞமே செய்கிறான். கடைசியில் அவனை, குட்டம் என்னும் நோய் பிடித்துக்கொள்கிறது. என்ன பண்ணியும் நீங்காத குட்டம் குரு வாயூரப்பனை வழிபட்டதாலே தீர்ந்தது என்பது வரலாறு.

இந்த குருவாயூரப்பனுக்கு மதில்களோடு கூடிய கோயில் எடுப்பித்தது ஒரு பாண்டிய மன்னனே. அவனும் பாம்பொன்றால் தீண்டப் படுவான் என்று புரோகிதர்கள் சொல்ல, அவன் குருவாயூரப்பனை வணங்கி அந்த சாப விமோசனம் பெற்றிருக்கிறான். இன்னும் குருவாயூரப்பனின் அற்புத லீலைகள் அனந்தம்.

திப்பு சுல்தான் இப்பக்கம் படையெடுத்து வந்தபோது, அவனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தவர். குருவாயூரப்பன் - என்பார்கள். அவன் இக் கோயிலுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிபந்தங்கள் அனந்தம். அக்காலத்தில் ஹரிஜனங்களை கோயிலுள் அனுமதிப்புதில்லை. ஏகாதசி அன்று மட்டும் இந்த விதி விலக்கு உண்டு. ஒரு ஏகாதசி அன்று ஹரிஜனங்கள் பந்தி பந்தியாக கோயிலுள் நுழையும் போது ஒரு வயோதிக பிராம்மணர் வருந்தினாராம். அச்சமயம் கோயிலுள் இருந்த வில்வ மங்கள சாமியார் அந்த அந்தணரைத் தொட ஹரிஜனங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு குருவாயூர் அப்பனாகக் காட்சி கொடுத்தார்களாம்.

இன்னும் பூந்தானம் நம்பூத்ரி என்பவர் ஒரு பிரார்த்தனை நூலை எழுதி, அதை நாராயணீயம் பாடிய மேல்பத்தூர் பட்டாத்திரியிடம் எடுத்துப் போன போது அதை அவர் அலக்ஷியப்படுத்தி விட்டாராம். ஆனால், பட்டாத்திரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி, உன்னுடைய வியக்தியை விட நான் பூந்தானத்தின் பக்தியையே மதிக்கிறேன் என்றாராம். இன்னும் ஒரு வயோதிகர் தனிவழி போனபோது, அவரைக் கள்ளர்கள் மறித்து அவர் உடைமைகளைப் பிடுங்க, அதையெல்லாம் குருவாயூரப்பனே மீட்டுக் கொடுத்தான் என்பர். இன்னும் இதுபோன்று எண்ணரிய அற்புதங்களை நிகழ்த்தியவர் தான் குருவாயூரப்பன். மலையாள மக்கள் இந்த அப்பனை, இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக வழிபடுவதில் வியப்பில்லை. மலையாள மக்களுக்கு மாத்திரம் என்ன, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்குமே அவன் கண்கண்ட தெய்வம்தான் - அவனை வழிபட்டுப் பேறும் புகழும் அடைய எல்லோருமே விரையலாம் தானே!

17. நாகசாயி மந்திர்

நாம் யார்க்கும் குடி அல்லோம்,

நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்

நடலை இல்லோம்,

ஏமாப் போம், பிணி அறியோம்

பணிவோம் அல்லோம், இன்பமே

எந்நாளும் துன்பம் இல்லை

தாம் ஆர்க்கும் குடி அல்லாத்

தன்மையான சங்கரன்நற்

சங்க வெண் குழை ஒர்காதில்

கோமற்கே நாம் என்றும்

மீளா ஆளாய் கொய்மலர்ச்

சேவடி இணையே குறுகினோமே

என்பது பிரபலமான ஒரு தேவாரப்பாடல். இதைப் பாடியவர் அப்பர் பெருமான் என்னும் நாவுக்காசர். சமணாயிருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், அவரை துன்புறுத்தியதோடு, தன் முன் ஆஜர் ஆகும்படி கட்டளை பிறப்பித்தபோது அத்தகைய உத்திரவை எதிர்த்துப் பாடிய பாடல் என்பர். நாம் யார்க்கும் குடி அல்லோம் தமனை அஞ்சோம், என்று பாடும் தெம்பு ஒருவருக்கு இருந்தது என்றால் அது அவரது அஞ்சாமையையும் அவர் உள்ளத்தில் இருந்த உறுதியையுமே காட்டுகிறது. இதே உறுதி மற்ற மக்கள் உள்ளத்திலும் எழுவதற்கு அது உதவி செய்ய வேண்டாமா?

இறைவன் பால் நம்பிக்கை ஏற்படுவது என்பது எளிதான காரியமா என்ன. நாமெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தாம். ஆனால் அந்தக் கடவுள் நம்பிக்கை உரம் பெற்றதாக இல்லையே. தலைவலி என்ற உடனேயே, ஆஸ்ப்ரோ மாத்திரையைத் தேடித் தானே ஓடுகிறோம். நமச்சிவாயா, நமோ நாராயணாய என்று சொல்லி தலைவலியை விரட்டி அடிக்கும் மனப்பக்குவம் நமக்கு இல்லையே. இந்த நிலையில் ஒரு பெரியார் “நானிருக்கப்பயமேன்“ என்ற தாரக மந்திரத்தை ஓதி அதன் மூலம் நமது அசலங்களை எல்லாம் போக்கி, அருளும் ஆற்றல் பெற்றிருந்தால் அப்பெரியாரை நோக்கி மக்கள் எல்லாம் ஓடுவதில் வியப்பில்லையே! அந்த தார்க மந்திரத்தை ஓதி தன் பக்தர்களை எல்லாம் அஞ்சாது. காக்கும் அருள் வள்ளல் தான் சாயிபாபா.

அது என்ன சாயிபாபா, பேரைக் கேட்டால் முஸ்லிம் பக்கிரியின் பெயர் போல் அல்லவா இருக்கிறது என்கிறீர்களா? ஆம் கிட்டத்தட்ட 150 வருஷங்களுக்கு முன்னால் நைஜாம் ராஜ்யத்தை சேர்ந்த பாத்ரி என்ற ஒரு சிற்றூரில் ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்து பின்னர் ஒரு முஸ்லீம் பக்கிரியால் வளர்க்கப்பட்டு, இன்றை பம்பாய் ராஜ்யத்தில் கேஸர் தான் பக்கத்தில் உள்ள சீரடி என்னும் தலத்தில் வந்து தங்கியிருந்த பெரியார் அவர். இந்து முகமதியர் வேற்றுமைகளை எல்லாம் கடந்தவர். ராமும் ரஹீமும் அவருக்கு ஒன்றே. இன்று சீர்டியிலும், ஏன் இந்திய நாடு முழுவதிலுமே அவரை எண்ணிறந்த இந்துக்களும் முகம்மதியர்களும் தெய்வமாகவே போற்றி வருகின்றனர்.

அவரை வழிபடுவதால் நோய் நீங்குகின்றனர். துன்பம் தவிர்கின்றனர். இன்னும் எண்ணிய எண்ணியவாறு எய்திவாழும் பேற்றையும் பெறுகின்றனர். இவர் சீரடியில் இருந்தபோது பல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்பர். அவர் தங்கியிருந்த மசூதியில் ஒரு நந்தா விளக்கை எரித்து வந்திருக்கிறார். அதற்கு எண்ணெய் எல்லாம் மக்கள் உதவியிருக்கின்றனர்.

ஒரு நாள் எண்ணெய் இல்லாது போக, பக்கத்தில் வைத்திருந்த கூஜாவில் உள்ள தண்ணீரையே ஊற்றி விளக்கை எரித்தார் என்பார்கள். இப்படித் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட ஒரு சிலரே பாபாவைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லியிருக்கின்றனர். அதன் பின்னரே அவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகியிருக்கிறது. பலபல அதிசயங்கள் நிகழ்த்திருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் அவர் ஜீவியவந்தராக இருந்த காலத்தில் நடந்தவை.

இன்னுமோர் அதிசயம். தமிழ் நாட்டில் பொருள் வளம் மிகுந்த கோயம்புத்தூரில் சில வருஷங்களுக்கு முன்னே அவரது திரு உருவப் படத்தின் முன் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிசயம் இதுதான். இருபது வருஷங்களுக்கு முன் சாயிபாபாவின் பெயர் தமிழ் நாட்டில் பிரசித்தமில்லை.

சென்னையில் நரசிம்மசுவாமி என்ற செல்வந்தர் ஒருவர் இருந்திருக்கிறார். அவருடன் திரு AVK. சாரி என்பவரும். இருந்து வந்திருக்கிறார். இருவரும் ஒரு நாள் கோவைக்கு வந்திருந்த போது, கோவையில் திரு. தி. வரத ராஜ ஐயர் என்பவரும் அவரது சகோதரன் C.V. ராஜனும் சாயிபாபா பக்தர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோவையில் ரத்னசபாபதிபுரம் என்ற புதிய குடியிருப்பில் வடக்கே ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கிணறு ஒன்று வெட்டி ஒரு பர்ண சாலையும் அமைத்து அதில் சாயிபாபாவின் திரு உருவப்படம் ஒன்றை வைத்து வணங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இன்னும் சிலரும் வந்து வழி பாட்டில் கலந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

1943ம் வருஷம் ஜனவரி மாதம் 7ந் தேதி வியாழக்கிழமை, இந்த சாயிபாபா சந்நிதியில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பஜனை ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னே எங்கிருந்தோ ஒரு பெரிய நாகம் ஒன்று ஊர்ந்து வந்தது. சாயிபாபா படத்தை வலம் வந்தது. பின்னர் தன் படத்தை விரித்து ஆட ஆரம்பித்தது. அந்த நாகத்தின் படத்தில் சங்கு சக்கரங்கள் திரிபுண்டரம் முதலிய சின்னங்கள் அழகாக இருந்தன. அந்த நாகம் அப்படி ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ட ஒரு சில பக்தர்கள் மற்றவர்களுக்கு சொன்னார்கள். ஆணும் பெண்ணும் பிள்ளைகளுமாய் பலர் கூடிவிட்டனர். மலர் கொண்டு வந்து நாகராஜன் பேரிலும் சாயிபாப படத்தின் பேரிலும் அர்ச்சித்தனர்.

அந்த நாகமும் பலமணி நேரம் ஆனந்த பரவச நிலையில் ஆடிக் கொண்டிருந்து விட்டு பின்னர் தன்னை சுற்றியிருந்த மலர்க் குவியல்களிலிருந்து விடுபட்டு எங்கோ சென்று மறைந்துவிட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பின்தான், அந்த பர்ணசாலையை ஒரு பெரிய கோயிலாகவே கட்ட வேண்டும், என பக்தர்கள் முனைந்தனர். கட்டியும் முடித்தனர். ஒரு பெரிய படம் ஒன்றையும் எழுதிவைத்தனர். பூசைகளையும் தொடர்ந்து நடத்துகின்றனர். இப்படி உருவானதே கோவை நாகசாயி மந்திர்.

இந்த மந்திரில் இன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஞாயிற்றுகிழமையும் எண்ணிறந்த பக்தர்கள் கூடுகின்றனர்; வணங்குகின்றனர். பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அந்தப் பிரார்த்தனைகளும் அப்போதைக்கு அப்போதே நிறைவேற்றி வைக்கவும் பெறுகின்றனர். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். சைவனாய் பிறந்திருந்தாலும் சிவனிடம் எவ்வளவு பக்தியோ அதில் குறையாத பக்தியே விஷ்ணுவிடத்தும் வைத்திருப்பவன்.

இன்னும் குமரன் எல்லோரையும் தொழுது வணங்கிறவன் தான். நான் எப்படி சாயிபக்தன் ஆனேன் என்பது சில சைவர்கள் ஐயம். எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர் சாயிபக்தனாக இருந்தார் அவர் ஒரு வியாழக்கிழமை காலை என்னிடம் மாலையில் சாய்பாபா கோயிலுக்கு வாருங்களேன் என்றார்.

எனக்கு அப்போது சாயிபாபாவைப் பற்றி அதிகம் தெரியாததால் அக்கறை காட்டவில்லை. அவர் சொன்னார். சாயிபாபாவை நினைத்துக் கொண்டு ஒரு சிறு பிராத்தனை செய்து கொள்ளுங்கள். இன்று கோயிலுக்கு வாருங்கள் நாளை அது நடக்கும் என்பதற்கு ஓர் அறிகுறி காண்பீர்கள் என்றார். சரி இதை பரீக்ஷை செய்து பார்த்து விடலாமே என்று எண்ணியே அன்று மாலை நண்பருடன் கோயிலுக்குச் சென்றேன்.

அப்போது எனக்கு உத்தியோகத்தில் I.A.S.பதவி வர வேண்டிய காலம். அது எக்காரணத்தினாலோ எதிர்பார்த்த காலத்தில் கிடைக்கவில்லை. நாட்கள் கடந்து போய்க் கொண்டேயிருந்தது. ஆதலால் அன்று கோயிலுக்குப் போனேன். சாயிபாபாவின் படத்தை பார்த்தேன். அவர் ஜீவியவந்தராக இருந்தபோது அவர் கண்கள் தீக்ஷண்யம் பெற்ற இருக்குமாம். அதை எதிர் நோக்கவே மக்களால் இயலாதாம்.

அங்கு சாயிபாபாவின் உருவத்தில் உள்ள கண்களை பார்க்கப்பார்க்க அவை என் இதயத்தையே ஊடுருவுவது போன்ற அனுபவத்தைப் பெற்றேன். அதுவே ஓர் உள்ள நிறைவைத் தந்தது. அதன் பின் எனக்கு IAS பதவி விரைவில் கிடைக்க வேண்டும் என்று உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினேன், மறு நாட்காலை நான் ஆலுவலகத்திற்குச் சென்றால். IAS வரிசையில் சேர்ப்பதற்கு, வேண்டிய தகவல் ஒன்று கேட்டு சென்னை சர்க்காரிட மிருந்து தபால் வந்திருந்தது.

அதற்கு பின் ஆறுமாதம் கழித்தே IAS பதவி வந்தது என்றாலும், அன்று மனதிலே ஒரு தெம்பு பிறந்தது. சாயிபாபா பக்தனாக நானும் மாறினேன். அதன் பின் ஒவ்வொரு குரு வாரமும், தவறினால் ஞாயிற்றுக் கிழமை அன்றும் நாக சாயி மந்திருக்குப்போய் வந்தேன். இன்னும் கஷ்டங்கள் நேர்ந்தால் சாயிபாபாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அக்கஷ்டங்கள் தீரவும் பெறுகிறேன்.

எனது உபாசனா மூர்த்தி பிள்ளையார்தான். தஞ்சைப் பெருஉடையாரிடத்திலே, தில்லைச் சிற்றம்பலவனிடத்திலே உள்ள பக்தியை விட திருவேங்கடவனிடத்திலே அழுத்தமான பக்தியும் நம்பிக்கையையுடையவன் தான் என்றாலும் அதே சமயத்தில் சாயிபாபா பக்தனாகவும் வாழ்கிறேன். இதில் எல்லாம் முரண்பாடு ஒன்றும் இல்லை.

ஏதோ மனதுள் பற்றுக் கோடு கொள்வதற்கு ஒரு மூர்த்தம் வேண்டும். அது சாயிபாபாவாக இருக்கிறது. எனக்கு இன்று. "நான் இருக்க பயமேன்“ என்ற தாரகமந்திரம் நம் காதுகளில் ஒலித்து உள்ளத்தில் நிறைந்து விட்டால், நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்று உறுதியே பிறந்து விடுகிறது அல்லவா? இப்படி ஒரு கடவுள் நம்பிக்கை வளர்வதற்கு துணை புரிவராக நாகசாயிமந்திர் பாபா என் வாழ்வில் புகுந்திருக்கிறார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

18. நவ தாண்டவம்

ரஷ்ய நாட்டின் பிரசித்தி பெற்ற நடனவித்தகி மாடம் பாவ்லோவா, ஒருநாள் அவள் தனது நடனங்களை ஒரு பெரிய அரங்கிலே ஆடிக் காட்டுகிறாள். நடனங்களை எல்லாம் கண்டுகளித்த ரஸிகப் பெருமகன் ஒருவருக்கு அன்றைய நிகழ்ச்சியில் அந்த அம்மையார் கடைசியாக ஆடிய நடனத்தின் பொருள் விளங்கவில்லை. அதனால் நடனம் முடிந்ததும் அவசரம் அவசரமாக அந்த ரசிகர் கிரீன் ரூமுக்குள்ளேயே ஓடுகிறார். அம்மையாரைக் காண்கிறார்.

"அம்மையே! தாங்கள் கடைசியாக ஆடிய அற்புத நடனத்தின் பொருள் என்ன“ என்று மிக்க ஆர்வத்தோடு கேட்கிறார். அதற்கு அந்த அம்மையார் சிரித்துக் கொண்டே, "அவ்வளவு எளிதாக அந்த நடனத்தின் பொருளை வார்த்தைகளால் சொல்லக் கூடும் என்றால், நான் அதை நடனம் ஆடிக் காட்டியிருக்க வேண்டாம்." என்கிறார். ஆம், ஒரு பெரிய உண்மையைத்தான் மிக எளிதாகக் கேட்ட கேள்விக்கு எதிர்க் கேள்வி போட்டு விளக்கி விடுகிறார் பாவ்லோவா. வெறும் வார்த்தைகளிலே நடனத்தின் பொருளை எல்லாம் சொல்லி விடக் கூடும். என்றால் அதை நடனம் ஆடிக் காண்பிப்பானேன்?

அரங்கம், திரைச்சீலை, பக்க வாத்தியம், உடை அணி என்றெல்லாம் சிரமப்பட்டுத் தேடுவானேன்? சொல்லால் விளக்க முடியாததை எல்லாம் நடனம் ஆடிக்காட்டிவிட முடியும் என்றல்லவா சித்தாந்தப்படுத்துகிறாள் பாவ்லோவா! ஆனால் இந்த பாவ்லோவா பிறப்பதற்கு எத்தனையோ கற்ப கோடி காலங்களுக்கு முன்னாலேயே இந்த. - சித்தாந்தத்தை நிலை நிறுத்தியவன்தானே அகில உலக நாயகனான நடன ராஜன். அந்த நடன ராஜன் ஆடிய நடனத்தையே தாண்டவம் என்றனர் கலைஞர்கள்.

தாண்டவம் எப்படிப் பிறந்தது. தட் தட் என்று நிலத்தைத் தட்டி ஆடுவதால் தாண்டவம் என்று ஆயிற்று என்று கூறுவார் உண்டு. நடனத்திற்கு அதிதேவதையான் சிவபெருமான் தன்னுடைய கண நாதர்களில் ஒருவனான தண்டு என்பவன் மூலமாக, தான் ஆடிய ஆட்டங்களை பரத முனிவருக்குக் கற்பிக்க, தண்டுவின் மூலம் கற்பிக்கப்பட்ட இந்த ஆட்டத்திற்கு தாண்டவம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறும் பரதசாஸ்திரம். ஒன்று மட்டும் உண்மை.

இறைவனால் ஆடப்பட்ட ஆட்டமே தாண்டவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. அதனால் ஆடவர் ஆடும் ஆட்டமே தாண்டவம் என்றும் தீர்மானமாகியிருக்கிறது. பின்னர் அந்த ஆட்டத்தையே பெண் மிக லளிதமாக ஆட, அந்த ஆட்டத்தையே லாஸ்யம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். தாண்டவம் ஆடியவர் சிவபெருமான், லாஸ்யம் ஆடியவள் பார்வதி என்றும் இலக்கியங்கள் கூறி வந்திருக்கின்றன.

சொல்லால் விளக்க முடியாது. தாண்டவ லக்ஷணங்களை, தமிழ் நாட்டுச் சிற்பிகள் கல்லால் விளக்க முற்பட்டிருக்கின்றனர். அது காரணமாகவே கல்லிலும் செம்பிலும் பல நடனத் திருக் கோலங்களை நம் முன் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சொல்லால் விளக்க முடியாது என்று

சொன்னவர்கள், எண்ணினவர்களுக்கு எல்லாம் காட்டியிருக்கின்றனர், தமிழ்நாட்டுக் கலைஞர்கள்.

தாண்டவ வடிவங்களில் சிறப்பாயிருப்பது உடல் உறுப்புகளின் அசைவுகளே. அதனையே கரணம் என்கிறோம். இந்த கரன வகைகள் 108 என்று, பரத சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த 108 கரணங்களையே தாண்டவ லக்ஷணமாக கல்லில் பொறித்து வைத்திருக்கிறார்கள், தில்லைத் திருச்சிற்றம்பலவன் கீழக் கோபுர வாயிலிலே. இந்த கோபுரம் கட்டப்பட்டது 13-ம் நூற்றாண்டிலே என்று சரித்திர ஏடுகள் கூறும்.

அதற்கும் முந்நூறு வருஷங்களுக்கு முன்பே, இந்த தாண்டவ வடிவங்களைத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமாகிய தக்ஷிண மேருவின் முதல் தட்டிலே, உள் பக்கத்திலே கல்லில் உருவாக்கி வைக்க மூனைந்திருக்கிறான், அந்த சிவபாத சேகரன் ராஜராஜன், ஆனால் என்ன காரணத்தாலோ, 81 வடிவாங்களே பூர்த்தி செய்யப் பட்டிருக்கின்றன. மற்றவைகளை செதுக்க விரும்பிய கல் எல்லாம் வெறும் கற்களாகவே கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கின்றன.

இன்னும் இந்த நூற்று எட்டு தாண்டவ வடிவங்களில் முக்கியமானவை பன்னிரண்டு. அவையே ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், சிருங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், முனி தாண்டவம், சம்ஹார தாண்டவம், உக்கிர தாண்டவம், பூத தாண்டவம், பிரளய தாண்டவம், புஜங்க தாண்டவம், அத்த தாண்டவம் என்பன என்றும் கூறுவர். இன்னும் திருச்செங்காட்டங் குடியிலே உள்ள உருத்திராபதீஸ்வரர் கோயிலிலே வடக்குப் பிராகாரத்திலே உள்ள ஒரு சிறு மண்டபத்திலே 'நவதாண்டவம்' என்று எழுதி பத்து வடிவங்களை வைத்திருக்கின்றனர்.

அதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவைகளில் பல தாண்டவ வடிவங்களே அல்ல!

இன்னும் தாண்டவ வடிவங்களில் சிறப்பானவை சிவபெருமான் ஆடிய ஆட்டங்களே என்றாலும் அவருடன் சேர்ந்து விநாயகரும், கண்ணனும், சரஸ்வதியும் ஏன் ஞானசம்பந்தருமே ஆடியிருக்கிறார்கள் அந்த வடிவங்களில் சிறப்பான ஒன்பதையே உங்கள் முன் நவதாண்டவம் என்ற பெயரோடு நிறுத்த முன்வருகிறேன். தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் எல்லாம் இருக்கும் வடிவம் ஆனந்தத் தாண்டவ திருஉருவம். அதனைப் பலதடவை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆதலால் அவ்வடிவினை இங்கு திரும்பவும் காட்ட நான் விரும்பவில்லை. அந்த நடராஜன் வடிவங்களிலே மிகவும் சிறப்பான ஒன்று வடஆர்க்காடு மாவட்டத்திலே ஆரணியை அடுத்த காமக் கூரிலே இருக்கிறது. இரண்டு காலையுமே தரையில் ஊன்றி ஆடும் தாண்டவக் கோலம் அது. அதுவே காளிகா தாண்டவம். அது சிறந்ததொரு செப்புப்படிமமாக இருக்கிறது.

இறைவன் ஆடிய ஆட்டங்களாலே தாளொன்றால் பாதாளம் ஊடுருலி, மற்றைத் தாளொன்றால் அண்டம் கடந்துருவி ஆடும் ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம். இந்தத் தாண்டவம் ஆடியது திருவாலங்காட்டிலே என்பர். தில்லையிலுள்ள இந்த ஊர்த்துவ தாண்டவர் ஒரு தனிக் கோயிலிலேயே இருக்கிறார். என்றாலும் இந்த வடிவம் சிறப்பாயிருப்பது திருச்செங்காட்டங்குடியிலே தான்.

அங்கு மிக்க கலை அழகோடு இந்த ஊர்த்துவ தாண்டவ வடிவினை சிறப்பாய் அமைந்திருக்கிறான் கல்லிலே. மார்க்கண்டனுக்காக, காலனைக் காலால் உதைத்து ஆடிய ஆட்டமே கால சம்ஹார தாண்டவம். இந்த வடிவம் சிறப்பாயிருப்பது திருக்கடையூரிலே, என்றாலும் அங்கேயுள்ள மூர்த்தியை தங்க அணிகளாலும், பட்டுத் துணிகளாலும் இன்னும் மாலைகளாலும் சிலைகளாலும் எப்போதும் பொதிந்தே வைத்திருப்பர்.

ஆதலால் தாண்டவ வடிவத்தின் அழகு முழுவதையும் கண்கொண்டு காணுதல் இயலாது. ஆனால் திருவீழிமிழலையிலே உள்ள நேத்திரார்பணேஸ்வரர் கோயிலில் ஓர் இருள் படிந்த பொந்திலே இந்த தாண்டவர் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார். இவருடைய தாண்டவ வடிவங்களில் எண்ணற்றவைகளைக் காட்டக் கூடும் என்றாலும் இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் காட்டுவதோடு இப்போது திருப்தி அடைகின்றேன்.

அவர்தான் திரிபுரத் தாண்டவர். சிரித்துப்புரம் எரித்த சேவகன் வடிவம் கல்லிலும் செம்பிலும் பல இடங்களில் உருவாகியிருந்தாலும், அழகான வடிவமாக அமைத் திருப்பது கும்பகோணத்திற்கு கிழக்கே 12 மைல் தூரத்திலே உள்ள கோனேரி ராஜபுரத்திலேதான். அங்குள்ள ஆனந்த தாண்டவர் அழகானவர், பிரபலமானவர், அவரையும் விஞ்சும் அழகோடு அன்னை திரிபுர சுந்தரியையும் உடன் அழைத்துக் கொண்டு நம்முன் வருகிறார் இந்தத் திரிபுர தாண்டவர்.

இந்த வென்றாடு திருத்தாதையும், வியந்து கை துடி கெட்ட, நின்றாடும் மழகளிறாக விளங்குபவர் தாண்டவ விநாயகர். இவர் இருக்கிறார், கும்ப கோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலே. நல்ல காத்திரமான வடிவில் இவரைப் போல எண்ணற்ற தாண்டவ விநாயகர் ஓர் இஞ்சு உயரம் முதல் மூன்றடி வரை பல கோணங்களில் உருவாகியிருக்கிறார் அங்கே. அக்கோயிலை அமைத்த சிற்பி இத்தாண்டவ விநாயகரையே தன் முத்திரையாக வைத்திருக்கிறான்.

இப்படி, தந்தையும் மகனும் தான் தாண்டவம் ஆடுகிறார்கள் என்றில்லை. பரந்தாமனின் அவதாரமான கண்ணனும் பல தாண்டவ வடிவங்களிலே நமக்கு காட்சி தருகிறான். அவைகளில் சிறப்பானவை காளிங்க தாண்டவம், நவநீத தாண்டலம் என்பவையே. சோழ வளநாட்டிலே திருச் சேறையிலே ஒரு காளிங்க தாண்டவர் மடுவும் காளிங்கனும் இல்லாமலே தாண்டவம் ஆடும் திருக்கோலம் அது.

வடஆர்க்காடு மாவட்டத்திலே - பள்ளிகொண்டான் என்னும் தலத்திலே வெண்ணெய் கிடைத்த மகிழ்ச்சியிலே தாண்டவம் ஆடும் நவநீத தாண்டவன் வடிவம் சிறப்பாயிருக்கிறது.

இப்படி சிவன், விஷ்ணு, விநாயகர் எல்லாம் தாண்டவம் ஆடும்போது, எப்போதுமே இன்னிசை வீணை ஏந்தி நிற்கும் ஏழிசைவல்லபியான சரஸ்வதியால் சும்மா இருக்க முடியுமா. அவளுமே தாண்டவம் ஆட முனைந்து விடுகிறாள். இந்த தாண்டவ சரஸ்வதியைத் தமிழ் நாட்டுக் கோயில்களில் நான் காணவில்லை. இவளைக் காண ஒரு நடையே நடந்தேன். மைசூர் ராஜ்யத்திலே உள்ள ஹொய்சலர் கோயிலான பேலூர் சொன்னக் கேசவர் கோயிலிலே நவரங்க மண்டபத்திலே இவள் நடனமாடிக் கொண்டிருக்கிறாள், வீணை ஏந்திய கரத்தோடு தாளம் தவறாமல், இவளது தாண்டவக் கோலம் மிக்க அழகு வாய்ந்தது. நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்தது.

இப்படித் தேவ தேவியர் எல்லாம் தாண்டவம் ஆடும்போது, பக்தர்களில் எல்லாம் சிறந்த பக்த மணியான சீர்காழித் திருஞான சம்பந்தரும், ஞானப்பால் உண்ட மகிழ்ச்சியிலே தாண்டவமாடிக் கொண்டே கிளம்பி விடுகிறார். அந்தத் தாண்டவக் கோலத்தையுமே பார்க்கிறீர்கள் பக்கத்திலே. இவரே தாண்டவ சம்பந்தர். இவர் இருப்பது நெல்லை சாலிவாடீஸ்வரர் கோயிலிலே.

இந்த நவதாண்டவ வடிவங்களைக் கண்ட மகிழ்ச்சியிலே எனக்குக் கூட தாண்டவம் ஆடும் ஆசை பிறக்கிறது. நீங்களும் தாண்டவம் ஆடிக் கொண்டே கிளம்பினால் அது அதிசயமில்லைதான். ஆம், ஹாவ்லக் எல்விஸ் என்பவன், "வாழ்வே ஒரு தாண்டவம்தான்! மரங்களும், மாக்களும், மக்களும் தாண்டவம் ஆடியே உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரிந்திருக்கிறார்கள்“ - என்று தானே கூறுகிறான்?

19. ஆலயங்கள் ஏனையா?

சமீப காலத்தில் ஒரு பொருளாதாரப் பேராசிரியரைப் பார்த்தேன். நாட்டிலே பண வீக்கம் குறைவதற்கெல்லாம் பெரிய பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார் அவர். அதே சமயத்தில் பலரிடத்தே காணுகின்ற வறுமையையும் அவர் மறந்தாரில்லை. 'எவ்வளவு பொருள், கோயில் என்றும் கூத்து என்றும் தேவரென்றும், திருவிழா என்றும் விரயமாகிறது. இத்தனை பொருளையும் வைத்து ஒரு கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தினால் மக்களுக்கு எவ்வளவு பலன் தரும்! என்றெல்லாம் விளக்கினார். கடவுளைக் கண்டு தொழுவதற்கு கோயில் என்ற இடம் வேண்டுமா? என்ற பெரிய கேள்வியையே கிளப்பினார்.

கீழான மக்களே கடவுளைத் தண்ணீரில் காண்கிறார்கள் அறிஞர்களோ வானவீதிகளில் கடவுளைக் காண்பார்கள்

கல்லினும், மண்ணிலும், மரத்திலும் கடவுளைக் காண்பவர்கள் அறிவிலிகளே தன் உள்ளத்தின் உள்ளேயே கடவுளைக் காண்பவன் தான் மனிதன்

என்ற வேத உரையைக் கூட மேற்கோள் காட்டினார். அவருடைய எண்ணம் கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். இட நெருக்கடியும் தீரும். மக்கள் வாழ்வதற்கு நல்ல வசதியாகவும் இருக்கும். கல்லையும் கட்டையையும் விலைக்கு விற்றாலோ ஏராளமான பணம் சேரும். பொருளாதார நெருக்கடி கூடக் கொஞ்சம் குறையும் என்பது தான். இப்படியெல்லாம் திட்டங்கள் வகுத்து கூறும், அவருடைய திறமையான பேச்சைக் கேட்கக் அவர் சொல்லுவதெல்லாம் சரிதானே என்று கூடப் பட்டது எனக்கு.

ஆலயங்கள் ஏனையா?

அபிஷேகங்கள் ஏனையா?

கோலங்கொடிகள் ஏனையா?

கொட்டு முழக்கம் ஏனையா?

பாலும் பழமும் வைத்து நிதம்

பணிந்து நிற்பதேனையா?

சீலம் பேணும் உள்ளத்தைத்

தெய்வம் தேடி வராதோ?

என்றெல்லாம் சிந்திக்க விரைந்தது. என் மனம். உண்மை தானே. எதற்காக இத்தனை கோயில்களைக் கட்டினார்கள் நம் முன்னவர்கள்? எதற்காக இவ்வளவு பொருள்களை விரயம் செய்தார்கள்? கடவுள், கோயில் என்ற இடத்திற்குள் மட்டுந்தானா ஒளிந்து கொண்டிருக்கிறான்? பார்க்கும் இடங்களில் எல்லாம் அவள் பசிய நிறம் காண வில்லையா? கேட்கும் ஒலியிலெல்லாம் அவன் கீதம் இசைக்க வில்லையா? காக்கைச் சிறகினில் அவன் கரிய நிறத்தைப் பார்க்கிறோம். தீக்குள் விரலை வைத்தாலும் அவனைத் தீண்டும் இன்பம் அடைகிறோமே.

இப்படி இருக்க, எங்கும் நிறைந்துள்ள ஏகனுக்கென்று ஒரு தனி இடம் இருப்பானேன்? கடவுள் ஏதோ வானில் இருக்கிறார் என்றோ அல்லது தேவ தேவனாக இருக்கிறான் என்றோ எண்ணிக் கொள்பவர்கள் எண்ணிக் கொள்ளட்டும்.

அவன் நம் நெஞ்சத்துக்குள்ளே இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இப்படி நம் உள்ளத்தின் உள்ளேயே இருக்கும் இறைவனுக்கு கோயில் என்ற ஓர் இடம் எதற்கு? கும்பிடுவதற்கு ஒரு குறியீடு எதற்கு? இப்படி எல்லாம் கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தானே வேண்டும். நாம் வீட்டின் தலை வாயிலில் நின்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பார்க்கிறோம் கொஞ்ச நேரம் கழித்து யார் யார் போனார்கள் என்று கேட்டால் விழிக்கிறோம்.

ஆனால் அதே சமயத்தில் வீட்டிற்குள் நின்று ஜன்னல் வழியாக தெருவில் செல்பவர்களைக் காணுகிறோம் . எவ்வளவு நேரம் கழித்தாலும் யார் யார் சென்றார்கள் என்று சொல்ல முடிகிறது. இதற்கு காரணம் என்ன? பலர் நம் கண்முன் வருகிற போது ஒருவருமே நிலைத்து நிற்பதில்லை.

ஆனால் ஜன்னல் வழியாகப் பார்க்கிற பார்வையில் அளவு ஒடுங்குகிறது. ஜன்னல் சட்டத்திற்குள் வரும்பர்கள் மாத்திரமே கவனத்தைக் கவருகிறார்கள். மற்றவர்கள் மறைந்து விடுகிறார்கள். இதுபோலத் தான் குடும்ப வேலை முதலிய தொல்லைகள் இருக்கும் போது இந்தப் பரந்த உலகில் எந்த இடத்திலும் மனம் ஒன்றி நிற்பதில்லை. எங்கெங்கோ ஓடுகிறது.

ஆனால் கடவுளை வந்தித்து வணங்க ஒரு இடம் என்று குறிப்பிட்டு விட்டால் அங்கு செல்லும் போதெல்லாம் ஜன்னல் வழியாய் தெருவைப் பார்க்கிற மாதிரி மனம் ஒன்றில் நிலைக்கிறது. கடவுளிடத்து தங்குகிறது. ஆதலால்தான் கோயில் என்று ஓர் இடம் வேண்டியிருக்கிறது. இறைவனை நினைக்க, தொழ எல்லாம். இப்போது விளங்குகிறதா. எதற்காக ஆலயங்கள் எழுந்தன என்று. அங்கு மூர்த்திகளும் ஏன் ஸ்தாபிக்கப் பெற்றார்க ளென்று.

சரி, ஏதோ இறைவனைக் கண்டு தொழ ஓர் இடம் வேண்டும். ஆனால் அதற்காக இத்தனை பிரம்மாண்டமான மதில்கள் வேண்டுமா? கோபுரங்கள் வேண்டுமா? மண்டபங்கள் வேண்டுமா? விமானங்கள் வேண்டுமா? எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு பெரியவன்! அவன் கோமகனுக்கெல்லாம் கோமகன் அல்லவா? அக்கோமகனைக் குடியிருத்த அவன் தகுதிக் கேற்ற முறையில் அவன் இல்லம் அமைய வேண்டுமல்லவா? அது காரணமாகவே வானளாவ வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் கோயிலை. பழந்தமிழ் நாட்டில் இந்தக் கோயில்கள் ஒப்பற்ற நிலையங்களாக விளக்கியிருக்கின்றன.

கோயில்கள் எல்லாம் முதல் முதலில் சமயச் சார்புடையவைகளால் வேதான் உருவாகியிருக்கின்றன. கோயில் கட்டுவது ஒரு சிறந்த தருமம், கோயில் நிர்மாணம் சப்தசந்தானத்தில் ஒன்று என்றெல்லாம் மக்கள் நம்பியிருக்கிறார்கள். சாஸ்திரங்களை வேறே எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படிச் சமயச் சார்பு பற்றி எழுந்த கோயில்களில் பழஞ் சரித்திரத்தைப் பார்த்தால், பல நூற்றாண்டுகளாக மக்களுடைய சமுதாய, பொருளாதார கலை வாழ்விற்கெல்லாம் அவை அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கின்றன. மன்னர்கள் மாறலாம். ஆட்சிகள் மாறலாம், நாடே நிலை பிறழலாம். அப்போதும் கூட மக்களின் நல்வாழ்விற்கு இந்தக் கோயில்கள் ஒரு நிலைக்களனாக நின்றிருக்கின்றன. மக்கள் தங்கள் தங்கள் வீட்டையும் தங்களை ஆளும் அரசனது கோட்டையையும் விட, கோயிலே சிறந்த பாதுகாப்புத்தளம் என்று நம்பியிருந் திருக்கின்றனர். இதையெல்லாம் நாட்டின் சரித்திரம் நன்கு எடுத்துக் கூறுகிறது.

நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கியஸ்தானம். வகித்திருக்கின்றன. எந்த ஊரிலும், ஊருக்கு நடுவில்தான் கோயில். அதைச் சுற்றிச் சுற்றித்தான் வீதிகள் மதுரையைப் பாருங்கள் நகர நிர்மாணத்திற்கே சிறந்த எடுத்துக் காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் புகழுகிறார்கள். ஒரு குத்துக்கல்லை நாட்டியா அதைச் சுற்றி வீதி அமைப்பார்கள்? நகரத்திற்கே நடுநாயகமாய் எல்லா மக்களையும் தன்பால் இழுக்கவும், அங்கிருந்தே பல இடங்களுக்கு அனுப்பவும் உதவும் ஒரு ஸ்தாபனம் கம்பீரமாகத்தானே எழுந்து நிற்க வேண்டும்.

நான்கு திசைகளில் வாயில்கள் அமைத்து, வாயில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்கள் எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடத்தையே அல்லவா உருவாக்கி விடுகிறார்கள். இந்தக் கோயில் நிர்மாணத்தில்.

கோயில்கள் எழுந்த உடனே அதைச் சுற்றி வீதிகள். எழுந்திருக்கின்ற வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக் கின்றன. வியாபாரம் வலுக்கவலுக்க நாட்டின் வளமும் பெருகியிருக்கிறது. பல நாட்டு வியாபாரிகள் தங்கள். தங்கள் நாட்டுப் பண்டங்களை கொண்டு வந்து கொடுத்து, தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப் போக வந்திருக்கிறார்கள். இப்படி வருகின்றவர்களுக்கு இன்ன காலத்தில் இன்ன பொருள் இங்கே கிடைக்கும், இந்தச் சமயத்தில் இந்த இடத்தில் இவர்கள் எல்லாம் கூடுவார்கள் என்று தெரிந்து கொண்டால் தானே, இந்தப் பண்ட மாற்றுக்கு வசதியாக இருக்கும். இப்படித் தானே சந்தைகள், திருவிழாக்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. கோயிலை ஒட்டி உத்சவங்களும் இதுகாரணமாகத்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு உத்சவமும் ஒவ்வொரு பெரிய சந்தைதான், கூட்டுறவு 'கான் பரன்ஸ்' தான்.

பல நாட்டு மக்கள் இப்படி வந்து கூடக் கூட அவர்கள் தங்க சத்திரங்கள் எழுந்திருக்கின்றன. அவர்களுக்கு உணவளிக்க அன்ன தானங்கள் நடத்திருக்கின்றன. கோயிலை ஒட்டிக் குளங்களும், குளங்களை ஓட்டி தந்த வனங்களும் தோன்றியிருக்கின்றன. இதை யெல்லாம் நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாய் நடக்க பணத்தையும் பொருள்களையும், ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். நிலங்களை மான்யமாக எழுதி வைத்திருக்கிறார்கள். தேவதானங்களும், தேவ போகங்களும் நிலை பெற்றிருக்கின்றன. பல இடங்களிலிருந்து வந்தவர்களும் பொன்னையும் பொருளையும் காணிக்கையாக கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பண்ட மாற்று கோயிலைச் சுற்றிச் சுற்றியே நடந்து வந்திருக்கிறது.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கின்றது. கைத்தொழில் பெருகியிருக்கின்றது. கட்டிட நிர்மாணத்தில் கை தேர்ந்த கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள், வல்லுநர்கள், கலைஞர்கள், வர்ண வேலைக்காரர்களுக்கெல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன, இதனால் பரம்பரை வேலைக்காரர்கள் பெருகியிருக்கிறார்கள். இன்னும் கோயில்கள் கலாக்ஷேத்திரங்களாக, கலைப் பண்ணைகளாக வளர்ந்திருக்கின்றன, இசையும் நடனமும், கோயில்களின் நித்யோஸ் தவத்திலேயே பங்கு பெற்றிருக்கின்றன.

கல்விச்சாலைகளையும், பொருட்காட்சி சாலைகளையும் தன்னுள்ளேயே வைத்திருக்கின்றன இந்தக் கோயில்கள். வியாக்யான மண்டபம், வியாகரண மண்டடம், சரஸ்வதி பண்டாரங்கள் எல்லாம் இந்த கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

தென்னாற்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும் செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக் கூடலிலும் பெரிய பெரிய கலாசாலைகளே நடத்திருக்கின்றன. எண்ணாயிரம் கோவிலுக்கு முன்னூறு ஏக்கர் மான்ய நிலம் இருக்கிறது. எல்லாம் அங்கு நடந்த சமஸ்கிருத பாடசாலையை நடத்தத்தான், 340 மாணவர்களுக்கு, தங்க இடமும் உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 340 மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க பதினைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி 4 1/2 சேர் படி நெல் வீதம் கணக்கிட்டு வழங்கியிருக்கிறார்கள். மற்றும் செலவுகளுக்கென வருஷத்திற்கு ஒரு முறை, அரைக் களஞ்சிப் பொன் வேறே வழங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் பொது மக்கள் கொடுத்த இனாம்களிலிருந்தே தான் நடந்து வந்திருக்கிறது. திருமுக்கூடலில் இருந்த பள்ளி இத்தனை சிறப்பு வாய்ந்தல்லாவிட்டாலும் 60 மக்கள் படித்துப் பலனடைய உதவியாயிருந்திருக்கிறது. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், கோயிலைச் சேர்ந்த மற்ற பணிகளையும் செய்து ஊதியம் பெற்றிருக்கின்றனர். இப்படியே பல இடங்களில் பல கல்விச் சாலைகள் கோயில்களின் ஆதரவிலேயே நடந்து வந்திருக்கின்றன.

மக்களது அறிவு விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே உடல் நலம் கருதி, மருத்துவ சாலைகளும், கோயில்களுக்குள்ளேயே இருந்திருக்கின்றன. 11ம் நூற்றாண்டில் உள்ள சோழக் கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்தவர், ஒரு ரண வைத்தியர், இரண்டு தாதியர் இன்னும் இதர சிப்பந்திகள், எல்லோரையும் வைத்து மருத்துவசாலை ஒன்று நடத்தி வந்திருக்கிறது ஒரு கோயில். மருந்துகளும் மூலிகைகளும் கூட ஏராளமாக அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதோடு, கால்நடை மருத்துவத்திற்கு கூட மருத்துவ சாலைகள் இக்கோயில்களில் இருந்திருக்கின்றன என்றால் கேட்பானேன்.

கோயிலை ஒட்டி எழுந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானிகர்கள், காரியஸ்தர்களும் இருந்திருக்கின்றனர். பொருளைப் பாதுகாக்க பண்டாரிகள், பூஜைகள் எல்லாம் சரிவர நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், எல்லோருக்கும் மேலே அதிகார புருஷர்கள், அவர்களோடு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள், கோயில் நிர்வாக முறையை ஒட்டியே நாட்டின் நிர்வாகமும், அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி மக்களை எல்லாம் சமுதாய நிலையிலும் கலை வாழ்விலும் பொருளாதாரத் துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இந்தக் கோயில்கள் உருவாகியிருக் கின்றன, ஆலயங்கள் ஏனையா? என்று பொருளாதாரப் பேராசிரியர் கேட்ட கேள்விக்கு விடை இப்போது தெரிகிறதல்லவா?

என்னையா இதெல்லாம். இன்றையக் கோயில்களில் நடக்கக் காணோமே, அதைப் பற்றி என்ன சொல்லுகிறீர் என்று. என்னைக் கேட்காதீர்கள். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இன்றைய நாட்டின் நிர்வாகிகள், நானல்ல.